குரூப்-4 தேர்வு காலிப் பணியிடங்கள் அதிகரிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 4– தமிழ் நாட்டில் குருப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தேவைப்படும் அலுவர்கள், ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்காக குருப்-1, குருப்-2, குருப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், வெவ்வேறு அரசு துறைகளுக்கு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்கான குருப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் மே மாதம் 24ஆம் தேதி வரை பெறப்பட்டன. ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானபோது, முதலில் 6,244 காலியிடங்களே இடம்பெற்றன. பின்னர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இறுதியாக காலியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு குருப்-4 தேர்விலும் காலியிடங்கள் கடந்த ஆண்டு அளவுக்கு அதிகரிக்கப் படலாம் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள குருப்-4 தேர்வில் 3,935 காலியிடங்கள் இடம் பெற்றுள்ளன.

இது தோராயமான எண்ணிக்கைதான். தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு கலந்தாய்வு பணிகள் தொடங்குவது வரை காலிப் பணியிடங்களை சேர்க்கலாம்.

எனவே, பல்வேறு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து காலிப் பணியிடங்கள் வரும் பட்சத்தில் அந்த இடங்கள் இந்த குருப்-4 தேர்வுடன் சேர்க்கப்படும். தற்போது ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வு நடத்தப்படுவதால் காலியிடங்கள் உடனுக்குடன் அந்த ஆண்டு தேர்வுடன் சேர்க்கப்பட்டு விடுகின்றன.

எனினும் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.

மேலும், தற்போது அறிவிக்கப் பட்டிருக்கும் கல்வித்தகுதி உடைய புதிய பதவிகள் வந்தாலும் அந்த பணியிடங்களும் சேர்க்கப்படும். எனவே காலியிடங்கள் அதிகரிக்கவே செய்யும். ஏற்கெனவே அறிவிக்கப் பட்டதுபோல் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி எவ்வித தவறும் இல்லாமல் விரைந்து வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்வர்களின நலனை கருத்தில் கொண்டு விடைத்தாள் நடைமுறைகள் முற்றிலும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு ஜூன் 11ஆம் தேதிக்குள்ளும், நேர்காணல் இல்லாத பதவிகளுக்கான தொழில் நுட்பப் பணிகள் தேர்வுக்கு ஜூன் 25ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருப்-4 தேர்வுக்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் எழுதக்கூடிய ஒருங் கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலியிடங்களி்ன் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் குருப்-2 தேர்வில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *