சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (18)

viduthalai
4 Min Read

கி.வீரமணி

தண்டனை குறித்து
‘புரட்சி’ இதழ் தலையங்கம்

ஈ.வெ. ராமசாமிக்கும், சா.ரா. கண்ணம்மாளுக்கும் “ஜே” (ஈ.வெ.கி)

நமதியக்கங்கண்ட தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதியில் “குடிஅரசி”ல் எழுதிய “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்கிற தலையங்கத்தின் காரணமாக சர்க்காரால் தொடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி.டபிள்யூ. வெல்ஸ்அய்.சி.எஸ்அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார்.

அதாவது தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், மேற்படி அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள். எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது தண்டிக்கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது – தற்போது நாம் கூற முன்வரவில்லை. ஏனெனில் அவைகளை வாசகர்களே நன்கறிந்திருக்கலாமென்கிற நம்பிக்கையேயாகும்.

ஆயினும், நமதியக்கத்தவர்களும் நமதியக்கத்தில் அபிமானமும், அனுதாபமும் கொண்டவர்களும் இனி என்ன செய்ய வேண்டுமென்பதுதான் தற்போது எழ வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இவ்விதப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்சமயத்தில் நாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்த வேண்டிய பொறுப்புக்குட்பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. அதாவது நமது தமிழ்நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கையானது நமது காரியாலயத்திற்கு இதுகாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக் கூடியது சுமார் 110 என்பதாகும். நமது தோழர்கள் சிறைப்பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமந்தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்குத் தலைமையாக ஒரு சங்கம் அவைகளின் தாலுகா தலைநகரில் ஏற்பட வேண்டும்.

அப்படி ஏற்படுகிற தாலுகாக்களின் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கமாக தாலுகாக்களின் ஜில்லாக்களின் தலைநகர்களில் தலைமைச் சங்கங்களாக நிறுவப்பட்டு, ஒவ்வொரு சங்கத்திலும் அங்கத்தினர்கள் ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரச்சாரங்களை முன்னிலும் அதிகமாக மக்களுக்கு சமதர்ம உணர்ச்சியுண்டாகும்படியாகவும் சர்க்கார் மீது எவ்வித துவேஷம் உணர்ச்சி உண்டாக்காமலும் நமதியக்க உணர்ச்சியையே முன்னிலுமதிக ஊக்கங்களுடன் முன்னேறும்படி உண்டாகுமாறு பிரச்சாரம் செய்து வரவேண்டும். அதனால் மக்களுக்குள் ஒரு வித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி அறியாமையையும் அடிமைப்புத்தியையும், மூடப்பழக்க வழக்கங்களையும் வேரோடுகளையும்படியான திறன் உண்டாகும்படிக்கும் பிரச்சாரங்கள் நடைபெறவேண்டியதே முக்கியமான கடமையாகும்.

அப்பொழுதுதான் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் சர்க்கார் உள்ளபடி அறிந்து தாம் (சர்க்கார்) நமதியக்கத்தின் பேரில் கொண்டுள்ள தப்பபிராயங்களை மாற்றிக் கொள்ளவும் நம்முடன் சேர்ந்துழைத்து நமது இயக்கத்திற்கேற்ற சட்டங்களையும், திட்டங்களையும் உண்டாக்க முற்படவும் எத்தனிப்பார்கள். நமது நாட்டு மக்களுக்கு ஒரு விதப் புத்துணர்ச்சியும் உண்டாகலாம். நமதியக்கத்தின் கொள்கை களையும் தத்துவங்களையும் நம் மக்களிடையில் பரப்பி வருவதில் செய்ய வேண்டிய பிரசாரத்தின் மூலமும், எழுத வேண்டிய பிரசாரத் தின் மூலமும் எழுத வேண்டிய கட்டுரைகள் முதலியவைகளின் மூலமும் நமக்கேற்படுகிற அநேகமாயிரக்கணக்கான எதிர்ப்புகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் சர்க்கார் தண்டனை முதலிய இன்னல்களுக்கும் எதிர்பார்த்துத் தயாராகவுள்ள தியாகத்தோடுள்ளவர்களுக்கேதான் அவைகள் கைகூடிவரும் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் ஸ்தாபகர்களுடைய சரித்திர வாயில்களால் நன்கறிந்தவைகளானபடியால் அதை நாம் இங்கு சொல்லத் தேவை இராதென்றே நினைக்கிறோம்.

ஆகையால் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் நம்நாட்டு மக்களிடையில் பரப்பி அவர்கள் யாவரும் மற்ற நாட்டு சமதர்ம இயக்கத்தவர்களுடன் சமமாக பசி, தரித்திரம், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய பிணிகள் அணுகாமல் சுகமாக அதாவது செல்வவான்களுக்கொப்ப தங்கள் வாழ்க்கையை நடத்தி சுகம் பெற்று வாழ்ந்து வரவேண்டுமென்கிற ஒரு கருத்துகொண்டு தான், தமது உடல், பொருள், ஆவிகளைத் துறந்து மனமொழிக்காயங்களால் இராப்பகலின்றி உழைத்து வந்தவர்கள், இன்று அதே காரணத்திற்காக சிறையிலிருக்க நேர்ந்திருக்கிறது என்றால், எந்த இயக்கத்திற்காகவும், எந்தக் கொள்கைக்காகவும், எந்த எண்ணத்திற்காகவும், எந்த நலன்களுக்காகவும் சிறைப்பட்டார்களோ அந்தந்த கொள்கையும், எண்ணமும், நலன்களும் நம்நாட்டு மக்களுக்கு உண்டாகி வாழவேண்டும் என்கிற எண்ணமுடைய ஒவ்வொருவரும் இனிச் செய்ய வேண்டியதென்னவென்பதில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்திப் பார்த்தால் எவ்வித முன்னேற்றங்களுக்கும் சங்கங்களும், பிரச்சாரங்களுமே உற்றதுணையாகும். ஆகையால் அவைகளை முன் தெரிவித்துக் கொண்டபடி நிறுவி பிரசார மூலம் நமது மக்களுக்கு விடுதலையளிக்குமாறு நமது இயக்கத் தோழர்களையும், நமதியக்கத்தில் அனுதாபமும், அபிமானமும் உள்ள தோழர்களையும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.

மற்றும் நமது கொள்கைச் சமதர்மமும், சமத்துவமுமானதற்கேற்றபடி நமதியக்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் சமானமானவர்களேயாவார்கள். நமது ஈ.வெ.ரா. உடனும் சா.ரா.க.வுடனும் மற்றுமுள்ள இயக்கத்தவர்களும் சமமேயாவார்களாகையால் தற்பொழுது நமது இயக்கப் பிரசாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ரா.வும், சா.ரா.க.வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவரும் அவர்களைப் போலராகி அவர்கள் தற்போது நம்மிடையிலில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறோம்.

(‘புரட்சி’ – தலையங்கம் – 28.01.1934)

தந்தை பெரியார் சிறைச் சென்றாலும் ‘புரட்சி’யின் பயணம் தொடர்ந்தது. பல்வேறு செய்திகள் கட்டுரைகள் வெளியான குறிப்பாக சோசலிசம் சார்ந்த படைப்புகள் ஏராளம் வெளியாயின. அதன் தலையங்கங்கள் மக்கள் விரோத அரசின் கொள்கைகளை சாடின. ‘புரட்சி’ இதழில் 22.04.1934 இதழில் மே தினத்தை ஒட்டிய ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.

மே தின விசேஷ அறிக்கை

அடுத்த வாரம் 29-தேதி வெளிவரும் நமது “புரட்சி”யில் மே தினம் கொண்டாட வேண்டிய விதம் முதலியன விபரமாக அறிவிக்கப்படும்.

1) மே மாதம் முதல் தேதி செவ்வாய்க்கிழமையன்று சகல நகரங்களிலும், கிராமங்களிலும் பொதுக்கூட்டங்களிடவேண்டும்.

2) பிற்பகல் அந்தந்த ஊர் சங்கக் காரியாலயங்களிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு பொதுக் கூட்டமிட வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும்.

3) பொதுக்கூட்டத்தில் உபன்யாச நிகழ்ச்சிகள் நடந்ததும் மே தின அறிக்கை தலைவரால் படிக்கப்பட்டு பொதுக்கூட்டத்தினர் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும்.

4) நாளது 29ஆம் தேதி “புரட்சி”யிலும் 30ஆம் தேதி “பகுத்தறிவு” ஏட்டிலும் மே தின அறிக்கை வெளிவரும்.

(‘புரட்சி’ – 22.04.1934)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *