நல்லொழுக்கமும், சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறமையையும் ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்

Viduthalai
1 Min Read

அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானம் தாமதமடைந்தது. விமானம் எப்போது கிளம்பும் என்று தெரியாததால் முக்கிய நிகழ்விற்குச் செல்லவேண்டிய பலர் பெரும் பதட்டத்தில் இருந்தனர். மேலும் சிலர் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டனர்.

இந்த கொந்தளிப்பான நிலையில் விமானத்தில் பயணத்திற்காக அவர்களோடு அமர்ந்திருத்த சிறுமி ஒருவர் பாடல் பாடி பயணிகளை மகிழ்விக்க முடிவுசெய்தார். விமானத்திலுள்ள உட்புறத் தொடர்புச் சாதனம்  வாயிலாக மோனா பாடலை அச்சிறுமி பாடினார். அதனைக் காட்சிப் பதிவு செய்த எடுத்த பயணிகள் சமூக ஊடகத்தில் பகிர்ந்தனர்.

“சிறுமி பாடியதால் விமானம் தாமதமானதை நான் மறந்துவிட்டேன்,” என்று ஒருவர் கூறினார். “சுருதி, தாளம் தவறாமல் சிறுமி பாடினார்,” என்று வேறொரு பயணி பாராட்டினார்.  விமானம் தாமதமானதற்கு டெல்ட்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. பயணிகளுக்காகப் பாடிய சிறுமியை நிறுவனம் பாராட்டியது.

விமானம் புறப்பட்டு இலக்கை அடைந்த பிறகு டெல்டா விமான நிறுவனம் சார்பில் அச்சிறுமியை பாராட்டினர்.

இது தொடர்பாக சிறுமி கூறும் போது, அவரது ஆசிரியர் நல்லொழுக்கத்தையும் சிக்கலான சூழலில் நிலைமையை எப்படி கையாள்வது போன்றவற்றை கற்றுக்கொடுத்ததாகவும். அதன்படி தான் பலர் மிகவும் கோபமாகவும் பதட்டத்தில் இருக்கும் போது அந்த நிலையை சமாளித்து அனைவரையும்  அமைதிப்படுத்த பாடல்களைப் பாட ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.

“அது மிகவும் நன்றாக பலன் தந்தது கோபப்பட்டுகொண்டு இருந்த பலர் நான் பாடப் பாட கைதட்டி தாளம் போட ஆரம்பித்தார்கள். பதட்டத்துடன் இருந்தவர்கள் என்னோடு சேர்ந்து பாடத்துவங்கிவிட்டனர்” என்று கூறினார். இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகள் கூறும் போது, “விமான நிலையத்தில் புறப்படும் போது ஓடுபாதை நெரிசல் காரணமாக எங்கள் விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதமாகிவிட்டது. நிலைமையை சிறுமி அழகாக கையாண்டார்” என்று டெல்டா நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *