நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

viduthalai
3 Min Read

 

நாகப்பட்டினம், ஜூன் 4- நாகை-இலங்கை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து நேற்று (3.6.2025) மீண்டும் தொடங்கப்பட்டது.

கப்பல் போக்குவரத்து

நாகை, இலங்கை காங்கேசன் துறை இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்த ஆண்டு (2024) ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.

மீண்டும் தொடக்கம்

இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது கடல் சீற்றம் தணிந்து சீரான வானிலை நிலவுவதால் ஜூன் 1ஆம் தேதி முதல் நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணி அளவில் கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது. அந்த கப்பலில் 112 பேர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டனர்.

 

அண்ணா பல்கலைக்கழக வளாக வழக்கு உட்பட

எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை, ஜூன் 4- அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவில்லை. புள்ளி விவரங்களைப் பார்த்தால் இது தெளிவாக தெரியும். 2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், குறிப்பாக ரவுடி, பழிவாங்கும், ஜாதி மற்றும் சமூகவாத அடிப்படையிலான கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான கொலைகள் பதிவாகியுள்ளன. இதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை.

நேர்மையான நடவடிக்கை

உளவுத் துறையின் தோல்வி மற்றும் சில முக்கிய வழக்குகளில் அரசியல் தாக்கம் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை. ஒரு சில தனிப்பட்ட சம்பவங்களை உளவுத்துறை தோல்வியாகக் கூறுவதில் நியாயம் இல்லை. அதற்கு பதிலாக, அந்த வழக்குகளை காவல்துறை எவ்வாறு கையாள்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பல முக்கிய வழக்குகளில், காவல் துறையின் நேர்மையான நடவடிக்கையால் தீர்ப்புகள் கிடைத்துள்ளன.

அரசியல் தலையீடு இல்லை

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை. இதேபோல், போலியாக என்கவுண்டர்கள் நடத்தப்படுவது இல்லை. காவல் துறை சட்டப்படி, கடுமையான சூழ்நிலையில்தான் தற்காப்புக்காக இதுபோன்று செய்கிறது. போதை மற்றும் மயக்கப் பொருள் விநியோகத்தையும், தேவையையும் கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையும், அரசும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

கள்ளச்சாராய சம்பவம் குறித்த குற்றச்சாட்டுக்கு, இரண்டு கள்ளச்சாராய சம்பவங்கள் நடந்தது உண்மைதான். ஆனால் இரண்டும் மெத்தனாலால் ஏற்பட்டவையே. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நீடித்த மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், உண்மையைச் சரிபார்த்து உரிய ஆதாரங்களைப் பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *