காலையில் கண் விழிக்கும்போது கொட்டும் பனியும் கடுங்குளிரும் நம்மை அச்சுறுத்துகிறது. பனிப் பருவத்தில் வளிமண்டலத்தில் வெயில் குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருப் பதால், நோய்க் கிருமி களுக்குக் கொண்டாட்டம் கூடிவிடுகிறது. அதனால் நமக்கு பல நோய்கள் வரிசைகட்டி வருகின்றன.
அதிலும் இந்தப் பருவத்தில் பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, சுவாச மண்டல நோய்கள் அதிகம் பாதிக்கும்.
சளியும் தொண்டை வலியும்
பனிக்காலத்தில் வைரஸ் கிருமிகளின் ஆதிக்கம் அதிகம் என்பதால் பலருக்கும் சளியும் தொண்டை வலியும் படுத்தி எடுக்கும். சளி உள்ளவர்கள் தும்மினாலோ இருமினாலோ அருகில் உள்ளவர்களுக்கும் வைரஸ் கிருமிகள் பரவிவிடும். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்தக் கிருமிகள் கலந்த அசுத்தக் காற்றைச் சுவாசித்தால் அவர்களுக்கும் சளிப் பிரச்சினை வருவது உறுதி.
அதுபோல் சளிப் பிரச்சினை உள்ளவர்கள் பயன்படுத்திய பொருள்களை அடுத்தவர்கள் பயன்படுத்தினாலும் இது வருவதுண்டு.சளிப் பிரச்சினைக்கென தனி சிகிச்சை எதுவுமில்லை. இது ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும். உடல் வலிக்கும் காய்ச்சலுக்கும் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம். மூக்கடைப்பு மற்றும் மூக்கு நீர் ஒழுகலைக் குறைக்க மாத்திரை உண்டு. இளம் வெந்நீரில் குளிப்பது, நீராவி பிடிப்பது, உப்பு நீரில் தொண்டையைக் கொப்பளிப்பது, கைகால் முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற வீட்டுப் பக்குவங்களும் உதவும்.
சளி பிடிப்பது எப்படி?
பனிக் காலத்தில் குளிர்ந்த காற்றைச் சுவாசிக்கும் போது சளியோடு, தும்மல், மூக்கடைப்பு போன்றவையும் ஏற்படும். அப்போது வாய் வழியாக சுவாசிக்க நேரிடும். இதனால், மூச்சுக் குழாய்க்குள் எந்தக் கிருமியும் எளிதில் நுழைந்து விடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படும். இதனால் நுரையீரல் பாதிக்கப்படும். மூச்சுக் குழாய்க்குள் அழற்சி உண்டாகும். அங்கு நீர் கோத்து சளி பிடிக்கும். பிறகு காய்ச்சல், இருமல் வரும். இதற்கு ‘மூச்சுக் குழாய் அழற்சி’ என்று பெயர்.
பொதுவாக இந்தத் தொந்தரவு ஒரு வாரம் வரை நீடிக்கும். இது சாதாரண தொந்தரவுதான். அதிக ஆபத்து வராது. பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி இளம் சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்.
சத்துள்ள உணவுகளை வெதுவெதுப்பாகச் சாப்பிட வேண்டும். இவற்றுடன் சிகிச்சையையும் பெற்றுவிட்டால் நோய் சீக்கிரத்தில் குணமாகி விடும்.
ஆஸ்துமா
ஆஸ்துமாவைத் தூண்டக்கூடிய காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடும். என்றாலும், பனிக் காலத்தில் உண்டாகும் குளிர்ந்த காற்று ஆஸ்து மாவைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும். அய்ஸ்கிரீம், குளிர்பானங்கள், ரோஸ்மில்க், சாக்லேட், கேக் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிடுவது, ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற புளிப்பான பழங்களைச் சாப்பிடுவது, புகை போடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும்.
பனிக்காலத்தில் காற்றோட்டம் இல்லாத சூழல் உண்டாகும்போது ஒட்டடைத் தூசு உள்ளிட்ட வீட்டுத் தூசுகள் வெளியேற வழியில்லாமல் அறைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும். அதனால் ஆஸ்துமா வரும். அதிகாலையில் ஆஸ்துமா வருவதற்கு பூக்களின் மகரந்தம், பார்த்தீனியம் செடி, வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்றவை காரணமாக இருக்கும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த இப்போது இன்ஹேலர், ரோட்டாஹேலர், நெபுலைசர், நேசல் ஸ்பிரே என பல உள்ளிழுப்புக் கருவிகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் பாதுகாப்பான மருந்துகளை எடுத்துக்கொண்டு ஆஸ்துமாவை சீக்கிரத்தில் கட்டுப்படுத்த முடியும்.
தோல் வறட்சி
பனிக் காலத்தில் மூக்கடைப்பு நீடித்தால் தொண்டைக்கும் காதுக்கும் இடையில் உள்ள ‘காது-தொண்டை இணைப்புக் குழாய்’ அடை பட்டு காதுவலி ஏற்படும். இந்த வலி இரவு நேரத்தில்தான் அதிக தொல்லை தரும். சமயங் களில், சைனஸ் தொந்தரவும் இதனுடன் சேர்ந்து கொள்ளும். அப்போது தலைவலி கடுமையாகும்.
பனிக்காலத்தில் கை, கால்களில் தோல் வறட்சி அடையும். அதில் விரிசல்கள் விழும். அந்த இடங்களில் அரிப்பு உண்டாகும். அப்போது தோலை ஈரப்படுத்தும் களிம்புகளை பகலிலும் இரவிலும் கை, கால்களில பூசிக்கொண்டால் இந்தப் பிரச்சினை தீரும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் உதவும். கடுமையான பனியின்போது கை, கால் விரல்கள் இழுத்துக் கொள்ளும். அவை வெள்ளை நிறத்துக்கு மாறி விறுவிறுப்பாகிவிடும். ஊசி குத்தும் வலிகூட ஏற்படும். இதைத் தடுக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கை, கால்களுக்கு உறை போட்டுக்கொள்ள வேண்டும். புகை பிடிக்கக்கூடாது. காபி அதிகம் குடிக்கக்கூடாது.
தங்கும் அறையை வெதுவெதுப் பாக்கிக்கொண்டாலும் நல்லது.
எப்படித் தடுக்கலாம்?
அதிகாலை பனியில் வெளியில் செல்லக் கூடாது. செல்ல நேர்ந்தால், காதை மறைக்கின்ற அளவுக்குக் ‘குல்லா’ அணிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்துக் கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்குக் கை, கால்களிலும் மெல்லிய பருத்தித்துணி உறைகளை அணிவித்துக்கொள்ளலாம். வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.
குழந்தைகள் அதிகம் விரும்பும் அய்ஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிர்ச்சியான உணவுகள் பனிக் காலத்துக்கு ஆகாது. அதுபோல் துரித உணவுகளை ஓரங்கட்டிவிட்டு நம் பாரம்பரிய வீட்டு உணவுகளை இளஞ்சூட்டில் உண்ண வேண்டும். ஒவ்வாமை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமான சூழல் அவசியம். பகலில் வீட்டில் ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டிலுள்ள கிருமிகள் வெளியேற வழி கிடைக்கும். கொசுவலை, கொசுவிரட்டிகள் கொண்டு கொசுக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டிகள் வேண்டாம்.
என்ன சாப்பிடலாம்
பனிக்கால நோய்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சிகள் உதவும். அதிகாலைப் பனியில் நடைப்பயிற்சி மேற் கொள்ள முடியாதவர்கள் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
இந்தப் பயிற்சிகள் சுவாச மண்டலத்தை வலுப்படுத்தும். நல்ல ஓய்வும் தேவை. தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கம் அவசியம். கிரீன் டீ, மூலிகை டீ நல்லது. முளைகட்டிய பயறுகள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். முக்கியமாக, கேரட், முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக் கோலி, பூசணி, வெள்ளைப்பூண்டு, தேன், அன்னாசி, பப்பாளி, மாதுளை ஆகியவை பனிக்கால நோய்களைத் தடுக்கும் அளவுக்கு உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.