இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் தமிழ்நாடு அரசு விளக்கம்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன்.6- இந்து அறநிலையத்துறையில் 70 சதவீத பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் என்று தெரியவந்திருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959, பிரிவு 10-இன் படி அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் – எழுத்தும் பயிற்சி
ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

சென்னை,  ஜூன்.6 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எண்ணும் – எழுத்தும் திட்டம்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-2023 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-2027 கல்வியாண்டு வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் சார்ந்து நடப்பாண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.

பயிற்சி

இந்நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் குறித்து முதல் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து ஒன்றிய அளவில் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து பயிற்சி வழங்க வேண்டும்.

அதேநேரம், பயிற்சி நாளில் அந்தந்த பள்ளிகளில் மாற்று ஆசிரியர்கள் மூலம் வகுப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான செலவீனத்தை ஆண்டு பராமரிப்பு நிதியில் இருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடிக்க திட்டம்
உதவித் தொகைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன்.6- தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளி களுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒன்றிய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் உலக வங்கி நிதி உதவியுடன் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தும் உரிமைகள் திட்டமும் அடங்கும்.

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையை செம்மைப்படுத்தும் விதமாகவும், அவர்கள் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்கவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கணக்கெடுப்பு பணி கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும், நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளிலும் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

உதவித் தொகை

இந்தப் பணியை வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர் என்ற தகவல் இருக்கிறது. எனவே இந்த கணக்கெடுப்பு பணியின் போது, உதவித்தொகை வராத மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *