சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இந்நாள் [25.06.1931]

Viduthalai
3 Min Read

அரசியல்

வட இந்திய தலைவர்களே கிட்டத்தட்ட வி.பி.சிங்கை மறந்துவிட்ட நிலையில் தெற்கே அவருக்கு முழு உருவச்சிலையை அமைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த போது மீண்டும் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப்பார்த்தது  காரணம் வி.பி. சிங் என்னும் குறுநிலமன்னரின் வாரிசு வெகுஜன மக்களுக்காக தன்னுடைய பகட்டை துறந்து பொதுவாழ்வில் வந்தவர். இந்தியாவின் 7-ஆவது பிரதமராகப் பதவி வகித்த வி.பி.சிங் என்ற விஸ்வநாத் பிரதாப் சிங்கின் வாழ்வும், அரசியலில் அவர் ஆற்றிய பணிகளும் என்றும் நினைவில் நிற்கத்தக்கவை. 

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத் தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக் கொண்டார். 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட் டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். வி.பி.சிங் பணியை கண்டு வியந்த இந்திரா காந்தி உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 

1980-ஆம் ஆண்டு நியமித்தார். அந்த காலகட்டத் தில் உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கட் டுப்படுத்த முடியாததற்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார். 1984 முதல் 1987 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங், 1987-இல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி.சிங் ஜன் மோர்ச்சா எனும் கட்சியை 1987இல் நிறுவினார். 1988-இல் ஜன் மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தள், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார் வி.பி.சிங்.  மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. 1989 தேசிய முன் னணியைக் கட்டமைத்து, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார்.

காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது. பாபா சாகேப் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்கையே சேரும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் ஆணைய பரிந் துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தி யவர் வி.பி.சிங்.  இதனால் அத்வானி தலைமை யிலான  பாஜக ஆதரவை விலகிக்கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான ஒன்றிய அரசு கவிழ்ந் தது. இருப்பினும் இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தின் வாழ்க்கைக்கு என்னால் முடிந்த ஒரு சிறப்பான பணியை செய்து முடித்துவிட்ட பெரும் நிம்மதியோடு பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று கூறினார். அதன் பிறகு, பொது வாழ்க்கை யிலிருந்து விலகியிருந்தவர், 2006-ஆம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நில கையகப்படுத்தியதற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்து வழி நடத்தினார்.

திராவிடர் கழகத்தோடு நட்புறவு கொண்டு இருந்தார். சென்னையில் அன்னை மணியம்மை யார் சிலையைத் திறந்து வைத்தார். திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை தமது வாழ்வு இணையரோடு கலந்து கொண்டு திறந்து வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சி பெறுகிறேன் என்று சொன்னவரும் அவரே. சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளைத்  தூக்கி எறிவேன் என்று கூறிய அரிய மாமனிதர் வி.பி. சிங்கை மிகுந்த மகிழ்ச்சியோடு நினைவு கூர்வோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *