மறைந்த நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேனாள் தலைவருமான நீதிபதி
எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (06.06.2025) இயற்கை எய்தினார்.

நீதிபதி  எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள், 1988 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.  இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னார் நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு நன்றி!

திராவிடர் கழகத்தின் சார்பிலும், சமூகநீதிப் போராளிகள் சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *