சென்னை, ஜூன்.4- கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர், “எல்லா பிறந்தநாளுக்கும் (மார்ச்-1) நான் ஒரு திட் டத்தை அறிவிப்பது போன்று இந்த பிறந்தநாளுக்கு மனநிறைவான ஓர் அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகள் என்ற பெயர் கொடுத்து, சகோதர சகோதரிகளின் சுயமரியாதையைக் காத்தவர் கலைஞர். அவரது வழியில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப் படும்”என்றார்.
நியமன அடிப்படையில் தேர்வு
அதன்படி கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்திலேயே உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த 2 மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்த 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம் 650 மாற்றுத்திற னாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி யூனியன்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.