கடவுள் சக்தி இதுதான் கோபுர கலசங்கள் திருட்டு

viduthalai
4 Min Read

திருவண்ணாமலை, ஜூன்.5- திருவண்ணாமலை மாவட்டம் சு.நாவல்பாக்கம் கிராமத்தில் குறைதீர்க்கும் குமரன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இந்த 2 கோவில்களிலும் பூசாரி கந்தன் பூஜை செய்து வருகிறார். வழக்கம் போல அவர் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது 2கோவில்களின் கோபுர கலசங்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என தெரிகிறது.

 

பிறப்பு சான்றிதழ் அவசியம்

கடவுச்சீட்டில் வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க, நீக்க புதிய நடைமுறை

சென்னை, ஜூன் 5 கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும்போது, மறுமணம் செய்தவர்கள், தங்களின் துணைவர் குறித்த தகவலை சேர்ப்பதில் நடைமுறை சிக்கல் இருந்து வந்த நிலையில், இதற்கு ஒரு தீர்வு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரை சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதனை கடவுச்சீட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது..

கடவுச்சீட்டு  பெறுவதற்கான சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஏனென்றால், கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது என்பதால், அது சம்பந்தமான எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்தது..

ஆனால், கடந்த மார்ச் மாதம், பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்திருந்தது.. இது சம்பந்தமாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.

பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்பதையும் வலியுறுத்தியிருந்தது.

 

ஒடிசா மாநில பிஜேபி ஆட்சியில் மருத்துவக் கல்லூரியில்
5 நோயாளிகள் அடுத்தடுத்து சாவு மக்கள் போராட்டம்

கோராபட், ஜூன்.5- ஒடிசா அரசு மருத்துவக் கல்லூரியில் சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்தடுத்து உயிரிழப்பு

ஒடிசாவின் கோராபட் மாவட்டத்தில் மாநில அரசுக்கு சொந்தமான சஹீத்லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு  ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்குள்ள அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட 5 நோயாளிகள் 3.6.2025 அன்று இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர். சில மணி நேரத்துக்குள்ளேயே 5 பேர் இறந்தது அவர்களது உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்தனர். 5 நோயாளிகளும் ஊசி போட்ட சில நிமிடங்களில் அடுத்தடுத்து இறந்ததாக குற்றம் சாட்டிய அவர்கள், தவறான இந்த ஊசியால் தான் மரணம் விளைந்ததாக குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

சமரசம்

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நோயாளிகளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமசரம் ஏற்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்த 5 பேரின் உட லுக்கும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே 5 நோயாளிகளின் அடுத்தடுத்த மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மருத்துவக்கல்லூரி சூப்பிரண்டு சுசந்தா குமார் சாகு, துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து நேற்று (4.6.2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உயிரிழந்த நோயாளிகள் அனைவரும் மிகவும் கவலைக்கிடமான முறையில்தான் சிகிச்சை பெற்று வந்தனர். இறப்புக்கு எந்தவித தவறான ஊசியும் காரணம்அல்ல’ என தெரிவித்தார்.

விசாரணைக்குழு

உயிரிழந்தவர்களில் 2 பேர் வயிற்று காயங்களுக்கும், ஒருவர் கல்லீரல் பிரச்சினைக்கும் சிகிச்சை பெற்று வந்ததாக கூறிய அவர், அவர்கள் ரத்தப்போக்கு மற்றும் செப்டீசிமியாவினால் இறந்ததாகவும் தெரிவித்தார்.

4-ஆவது நோயாளி புற்றுநோயின் 4-ஆம் நிலையில் இருந்ததாகவும், 5-ஆவது நபர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் அவர் கூறினார்.

மறுபுறம் மருத்துவக்கல்வி மற்றும் பயிற்சி இயக்குநர் சந்தோஷ் மிஸ்ராவும் இந்த சம்பவம் குறித்து தனியாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்காக வேறு மருத்துவக்கல்லூரிகளை சேர்ந்த 5 மருத்துவர்கள் குழு ஒன் றையும் அமைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இன்றைக்குள் (5.6.2025) அறிக்கை அளிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *