கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் கருவேலமரம் மழையால் வேரோடு சாய்ந்தது. அதன் அடியில் இருந்து மண் கலயம் எடுக்கப்பட்டது. அதில் 755.35 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் 660.20 கிராம் எடையுள்ள 7 தங்கக் கட்டிகள் இருந்தன. அதில் ஒரு தங்கக் கட்டியில் போகுல் குன்றக் கோதை என்று தமிழில் எழுதப்பட்டுள்ளன. அதாவது 2,100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு தங்க ஆவணம் கிடைத்து இருப்பது விலைமதிப்பில்லாதது. சிறிது நேரம் மட்டுமே இந்த தங்கக் கட்டி தமிழ் செம்மொழி கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதன்பின் அதனை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். ஆனால் அங்கும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை.