சென்னை, ஜூன் 4- மத்தியப் பிரதேசம் குணா பகுதியைச் சேர்ந்த சத்தீஷ் சிட்ரே தலைமையில் பேராசிரியர்கள் (ஓய்வு) பல்வேறுதுறை அதிகாரிகள் குடும்பம் உள்ளிட்ட 41 பேர் நேற்று (03.06.2025) காலை பெரியார் திடலுக்கு வருகை புரிந்தனர்.
பேராசிரியர் முனைவர் அசோக் பரப் வைக்கம் தொடர்பான படங்கள் இருப்பதைப் பார்த்து விளக்கம் கேட்டதும் அவரோடு வந்த அனைவரும் வைக்கம் போராட்டம் மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொண்டனர்
மேலும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சேரன்மாதேவி குருகுலம் தொடர்பான ஓவியத்தைக் கண்டு அது குறித்த தகவலையும் அவர்கள் ஆவலோடு கேட்டு அறிந்துகொண்டனர்.
அய்யாவின் வாழ்க்கை தொடர்பான பல தகவல்களை அவர்கள் முதல்முறையாக கேட்டதாகக் கூறினர்.
பெரியார் திடலில் உள்ள புதிய நூலகத்தில் திராவிட இயக்க இதழ்கள் குறித்து வியந்து பார்த்து அதன் விபரங்களைக் குறிப்பெடுத்துகொண்டனர்.
அவர்கள் வருகை தந்த போது கலைஞர் பிறந்தநாளில் கலைஞர் சிலைக்கு மாலையிட திடலிலிருந்து துணைத்தலைவர் மற்றும் தோழர்கள் சென்றனர். அவர்கள் அணிந்திருந்த கருப்புச்சட்டை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் விடுதலை 91 ஆவது ஆண்டு, குடிஅரசு நூற்றாண்டு, ஆசிரியரின் அயராத பணி குறித்து கேட்டறிந்தனர்.
மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு சுயமரியாதை உணர்வு சென்னை வந்தபிறகு உள்ளத்தில் எழுந்ததாகவும், அதற்குக் காரணமான மூல இடம் பெரியார் திடல் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். விரைவில் அடுத்த குழு பெரியார் திடலுக்கு வருகை புரியும் என்றும் கூறி விடைபெற்றுச் சென்றனர்
மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அம்பேத்கரிய கொள்கைப்பற்றாளர்களும் பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை சென்று அங்குள்ள பவுத்த மதம் தொடர்பான இட்ங்களைப் பார்க்க செல்வார்கள். சென்னை வந்து இங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு செல்கிறார்கள். அவர்கள் சென்னை வரும் போது அவர்களுக்கு எழும்பூரில் உள்ள புத்தர் கோவிலிலும், வேப்பேரியில் உள்ள மகாராட்டிரா விருந்தினர் இல்லத்திலும் தங்க வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
அப்படி வருபவர்கள் மறக்காமல் பார்க்கும் இடம் தந்தை பெரியார் திடல், வேப்பேரி மகாராட்டிரா விருந்தினர் இல்லத்தில் பெரியார் திடல் குறித்த விபரங்களை வைத்துள்ளனர். இதனால் அங்கு தங்குபவர்கள் விமானத்தில் ஏறும் முன்பு பெரியார் திடல் வந்து அய்யாவின் நினைவிடம், கண்காட்சி அரங்கம், நூலகம், உள்ளிட்டவற்றை பார்த்து வியந்து சென்றனர்.
பொதுவாக குடும்பம் குடும்பமாக பெரிய குழுவாக வரும் இவர்கள் தென்னகத்தின் அம்பேத்கர் தந்தை பெரியார் இல்லத்தை சுற்றிப்பர்க்கும் உணர்வு உள்ளதாக கூறினார்கள்.
காரணம் மும்பை தாதரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவி டத்தில் அவரது இறுதிநாளில் பயன் படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் கைத்தடிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பெரியார் திடல் அருங்காட்சி அரங்கிலும் உள்ளதால் அவர்கள் தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத் கருக்கும் அனைத்து விதத்திலும் ஒற்றுமை உள்ளது என்று மகிழ்ந்து கூறினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குரைஞர் கங்காவ்னே குடும்பத்தார் மற்றும் 20 க்கும் மேற்பட்டவர்கள் மகாராட்டிரா மாநிலம் சத்தாராவில் இருந்து வருகை புரிந்தனர். அவர்களோடு வந்த கல்லூரி மாணவிகள் தந்தை பெரியார் குறித்து கட்டுரை ஒன்றினை சில நிமிடங்களில் எழுதித் தர, அது பெரியார் பிஞ்சில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.