இன்று (நவ.26) ஜாதி ஒழிப்பு நாள் – கருஞ்சட்டைத் தீர, வீர மறவர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது – அதற்கென்று ஓர் அரசமைப்புச் சட்டமும் உருவாக்கப்பட்டது.
இந்த அரசமைப்புச் சட்டம் அனைவரும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்றபடி உண்மையாகவே மூச்சுக் காற்றை சுவாசிக்க விட்டதா?
அதைத்தான் தந்தை பெரியார் கேட்டார். ‘‘சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?”
தந்தை பெரியார் விடுத்த இந்த வினாவுக்கு இதுவரை பதில் உண்டா?
ஆனாலும், ஆண்டுதோறும் ‘‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே” என்று பள்ளுப் பாடுகிறோம் – மிட்டாய் வழங்குகிறோம்.
தந்தை பெரியார் இயக்கத்துக்கு வகுத்துத் தந்த இரு விழுமிய கொள்கைகள் – ஒன்று ஜாதி ஒழிப்பு; மற் றொன்று பெண்ணடிமை ஒழிப்பு!
இந்த இரண்டையும் ஒழிக்கும் போராட்டத்தில் கடவுள் குறுக்கே வரும், மதம் தன் கோர முகத்தைக் காட்டும். சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், வேதங் களும், இதிகாசங்களும், புராணங்களும் குறுக்கே மலை போல் நிற்கும் – இன்னும் சொல்லப்போனால், ‘சுதந்திர’ இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும் சமர் புரிய வரும்.
2,500 ஆண்டுகளுக்குமுன் கவுதம புத்தர் போராடி னார். வருணாசிரமம், ஸநாதனங்களுக்கு எதிராக அறவழிப் பணிகளை மேற்கொண்டார்.
பார்ப்பனிய, ஸநாதன, வருணாசிரம பாம்புகள் பொந்துக்குள் புகுந்தன.
இடையிடையே தலையைத் தூக்கின. அரசர்கள் மாறி மாறி வந்தார்கள். அவர்களின் ராஜகுருக்களாக இருந்த பார்ப்பனர்கள் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அந்த ஜாதீய, வருணாசிரமப் பாம்புக்குப் பால் ஊற்றி வளர்த்தனர்.
கடைசியாக கவுதம புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கி சுவாகா செய்துவிட்டனர்.
தங்களின் ஊடுருவல் கலை‘மூலம்’ பவுத்தத்தை இரு கூறாக்கி, மார்க்கத்தை மதமாக்கினர்.
எந்த நோயை ஒழிக்கப் புத்தம் இந்த நாட்டில் பிறந் ததோ, அதை இந்நாட்டிலிருந்தே வெளிநாட்டுக்குப் பத்திர மாக விரட்டியடித்து விட்டனர்.
‘‘புத்தி உடையவனே புத்தன்” என்றார் தந்தை பெரியார் – ஆனால், புத்தரையே – ‘‘புத்தப் பகவான்” ஆக்கிவிட்டனர்.
2500 ஆண்டுகளுக்குப்பின் பகுத்தறிவுப் பகலவனாக தந்தை பெரியார் தோன்றினார். ஜாதி ஒழிப்புக்கு முட்டுக் கட்டை போடும் ஒவ்வொன்றுக்கும் முகம் கொடுத்து தூள் தூளாக்கினார்.
கடவுள் சிலைகளை உடைத்தார்; படங்களை எரித்தார் – மக்கள் மத்தியில் பார்ப்பனர்களின் ஆதாரங்களைக் கொண்டே அவற்றின் ஆபாசங்களை, ஒழுக்கக் கேடுகளை, முரண்பாடுகளை, மூடநம்பிக்கைகளை அக்குவேறு ஆணி வேறாக அலசினார்.
கல்லடிகள், செருப்படிகள், அழுகிய முட்டைகள் வீச்சு, பாம்புகள், பன்றிகள், கழுதைகளை, காளைகளைக் கூட்டத் துக்குள் விரட்டி விட்டு மக்களை மருண்டோட செய்தனர்.
எந்த நியாயமான உரிமைகளைப் பெறுவதாக இருந் தாலும், அதற்குரிய கஷ்ட நஷ்டங்கள் என்னும் விலை யைக் கொடுக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.
எதிர்த்தவர்கள் பிற்காலத்தில் இன்முகம் காட்டி வர வேற்றதையும் கண்டார். ஆண்டு முழுவதும் அய்யாவின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடினர். எடைக்கு எடை வெள்ளி நாணயம் முதல் தாங்கள் விரும்பிய பொருள்களை எல்லாம் வழங்கி மகிழ்ந்தனர்.
பெயருக்குப் பின்னால் இன்றைக்கு ஜாதிப் பட்டம் போடுவதற்கு வெட்கப்படுகிறார்கள் என்றால் அதற்கான மூலகர்த்தா தந்தை பெரியார்தானே!
ஆனாலும், அரசமைப்புச் சட்டத்தில் இன்னும் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகள் இருக்கின்றனவே – இதனை எப்படி அனுமதிக்க முடியும்? ‘‘மானமும், அறிவும் அல்லவா மனிதர்க்கு அழகு” என்று எண்ணிய தந்தை பெரியார் அவர்கள். அதற்கென்றே தஞ்சையில் திராவிடர் கழக ஸ்பெஷல் மாநாட்டைக் கூட்டினார் (3.11.1957).
இலட்சோபலட்ச மக்கள் கொட்டும் மழையிலும் கூடினர். அதில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார்.
‘‘ஜாதி ஒழிய, தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தை எரித்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1957 நவம்பர் 26 ஆம் தேதி, அன்று மாலையில், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிட ராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது” (‘விடுதலை’ 5.11.1957) என்ற இந்தியாவையே குலுங்க வைத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
15 நாட்கள் அரசுக்கு வாய்தா கொடுத்தும் இந்திய அரசு செவிமடுக்கவில்லை. அதற்கு மாறாக சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு காலம்வரை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று சென்னை மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா (Prevention of Insult to National Honour -1957) என்று பெயரிடப்பட்டது. நவம்பர் 11 இல் காரசாரமாக விவாதிக் கப்பட்டது. சட்டத்தைக் கொளுத்துவோரை நாடு கடத்த வேண்டும் என்று கோரத்தாண்டவம் ஆடியோரும் உண்டு.
(சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று அரசமைப்புச் சட்டத்திலேயே இல்லை – அப்படி ஒரு போராட்டத்தை அறிவித்து ஆட்சியாளர்களை, சட்ட நிபுணர்களை அதிரச் செய்தவர் தந்தை பெரியார்).
‘‘சட்டத்தைக் கொளுத்தப் போகிறார் என்றதும், ஆத் திரப்படும் உறுப்பினர்களே, எதற்காக அந்தப் போராட் டத்தை பெரியார் நடத்துகிறார் என்பதை யோசித்தீர்களா?” என்று எதிர்க்கட்சியாக இருந்த அறிஞர் அண்ணா எழுப் பிய கேள்விக்கு விடை இல்லை.
ஆனாலும், சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதைப்பற்றி சற்றும் கவலைப்படவில்லை தந்தை பெரியார்.
‘‘மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ பயந்து லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டிய தில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டதாகப் பேர் வாங்காதீர்கள்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.”
– ஈ.வெ.ரா.
என்று அறிக்கை வெளியிட்டார்.
போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை’யில் குவிந்துகொண்டே இருந்தது. இப்படி ஒரு தலைவரை, இயக்கத் தொண்டர்களை உலகம் கண்டதுண்டா?
ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் அடிப்படை உரிமைப் பகுதியில் உட்பிரிவுகள் 13(2), 25(1), 26, 29 (1), (2), 368 மதத்தை, ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் உள்ள இந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டம்தான் அது.
நாடே கிடுகிடுத்தது. நவம்பர் 26 இல் என்ன நடக்கப் போகிறது என்று ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. தந்தை பெரியார் இரயில் சுற்றுப் பயணம் செய்து தோழர்களைச் சந்தித்தார்.
தந்தை பெரியார் போராட்டத்திற்கு முதல் நாள் மாலையிலேயே திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 26 இல் போராட்டம், போராட்டம்! ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவு கருஞ்சட்டைத் தோழர்களால் ‘‘திகுதிகு” என்று எரிந்தது! எரிக்கப்பட்ட சாம்பலை காவல்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலத்துக்கு அனுப்பி வைத்தனர். 10 ஆயிரம் பேர் இந்தப் போராட்டத் தீயில் குதித்தனர். குடும்பம் குடும்பமாகப் பங்குகொண்டவர்களில் – மூதாட்டிகள் உண்டு, கர்ப்பிணிப் பெண்கள் உண்டு. (சிறையில் பிறந்த குழந்தைகளுக்குச் சிறைப் பறவை, சிறை ராணி என்று பெயர் சூட்டினார்கள்! என்னே வீரம்! இத்தகு போராட்டம் வரலாற்றில் கண்டதுண்டா?).
இரு கண்களும் பார்வையற்ற திருவரங்கம் மகாமுனி, ஒற்றைக்காலில் தடியூன்றி நடக்கும் தோழர்கள் – வயது முதிர்ந்தோர் என்று சிறைக்கோட்டம் ஏகினர். அந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் கண்கலங்கினர் – பெருமூச்சுவிட்டனர்.
சிறையிலேயே அய்வர் மறைந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளியில் வந்த தோழர்கள் சில நாட்களில் கண்மூடினர்.
திருச்சி சிறையில் மரணமடைந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடல்களை சிறைக்குள்ளேயே புதைத்துவிட்டனர். முதலமைச்சர் காமராசரை அன்னை மணியம்மையார் திருச்சியிலிருந்து சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து, புதைக்கப்பட்ட உடல்களை மீட்டு, மிகப் பிரம்மாண்டமான ஊர்வலம் கண்ணீர்க் கடலில் நீந்தி சென்றது.
உலக வரலாற்றில் இத்தகையதொரு போராட்டத்தை யார் கண்டு இருப்பார்கள் – இந்தக் கருஞ்சட்டை இயக்கத் தைத் தவிர?
ஒரு செய்தியைச் சொன்னால் உடல் எல்லாம் சிலிர்க்கும்.
திருப்பனந்தாளையடுத்த சோழபுரத்தைச் சேர்ந்த 139 தோழர்கள் சட்டத் தாளைக் கொளுத்தினர். 40 பேரை மட்டும் கைது செய்து, 99 பேரை விட்டுவிட்டனர். சிறைக் குச் செல்லவில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார்களா?
திருப்பனந்தாள் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். ‘‘தந்தை பெரியார் கட்டளைப்படி ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவைக் கொளுத்தி னோம். எங்களை ஏன் கைது செய்யவில்லை?” என்று முழக்கமிட்டனர்.
‘‘நீங்கள் கொளுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை” என்றனர் காவல்துறையினர்.
‘‘அப்படியென்றால், உங்கள் எதிரில் இப்பொழுது கொளுத்துகின்றோம்” என்று கர்ச்சித்தனர் அந்தக் கருஞ்சிறத்தைகள். இரவு நேரமாகிவிட்டது – இனிமேல் கைது செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டனர் காவல் துறையினர்.
என்ன செய்தார்கள் நம் தோழர்கள்? அந்தக் கருஞ்சட்டை வீரர்கள்! காவல்துறை அமைச்சருக்குக் கையெழுத் திட்டுப் புகார் மனு எழுதினர். இப்படி ஒரு கழகமா? இப்படியும் தோழர்களா?
வேறொரு வழக்கில் தந்தை பெரியார் அந்தக் கால கட்டத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதத் தண்டனைக்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த என்னைப் பார்த்து, ‘‘அம்மா வுக்குத் துணையாக இருங்கள்” என்று சொன்னார்கள்.
அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனை!
1957 போராட்டத்திற்குப் பிறகு ஜாதி ஒழிப்புப் போர்க் களத்தை விட்டு அகன்றாரா பெரியார் என்றால், இல்லை!
தந்தை பெரியார் தம் வாழ்நாளில் நடத்திய போராட்ட மான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதும் ஜாதி ஒழிப்புப் போராட்டமே!
1973 டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் நடத்திய மாநாடு (அதுதான் அய்யா நடத்திய இறுதி மாநாடு என்பதை நாம் அறியோம்!). அந்த ‘‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்” நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்.
‘‘ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப் படவேண்டும்.நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப் படவேண்டும். ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யவேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்” என்று அரசியல் சட்டத்தின் 17 ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள ‘‘தீண்டாமை” (‘‘Untouchability”) என்பதற்குப் பதிலாக ‘‘ஜாதி”(‘‘Caste”) என்ற சொல்லை மாற்றி, ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமையவேண்டும்” என்பதுதான் அந்தத் தீர்மானம்.
இன்றுகூட ஆர்.எஸ்.எஸ். மிக சாமர்த்தியமாக ஜாதி வேற்றுமை ஒழியவேண்டும் என்கிறது (ஜாதி ஒழிய வேண்டும் என்பதை மறைத்துவிட்டு). கிருமிகள் ஒழிக்கப் படாமல் நோய் மட்டும் தற்காலிகமாக நின்றால் போதுமா?
1973 டிசம்பர் 19 இல் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (அதுதான் தந்தை பெரியார் இறுதியாக முழங்கிய மரண சாசன உரை) ‘உங்களையெல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே!’ என்றாரே – அந்தக் கர்ச்சனைக் குரலை நெஞ்சில் ஏந்தி, ஜாதிக்கு முடிவுரை எழுத முஷ்டியைத் தூக்கி எழுவோம் தோழர்களே!
ஜாதிக்கு சமாதி கட்டுவோம்!
என்னருந் தோழர்களே!
ஜாதி ஒழிப்பு நாளான இந்நாளில் –
ஜாதி ஒழிப்பு வீரத் தியாகிகளுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!!
குறிப்பு: சட்ட எரிப்புப் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சிறைபட்ட லால்குடியில் நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் 2024 ஆம் ஆண்டில் உரிய நினைவுச் சின்னம் எழுப்பப்படும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.11.2023
குறிப்பு: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வருமான வரம்பு ஆணை எரிக்கப்பட்டதும் இதே நாளில்தான் (1979).
இதோ ஒரு வீரத்தாய்!
இதோ ஒரு வீரத்தாய்!
ஜாதி ஒழிப்புப் போராட்டமாகிய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இடையாத்து மங்கலம் தோழர் நாகமுத்து ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டதால், திடீரென்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டபொழுதே 24.5.1958 இரவு 1.45 மணிக்கு தமது 53 ஆவது வயதில் மரணமுற்றார்.
5000 மக்கள் கலந்துகொண்ட சவ ஊர்வலம் நடை பெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு சவ அடக்கம் நடை பெற்றது. வழக்கு ஒன்றுக்காக மதுரை சென்றுவிட்டு, சென்னை திரும்பிக் கொண்டிருந்த அன்னை மணியம்மை யாரும், கடலூர் வீரமணியும் இந்தச் செய்தியைக் கேட்டு, உடனே இடையாத்து மங்கலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அவ்வூருக்கு வந்தபோது நேரம் இரவு 7 மணி. மழை மிரட்டல் காரணமாக 6.30 மணிக்கெல்லாம் சவ அடக்கம் நடைபெற்றுவிட்டது.
மறைந்த தோழரின் வீட்டிற்கு அவர்கள் சென்று மறைந்த தோழர் நாகமுத்து அவர்களின் துணைவியார் சீனியம்மாளுக்கும், 18 வயது நிரம்பிய ஒரே மகனுக்கும் ஆறுதல் கூறினார்கள்.
அந்த நேரத்தில் அந்தத் தாய் சொன்ன பதில் அனைவரையும் மயிர்க்கூச்செறியச் செய்தது.
‘‘நான் கலங்கவில்லை. என் மகன் இருக்கிறான். அய்யா வின் அடுத்த போராட்டத்திற்கு அவனையும் அனுப்பி நானும் வந்து பலியாகத் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.
கருஞ்சட்டைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய் வீரத்தாய் அல்லவா? புறநானூற்றை நினைவுக்குக் கொண்டு வரும் மறத்தாய் அல்லவா?