செயற்கை நுண்ணறிவால், ஊசியின்றி – இரத்தமின்றி உடற்பரிசோதனை

Viduthalai
2 Min Read

ஏ.அய். தொழில்நுட்பத்தின் வருகையால் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஊசி மற்றும் ரத்தம் இல்லாமல் உடல் பரிசோதனைகளை மேற் கொள்ளும் “Quick Vitals” (குயிக் வைட்டல்ஸ்) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் செயலி, ஒரு நபரின் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகளை அளிக்கிறது. இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பரவலாகக் காணப்படும் ரத்த சோகையை (அனீமியா) ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

குயிக் வைட்டல்ஸ் செயலி, நமது முகத்தை 20 வினாடிகளுக்குள் ஸ்கேன் செய்து, உடலில் உள்ள ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் செறிவு, சுவாசம், மற்றும் மன அழுத்தத்தின் அளவுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து முடிவுகளை வழங்குகிறது. இந்தச் செயலி போட்டோபிளெத்திஸ்மோகிராபி (Photoplethysmography – PPG) என்ற முறையைப் பயன்படுத்துகிறது. இது ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தி துல்லியமான அளவீடுகளை வழங்கும் ஒரு மேம்பட்ட தொழில்நுட்பம்.

மருத்துவத் துறையில் பயன்கள்

எளிய பரிசோதனை: ஊசிகள் மற்றும் ரத்த மாதிரிகள் இல்லாமல் பரிசோதனைகளை மேற்கொள்வதால், நோயாளிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைகிறது.

ஆரம்பகால நோயறிதல்: சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து அளவுகள், தொற்றுகள் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மருத்துவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வழிகாட்டுகிறது.

மொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுதல்

உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்வதன் மூலம், ஒருவரின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் சரிபார்க்க முடியும்.

செயலியின் பயன்பாடு

குயிக் வைட்டல்ஸ் செயலி 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அய்தராபாத்தில் உள்ள அரசு நீலோஃபர் மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாட்டைக் கண்டறிய இது பயன்படுத்தப்பட்டது. இது ரத்த சோகையைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப் பெரிதும் உதவியது. தற்போது, மகாராட்டிராவிலும் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொலைதூரப் பழங்குடிப் பகுதிகளிலும், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அடிப்படை சுகாதாரம் ஒரு சவாலாக இருக்கும் இடங்களிலும் இந்தச் செயலியை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *