சென்னை, ஜூன் 5- தமிழ் நாட்டில் ஆன்லைன் விளை யாட்டுகளை முறைப்படுத்த, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப் பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
கட்டுப்பாடு
அதில், ஆன்லைன் விளையாட்டு களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என நேர கட்டுப்பாடு விதித்து இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளை எதிர்த்து, பிளே கேம்ஸ் 24×7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் பிளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் விளையாட்டு களுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்த லாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
கட்டுப்பாடு செல்லும்
தமிழ்நாடு அரசின் விதிகள் ஒன்றிய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்கு முறை விதிகள் உடனடி தேவையாகிறது.
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளுமைக் குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந் துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மவுனம் காக்க முடியாது .
இந்திய அரசமைப்புச் சட்டம் தொழில் புரியும் உரிமை வழங்கி உள்ள போதிலும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என கூறி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.