சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்

Viduthalai
3 Min Read

சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும்  ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும்.

அரசியல் தொண்டு  என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும், அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்வோம்.  நம்மைப் பொறுத்தவரை அரசியலின் பேரால் கூடுமான வரை  உழைத்தாகிவிட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமரமக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல்  வேறில்லை. அதை விட்டுத் தொலைத்து சமுகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி, அதற்கென உழைத்தாலும் அடிக்கடி  சறுக்கி அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு  விடுகிறது. இது சகவாச தோஷமே அல்லாமல் வேறல்ல.

இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்துவிட்டு மக்களுக்கும்  அதிலிருக்கும் மூடநம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமுகத் தொண்டில் சேர்த்து எல்லா மக்களையும்  சமுகத் தொண்டையே பிரதானமாய்க் கருதும்படி செய்வதே முக்கியத் தொண்டாக வைத்துக்கொள்வதே நலமெனத் தோன்றுகிறது. அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு  இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும் தேசத்தையும், சமுகத்தையும் காட்டிக்கொடுக்காமலும்  வாழும்படி செய்யவே முடியாது. இது நமது அனுபோகத்திற்குச் சந்தேகமறத் தோன்றிவிட்டது. சமுகத் தொண்டில் ஈடுபட விருப்பமுள்ளவர்களிடம் அரசி யலில் அதைக் கண்டிப்பதைத் தவிர மற்றபடி தான் நேரில் கலப்பதில்லை என்பதாக உறுதி பெற்றே அவர்களை சேர்த்துக் கொள்ளும் நிபந்தனை ஏற்படுத்தினால் தான் சமுகத்தொண்டு இயக்கம் நடை பெறவும் வெற்றி பெறவும் முடியுமென்றே இப்போது நினைக்க வேண்டி யிருக்கிறது.

பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய  நலவுரிமைச் சங்க இயக்கம் கூட இரண்டு பாகமாய் பிரிக்கப்பட்டால் நன்மையென்றே கருதுகிறோம். தென்இந்திய நலவுரிமைச் சங்கம் என்பதாக உள்ளதில் அரசியல்  கலந்த  சமுகஇயல்,  தனி சமுக இயல் ஆகிய  இரண்டு பேருக்கும் இடமுள்ளதாக்கித் தனி சமுக இயல்காரரும்   அதனுள்  ஓர் உள் பிரிவாக  ஒன்றை ஏற்படுத்துவது நல மென்றே தோன்றுகிறது. ஏனெனில், அரசியல் கலந்தால் எப்பேர்ப் பட்டவர்களும்  நாணயக்குறை உள்ளவர்களாகப் போய்விடுகிறார்கள்.

மகாத்மா இயக்கம் கூட எவ்வளவு புனிதமானதாகக் கருதப்பட்டும்  அரசியலில் பகிஷ்காரத்தை மாற்றி சட்டசபை உள்நுழைவை அது என்று ஏற்றதோ அன்றே விதிவிலக்கு இல்லாமல் எல்லோரிடமும் நாணயக்குறைவு தோன்ற வழி ஏற்பட்டு விட்டது. ஆதலால், அதைப்பற்றி இனி சந்தேகப்பட வேண்டியதில்லை, தனி சமுகத் தொண்டில்  ஈடுபட்டவர்கள்  தங்களுக்கு இஷ்டமான ஓர் அரசியல் காரரை ஆதரிக்கலாம், ஆதரிக்க சிபாரிசு செய்யலாம் என்பதாக ஒரு கொள்கை மாத்திரம் வைத்துக் கொள்வதானால். (அதுவும் அவசியமானால்)அதாவது நமது சமுகத்தொண்டுக்கு அரசியலால் தடை ஏற்படாமலிருக்கும்  அளவுக்கு அனுகூலம் கிடைக்கும்  போல் இருந்தால் மாத்திரம் வைத்துக்கொள்ளலாம். நமது அபிப்பிராயத்தில் அந்த அளவுகூட மனிதனை அயோக்கியனாக்கி விடும் என்றே பயப்பட வேண்டியிருக்கிறது.

இந்த அடுத்துவரும் ஆகஸ்ட் மாதத்திய சட்டசபைக் கூட்டம் முடிந்தவுடன்  வடஆற்காடு  ஜில்லாவில் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார்  ஜில்லா மகாநாட்டில்  இதைப்பற்றி தொண்டர்கள் ஒன்றுகூடி யோசிக்க வேண்டும் என்றே நினைக் கிறோம், அதாவது  எந்த விதத்திலாவது  சர்க்கார் சம்பந்தமான  உத்தியோகம், கவுரவ உத்தியோகம், பட்டம் பதவி முதலியவைகள் எதுவும் இல்லாதவர்களும் இனி பெற்றுக்கொள்ளுவதில்லை என்கிற உறுதி உள்ளவர்கள் மட்டுமடங்கிய தாகவே ஓர் அமைப்பை  ஏற்படுத்தவேண்டும் என்பதே தான். அதன்படி இல்லா மல் என்னதான் வேலைசெய்தாலும் பயன்பெற முடியாது. தாடி நெருப்பு பற்றி எரிகிற போது அதில் சுருட்டு பற்ற வைக்க நெருப்பு கேட்பதுபோல் நமது மக்களின் நிலை தாழ்ந்து கிடப்பதையும், சிறுமைப்படுவதையும், அயோக்கியர்களால் கொடுமைப்படுத்துவதையும்  பற்றி கொஞ்சமும் கவலை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதோடு, மற்றவர்கள் யாராவது கவலை எடுத்துக் கொண்டாலும் அதையும் கெடுத்து அதன் பலனையும் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிற மக்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும் என்பது நமக்குத் தோன்றவில்லை.

ஆகையால் உண்மைத் தொண்டர்கள் இது விஷயத்தில் போதிய கவலை எடுத்து யோசித்து, இது சமயம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது மிகவும் அவசியம் என்பதை இப்போதே  தெரியப்படுத்திக் கொள்கிறோம், இதில் சேர வருகிறவர்கள் கூடுமானவரை கஷ்டம் அனுபவிக்க நேர்ந் தால்  அனுபவிக்கவும், தியாகம் செய்யவும், தன்னலத்தை அடியோடு மறுக்கவும் தயாராயிருக்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு யோசிக்கவேண்டும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 31-07-1927

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *