காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன்.5– காஞ்சிபுரம், ராணிப் பேட்டை மாவட்டங்களில் 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 2 தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது.

2024-2025-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இதுதொடர்பாக மாநில அரசுக்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு, 2024-2025-ஆம் ஆண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இது 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, எண்ணிக்கையிலான வாய்ப்புகளை உருவாக்கி தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பெறுவதற்கு தேவையான முதலீடுகளை தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ஜெர்மனி

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல்ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தற்போது அனைத்து துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக்  எந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. , இத்திட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி

எஸ்.ஓ.எல். இந்தியா நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்.ஓ.எல். எஸ்.பி.ஏ. மற்றும் இந்தியாவின் சிக்ஜில் சால் இந்தியா ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்.ராணிப்பேட்டை சிப் காட் தொழிற்பூங்காவில் அமைந் துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.

2019-ம் ஆண்டு உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டின் போது ரூ.100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ரூ.200 கோடி முதலீடு என்ற வகையில், தமிழ்நாடு அரசுடன் இந்நிறு வனம், காற்று பிரித்தெடுக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலையை அமைப்பதற்கு முதலமைச்ச ரால் கடந்த 19.7.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறைவடைந்து, ரூ.175 கோடி முதலீட்டில் ஆலை நிறுவப்பட்டுள்ளது.

அதில் 20 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 கல்லூரி மாணவர்களுக்கு உள்ளகபயிற்சி அளிப்ப தற்கான கடிதங்களை முதலமைச்சர் வழங்கினார்.

திறப்பு

இந்த 2 தொழிற்சாலைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.6.2025) தலைமைச்செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை மற்றும் அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *