செய்திச் சுருக்கம்

Viduthalai
2 Min Read

அய்.நா. 80-ஆவது பொதுச்சபை தலைவராக பெண் தேர்வு

ஜெர்மனி மேனாள் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக், அய்.நா.வின் 80-ஆவது பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகின்ற செப்டம்பரில் இந்த பொதுச்சபை கூட்டம் துவங்குகிறது. இந்நிலையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துப் பேசிய அன்னலெனா, சவாலான காலங்களில் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார். தனக்கு வாக்களித்த நாடுகளுக்கும் அவர் நன்றி கூறினார்.

அரசு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது:
அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி வெறும் வதந்தியே என்றும், மேலும், நீதிமன்ற உத்தரவுப்படியே தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்துவதற்கு மக்களிடம் கருத்து கேட்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிளாஸ்டிக்கை அழிக்கும் கடல் பூஞ்சை கண்டுபிடிப்பு

பருவநிலை, சுற்றுப்புறச் சூழல், கடல்வாழ் உயிரினங்கள் என பூமியின் பசுமைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் சவாலாக இருந்து வருகின்றன. அதனை அழிப்பதற்கான ஆய்வில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளனர். தெர்மோபிளாஸ்டிக்கை சிதைக்கும் பாலிப்ரொப்பிலீன் என்ற கடல் பூஞ்சையை கண்டுபிடித்துள்ளனர். இது பிளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பில் மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி உபகரணங்கள்… ரூ.1,141 கோடி ஒதுக்கீடு

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க ரூ.1,141 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ரூ.311 கோடியில் பாடநூல்கள், ரூ.457 கோடியில் சீருடைகள், ரூ.162 கோடியில் நோட்டுப் புத்தகங்கள், ரூ.211 கோடியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உறுதி செய்துள்ளார்.

ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படுமா? புதிய தகவல்

ரூ.2000 நோட்டை போல, ரூ.500 நோட்டையும் ரிசர்வ் வங்கி நிறுத்தலாம் என வங்கியியல் நிபுணர் அஷ்வின் ராணா TV9 ஊடகத்தில் தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு போல ஒரேடியாக நோட்டுகள் தடை செய்யப்படாமல், முதலில் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் குறைக்கப்பட்டு, 2026-க்குள் நிறுத்தப்படும் என்றார். கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்நடவடிக்கையாம். இதற்காக ரூ.100, ரூ.200 நோட்டுகளும், டிஜிட்டல் பேமென்ட்டும் ஊக்குவிக்கப்படும் என்றார்.

ஊழியர்கள் பணி நீக்கத்தை
நிறுத்தாத மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த மாதம் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், தற்போது 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. AI-ன் வரவால் இந்தப் பணி நீக்கம் நடைபெற்றுள்ளது. கடந்த 2024 ஜூன் நிலவரப்படி, அந்நிறுவனத்தில் 2.28 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை

தமிழ்நாட்டில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றக் கிளை (மதுரை) இடைக்காலத் தடை விதித்துள்ளது. சாலைகள் மோசமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் மறு அறிவிப்பு வரும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சாலைகள் மோசமாக உள்ள மற்ற பகுதிகளிலும் இது நடைமுறைக்கு வருமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *