சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (19)

viduthalai
6 Min Read

கி.வீரமணி

தந்தை பெரியார் விடுதலையும்
‘புரட்சி’க்கு ஏற்பட்ட தொல்லைகளும்

கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் 15.5.1934 அன்று ராஜமகேந்திரம் ஜெயிலிலிருந்து விடுதலையாகி, மறுநாள் சென்னை வந்து அங்கிருந்து அன்றே புறப்பட்டு, 17ஆம் தேதி ஈரோடு சென்று சேர்ந்தார். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு ஆங்காங்குள்ள சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் வந்து சந்தித்துப் பேசிப் போனார்கள்.

தந்தை பெரியார் சிறையில் இருந்து விடுதலையானவுடன், ஈரோடு சுயமரியாதை வாலிபர் சங்கம் சார்பில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் உரையாற்றிய பெரியார் தமது சிறை அனுபவம் பற்றி குறிப்பிடும்போது, “நான் மற்றவர்களைப் போல் சிறை செல்ல வேண்டுமென்று கருதி நானாக சிறைக்குப் போகவில்லை. ஆனால் சிறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதற்காக பயந்து பின் வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதற்காகவே நாள் சிறை செல்ல நேர்ந்தது.

அதாவது குடிஅரசு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும், சப்பையானது மான வியாசத்திற்காகத்தான் நான் சிறைக்குப் போக நேரிட்டதே தவிர. மற்றபடி சொல்லத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் “குடிஅரசு” பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் என்னை வருடக்கணக்காய் தண்டிக்கக்கூடியதும், நாடு கடத்தகூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காக தென்படலாம் – ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதை இப்போது நான் கவனித்துப் பார்த்தால், காங்கிரசிற்கு பாமர ஜனங்களிடத்தில் இருந்த செல்வாக்கின் பயனாய், நமது வியாசங்களை பொது ஜனங்கள் லட்சியம் செய்யமாட்டார்கள் என்கின்ற தைரியத்தால் சர்க்கார் அப்பொழுது சும்மா இருந்தார்கள் என்று தோன்றுகிறது.

ஆனால், இப்பொழுது இப்படிப்பட்ட சிறிய வியாசங்களையும் கண்டு, இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்கார் பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்ட தென்பது நன்றாய்த் தெரிகிறது. இதிலிருந்து நாம் என்ன நினைக்க வேண்டி இருக்கிறது என்றால் நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும், சுயமரியாதை கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் சர்க்கார் இப்போது உணர்வதாக தெரிகின்றது.

தெரிகிறது அன்றியும் மற்றும் பல புதிய புதிய தீவிரக் கொள்கைகளையும் ஜனங்கள் வரவேற்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இதுவரை நமது நாட்டில் இருந்து வந்த அபிப்பிராயங்கள் எல்லாம் ”வெள்ளைக்காரருக்கு இந்நாட்டில் என்ன வேலை அவர்களுக்கு ஏன் ஆயிரக்ணக்கான ரூபாய் சம்பளம்? கருப்பு மனிதனுக்கு ஏன் நூற்றுக்கணக்கான பத்துக் கணக்கான ரூபாய்கள் சம்பளம்? அவர்களுக்கு ஏன் பெரிய அதிகாரம்? நமக்கு ஏன் சின்ன அதிகாரம் என்பது போன்ற பிரச்சினைகளே தேசியம் என்னும் பேரால் முக்கியமாய் இருந்து வந்தது. இதன் பயனாய் அரசாங்கத்தார்களும் இங்குள்ள பணக்காரர் படித்தவர் மேல் ஜாதிக்காரர் ஆகிய ஒரு சிறு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஏதாவது வாய்ப்பூசி மக்களின் “தேசிய அபிலாஷைகளை” திருப்தி செய்து வந்து கொண்டும் இருந்ததால் பாமர ஜனங்களின் எண்ணம், உயர்ச்சி, ஊக்கம் எல்லாம் அதிலேயே ஈடுபட்டுக் கிடந்தது. ஆனால் இப்பொழுதோ நாட்டில் வரவர அந்த எண்ணங்கள் மறையத்தொடங்கிவிட்டன. அவை வேறு விதமாக பரிணமிக்க ஆரம்பித்து விட்டன.

எப்படி என்றால் “வெள்ளையனுக்கு ஏன் 1000 5000 ரூபாய் சம்பளங்கள். கருப்பனுக்கு 100, 50, 10. 5 ரூபாய் வீதம் சம்பளம் என்பது போய், மனித சமூகத்தில் யாராயிருந்தாலும் ஒருவனுக்கு ஏன் 5000, 10000 ரூபாய் சம்பளம், மற்றவனுக்கு ஏன் 5 ரூபாய் 10 ரூபாய் சம்பளம், என்கின்ற உணர்ச்சி தோன்றி எல்லா மக்களும், ஜாதி மதம். தேசம் என்கின்ற பேதமும் பிரிவுமில்லாமல் சகலரும் சமமாய் பாடுபடவேண்டும். பயனை சமமாய் அடைய வேண்டும் என்கின்ற தான ஒரு சமதர்ம உணர்ச்சியில் திரும்பி விட்டது. இந்த நிலைமையானது ஆட்சிக்காரருக்குமாத்திரமோ அல்லது அரசாங்கத் உத்தியோகஸ்தருக்கு மாத்திரமோ விரோதமான தென்றோ. அடக்கி விடவேண்டிய தென்றோ தோன்றாமல் நம் நாட்டில் உள்ள எல்லா பணக்காரர்களுக்கும். எல்லா மேல்ஜாதிக்காரர்களுக்கும் அதாவது பாடுபடாமல் வயிறுவளர்க்கவும். போகபோக்கியம் அனுபவிக்கவும். கருதும் மக்களுக்கு) படித்தவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் தோன்றிவிட்டதுடன், இவர்களால் வாழ்ந்து வந்த மதப்புரோகிதர்கள் என்பவர்களுக்கும் தோன்றிவிட்டது. ஆதலால், இந்தக் கூட்டத்தார்கள் எல்லோருமே அக்கொள்கைக்கு எதிரிகளாய் இருப்பதில் நான் அதிசயப்படவில்லை என்பதோடு இதற்காக நான் ஜெயிலுக்குப்போக நேரிட்டதிலும் அதியமில்லை” என்று பேசினார். அதன் மூலம் ‘குடிஅரசு’ ஏடு மக்கள் மத்தியில் தமது கொள்கைகளை பரப்புவதில் வெற்றி கொண்டதை அறியலாம். அதன் மூலம் ஆங்கிலேய அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளானது. ‘குடிஅரசு’ ஏடு அடக்குமுறைக்கு உள்ளாகி புரட்சி என்ற பெயரில் புதிய ஏடு வந்தாலும், புரட்சி இதழும் அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளானது. தொடர்ந்து மத நம்பிக்கைகளையும் காட்டுமிராண்டித்தனமான யாகங்கள், மூடநம்பிக்கைகள் ஜாதி, மதம் உள்ளிட்டவற்றையும் புராணங்களையும் எதிர்த்து புரட்சி ஏடு தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. சமதர்மம் குறித்தும் ஏராளமான செய்திகளை மக்களிடம் பரப்ப தொடங்கியது.

புரட்சிக்கு ஏற்பட்ட தொல்லைகள்

பெரியார் கைது செய்யப்படும் வரை வெளியான ‘புரட்சி இதழ்களில் அதாவது 24-12-1933ஆம் நாளிட்ட ‘புரட்சி’ வரை அவற்றின் முதற் பக்கப் பச்சை அட்டைகளின் மேற்பகுதியில் “ஆசிரியர் – ஈ.வெ. இராமசாமி” என்றும், இறுதிப் பக்க அட்டைகளின் அடிப்பகுதியில், “உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு தோழர் சா.ரா கண்ணம்மாள் அவர்களால் வெளியிடப்பட்டது” என்பதாகவும் பொறிக்கப்பட்டு வந்தது. அடுத்த கிழமையில் வெளியான அதாவது 31-12-1933 நாளைய – ‘புரட்சி’ இதழிலிருந்து வழமை போல முதற்பக்கதில் “ஆசிரியர் – ஈ.வெ. கிருஷ்ணசாமி” என்றும் கடைசிப் பக்கத்தில், “உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு, தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களால் வெளியிடப்பட்டது” என்றும் பொறிக்கப்பட்டது. அதற்கு முன்னர் நூறு மாதங்கட்கு மேலாக நடந்து வந்த ‘குடிஅரசு’ இதழில் ‘இம்பிரிண்ட்’ எனப்படும் பெயர்கள் அச்சிடுவதில் என்ன நடைமுறை கையாளப்பட்டு வந்ததோ அதே முறையைப் பின்பற்றித்தான் ‘புரட்சி’யிலும் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் ‘புரட்சி தொடங்கப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆசிரியர் பெயரில்லாமல் வெளியிட்டதற்காக என்ற காரணங்காட்டி, காவல் துறையினர் ‘புரட்சியின் வெளியிட்டாளரான கண்ணம்மாள் அவர்களின் மீது வழக்குத் தொடுத்தனர். ஏழுெட்டு முறை வழக்கு தள்ளி வைக்கப்பட்டு 29-5-1934 அன்று கண்ணம்மாள் அவர்கள் 100 ரூபாய் தண்டனைத் தொகையாகக் கட்ட வேண்டுமென்றும், தவறினால் ஒரு மாதம் சிறை வாழ்வு ஏற்க வேண்டுமென்றும் மாவட்ட உதவி ஆட்சியரால் தீர்ப்பளிக்கப்பட்டது.

வெளியீட்டாளர் கண்ணம்மாள் அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பெற்ற நிலையில் ஈ.வெ.கி. அவர்கள் ஆசிரியராக மட்டும் ‘புரட்சி’யின் வெளியீட்டாளர்ப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு விட்டார். 4-2-1934ஆம் நாளிட்ட இதழிலிருந்து 25-3-1934ஆம் நாளையப் ‘புரட்சி’ வரையிலும், “உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு, தோழர் ஈ.வே. கிருஷ்ணசாமி அவர்களால் வெளியிடப்பட்டது” என்னும் வரி இறுதிப்பக்கத்தின் அடியில் இடம் பெற்றது. இன்னும் 1-4-1934ஆம் நாள் ‘புரட்சி’யின் முதற்பக்க மேற்பகுதியில் “ஆசிரியர் – ஈ.வெ. கிருஷ்ணசாமி” என்று தமிழிலும், கடைசிப்பக்க அடிப்பகுதியில், “Printed Published and Edited at Unmai Vilakkam Press by E.V.Krishnasamy” என்று ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்பட்டது. அடுத்த இதழிலிருந்து ‘Edited’ என்னும் சொல் முதன்மை பெற்றது.

என்றாலும் ‘புரட்சி’ இதழ் நாட்டில் உலா வரக் கூடாது என்பதே அரசின் குறிக்கோளாக இருந்ததால் தொல்லை தொடர்ந்தது. ஆசிரியர் கிருஷ்ணசாமி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாகப் ‘புரட்சியின் பக்கங்கள் சில செய்திகளைத் தருகின்றன.

10-6-1934ஆம் நாளைய
இதழில் காணப்படுவது:

‘புரட்சி’யில் பிரசுரமான ஒரு வியாசத்திற்காக (கட்டுரைக்காக) அதன் ஆசிரியர் மீது மன்னார்குடியில் தொடரப்பட்டிருந்த ஒரு மான நஷ்ட வழக்கில் எதிரிக்கு அரஸ்ட் வாரண்ட் அனுப்பப்பட்டதற்குக் காரணம் முதலில் சம்மன் அனுப்பப்பட்டதாகவும் அதன்படி ஆஜராகததினால் வாரண்ட் அனுப்பப்பட்டதாகவும் மன்னார்குடி கோர்ட்டில் விபரம் தெரிய வந்ததாம்.

ஆசிரியருக்கு அந்தப்படி எவ்வித சம்மனும் வரவில்லை. ஆசிரியர் ஈரோட்டிலேயே இருந் திருக்கிறார். ஆதலால் சம்மன் எப்போது யார் மூலமாய் அனுப்பப்பட்டதென்றும், அது என்ன காரணத்தினால் சேர்வு செய்யப்படவில்லை என்றும் சம்மன் மீது என்ன எழுதித் திருப்பி அனுப்பப்பட்டதென்றும் சம்மந்தப்பட்ட மேலதிகாரிகள் விசாரித்து நீதி செலுத்தத்தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வார்களா? வழக்கு குறிப்பிட்டபடி 4-ஆம் தேதி தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மன்னார்குடி சென்றிருந்தார். விசாரணை 12ஆம் தேதிக்கு வாய்தா போடப்பட்டு விட்டது”.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *