சென்னை, ஜூன் 5 இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, எம்.பி.க்கள் குழுவை ஒன்றிய அரசு பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியது.
இதில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழுவினர், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்தது. அப்போது அங்கு இந்தியாவின் தேசியமொழி குறித்த கேள்விக்கு, ‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ என பதிலளித்தது அனைத்து தரப்பாலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், பயணத்தை முடித்துக் கொண்டு, கனிமொழி சென்னை திரும்பி முதலமைச்ச மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசியமொழி வேற்றுமையில் ஒற்றுமை” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும், உங்களால் அதிகம் பகிரப்படும் காணொலியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன். இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமை மொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.