உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

viduthalai
7 Min Read

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்
சில பாடங்கள் (15)

பாடம் 15

குருதி உறவினும் மேலானது கொள்கை உறவு

சிறப்புக் கட்டுரை

வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்

21.3.2025 அன்று காலை மெல்பேர்ன் விமான நிலையத்தில் தோழர்களின் அன்பான வரவேற்பை ஏற்று வெளிவந்தபின்பு நேராக தோழர் தாயுமானவன் பாஸ்கரன் அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். அவரது இல்லத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோழர் தாயுமானவன்,அவரது இணையர் ஷீலா, மற்றும் ஷீலாவின் தாயார் திருமதி. வசந்தா காசிராஜன் ஆகியோர் எங்களை வரவேற்று விருந்து படைத்தார்கள். தாயுமானவன் அவர்கள் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்பெற்றவர். பல நாடுகளில் பணியாற்றிய அனுபவத்துடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது இணையர் ஷீலா அவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். தாயுமானவர் அவர்களின் தந்தை பாஸ்கரனார் ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தந்தை பெரியாரின் வழியில் திராவிடர் இயக்கத் தத்துவத்தை பரப்பும் களப்பணியிலும் இலக்கியப் பணியிலும் செயல்பட்டவர், முனைந்து செயல்பட்டவர். பொய்யாமொழி என்ற திராவிட இயக்க இலக்கிய இதழை நடத்தியவர். தாயுமானவனின் தாயார் பெயர் ‘கருணாநிதி’ என்பதே அவர்களது குடும்பத்தின் கொள்கைப் பின்னணிக்கான எடுத்துக்காட்டு. அவரது இணையர் ஷீலாவும், அவர்களின் தாயார் வசந்தா காசிராஜன் அவர்களும் ஆசிரியர் அவர்களிடமும் என்னிடமும் மிகுந்த மகிழ்ச்சியோடு உரையாடினர்.

தாயுமானவன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மற்றொரு திராவிடர் கழகக் குடும்பத்தின் விழுதாக மெல்பேர்னில் வேரூன்றி வரும் தோழர் மூர்த்தியின் இல்லத்திற்குச் சென்றோம். அவருடைய வீட்டில்தான் அடுத்த நான்கு நாட்களும் தங்கியிருந்தோம். மூர்த்தி அவர்களின் தந்தையார் அரங்கராசன் அவர்கள் கும்பகோணம் எரவாஞ்சேரி என்ற ஊரைச் சேர்நதவர். தனித்த ஆளுமையாலும் தன்னைச் சார்ந்த அனைவருக்கும் வழிகாட்டும் பண்பினாலும் அப்பகுதி மக்களால் ‘மாஸ்டர்’ என்று அழைக்கப்பட்டவர். தந்தை பெரியாரின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கியவர். மாஸ்டர் அரங்கநாதன் மறைவிற்குப் பிறகும் அவரது பிள்ளைகள் அனைவரும் திராவிடர்கழகச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் ஆசிரியரிடம் பெருமதிப்பு கொண்டவர்களாகவும் இருப்பவர்கள். அவரது இளைய மகன்தான் அரங்க.மூர்த்தி. மெல்பேர்ன் நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது இணையர் பெயர் மைதிலி புஷ்பராஜ் பாக்யலட்சுமி . மைதிலியின் பின்னிருக்கும் பெயர்கள் மைதிலியின் தந்தை தாயின் பெயர்களாகும். மைதிலி சுயதொழில் நடத்தி வருகிறார். அவர்கள் இல்லத்தில் நாங்கள் தங்கியிருந்த நாட்கள் தமிழ்நாட்டில் கழகத்தின் பிரச்சாரப் பயணங்களின்போது இயக்கத் தோழர்களின் வீடுகளில் தங்கியிருந்த உணர்வை ஏற்படுத்தியது.

மூர்த்தி அவர்களின் வீட்டிற்கு வந்து ஆசிரியர் ஓய்வெடுக்கும் அறைக்குச் செல்லும்போது அடுத்து என்ன நிகழ்ச்சி என்று கேட்டார். “அய்யா மாலையில் நம் வீட்டிலேயே தோழர்கள் குடும்ப சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்றார் மூர்த்தி. நாளைதானே பொதுக்கூட்டம். அதுவரை ஆசிரியர் ஓய்வெடுக்கலாம் என்று நினைப்பதற்குக் கூட வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன். சிறிது ஓய்வின்பின் தொடங்கிய குடும்ப சந்திப்பு வண்ணக் கோலங்களை எழுப்பிய மகிழ்ச்சிக் கொண்டாட்டமாய் அமைந்தது.

குடும்ப சந்திப்பு தொடங்கியவுடன் தோழர் அரங்க மூர்த்தி தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டு அனைவரையும் வரவேற்றார்.

தோழர் இளையமதி சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் . பொறியாளராக சிங்கப்பூரில் பணியாற்றிய போது தந்தை பெரியார் மன்றத்தில் இணைந்து செயல்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு பெரியார் -அம்பேத்கர் சிந்தனை வட்டத்தை அறிந்து கொண்டேன் என்று கூறினார்.

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தோழர் சுப்ரமணியம் வானியல் துறையில் பணியாற்றியவர். ஆஸ்திரேலியாவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பேராசிரியராகவும், பள்ளி ஆசிரியராகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஓமியோபதி மருத்துவம் பயின்று தேவைப் படுவோருக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்.

சிந்தனை வட்டத்தின் பொருளாளர் திருமலை நம்பி சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர். செயற்குழு உறுப்பினர் சுரேஷ் திருச்சியைச் சேர்ந்தவர். சிந்தனை வட்டத்தின் செயல்பாட்டாளர்கள் தோழர் சரவணன் இளங்கோவன், தோழர் வசந்தன் இருவரும் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள். அவர்கள் பேசும்போது எவ்வாறு சமூக ஊடகங்களாகிய முகநூல், x தளம் (ட்விட்டர்) மற்றும் வாட்சப் மூலமாக ஒத்த சிந்தனை கொண்ட பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள் என்பதையும் அது எவ்வாறு பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டமாக இணைய உதவியது என்பதையும் மிகச் சுருக்கமாக விளக்கினார்கள். அவர்களது உரைகள், மதவெறியர்கள் வெறுப்பை விதைக்கும் களமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களை மனிதநேயம் எனும் மூலிகையை விதைக்கும் நன்னிலமாகவும் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தன.

தோழர் தாயுமானவன், தான் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 1972 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் ஜெயங்கொண்ட சோழபுரம் வந்ததையும், தன் தந்தை பாஸ்கரனாருடன் சென்று தந்தை பெரியாரை சந்தித்ததையும், ‘இன்ஜினியரிங் படிப்பு’ படிப்பதைப் பற்றி தந்தை பெரியார் பாராட்டி ஊக்கப்படுத்தியதையும் 1981 ஆம் ஆண்டு பாஸ்கரனார் மறைந்தபோது ஆசிரியர் வந்து அவரது படத்தைத் திறந்து வைத்ததையும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் நடந்த சில சுவையான உரையாடல்கள் பெரும் உற்சாகத்தையும் கலகலப்பையும் சிரிப்பலைகளையும் ஏற்படுத்தின. அவை அனைத்தும் ஆசிரியரின் இயக்கப் பற்றையும் தான் சந்திக்கும் கழகத்தவர்கள் ஒவ்வொருவரையும் அவர் எவ்வாறு குடும்பப் பின்னணியோடு மனதில் பதியவைத்துக்கொண்டுள்ளார் என்பதற்கும் எடுத்துக் காட்டாக இருந்தன.

குடும்ப சந்திப்பில் பங்கேற்ற சாந்தி என்ற தோழர், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உருவாக்கிய வாசகர்வட்டத்தில் செயல்படுகிறவர். நூல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தன் குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது தன் தாய்வழித் தாத்தா செஞ்சியைச் சேர்ந்தவர் என்றும்,அவர்தான் திராவிடர்கழகம் பற்றி நிறைய செய்திகளைக் கூறுவார் என்றும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். “அவர் பெயர் என்ன?” என்று ஆசிரியர் கேட்டார்.  “அவர்பெயர் அப்பாண்டை நாதன்” என்று சாந்தி அவர்கள் கூறியவுடன், “ஓ,. அப்பாண்டைநாதன்..அவர் ஊர் வந்தவாசி அல்லவா?“ என்று ஆசிரியர் கேட்டார். சாந்தி அவர்கள் மகிழ்வுடன் ஆம் அவர் ஊர் வந்தவாசிதான் என்றார். அடுத்து அந்தப் பகுதியில் சமணர்கள் அதிகம். அப்பாண்டைநாதனும் சமணர்தான் என்று ஆசிரியர் எனக்குக் கூறினார்.

தேன்மொழி என்ற தோழர் காஞ்சீபுரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராக இருந்தT.A.G என்றழைக்கப்பட்ட டி.ஏ. கோபாலன் அவர்களின் பேத்தி. அவரது மகன் பொய்யாமொழி அவர்களின் மகள். தேன்மொழி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் T A G அசோகன் அவர்கள் என் சித்தப்பா, எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்தான் இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். திருமணத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன் என்றார். அவருக்குப் பிறகு இன்னும் மூன்றுபேர் பேசியபின் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒரு தோழர், “ என் பெயர் தயானந்தன், தந்தை பெயர் சந்திரசேகர், ஊர் சென்னை. சொந்த ஊர் இராணிப்பேட்டை. என் தாத்தா பெயர் என்.ஆர். முனுசாமி, அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார் என்று கூறியவுடன், ஆசிரியர் குறுக்கிட்டு, “ அவர் All India Backward Classes Commission Member முதன் முதலாக அமைக்கப்பட்ட பிற்படுத்ப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்,அவரை என்.ஆர்.எம். சாமி என்றுதான் சொல்வார்கள் “ என்று கூறிவிட்டு தேன்மொழியைப் பார்த்து “ உங்களுக்குத் தெரியுமா , இவர்கள் உங்கள் உறவுக்காரர்கள்தான்” என்று கூறவும் “என் மனைவிதான் தேன்மொழி “ என்று தயானந்தன் கூறவும் அச்சிறு கூட்டத்தில் வெடித்த சிரிப்பொலி அந்தப் பகுதி முழுவதும் கேட்டிருக்கும்.

சரண்யா என்ற தோழர் என் ஊர் கோயம்புத்தூர், என் இணையர் பெயர் பாலாஜி . எங்கள் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைத்தீர்கள் என்றார். பாலாஜி தோழர் மூர்த்தியின் தமக்கையின் மகன். சரண்யாவைத் தொடர்ந்து பேசிய அவரது தாயார் மல்லிகா தன் மகளின் திருமணத்திற்குப் பிறகே சுயமரியாதைத் திருமணம் பற்றியும், தந்தை பெரியார் கொள்கைகளைப் பற்றியும் தான் அறிந்து கொண்டதாக மகிழ்வுடன் குறிப்பிட்டார். பாலாஜியின் தம்பி விவேக்,அவரது இணையர் திவ்யா, அவரது பெற்றோர் அனைவரும் அந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

குடும்பப் பின்னணியில் திராவிடர்கழகத் தொடர்புகளைக் கொண்டவர்கள் மட்டுமன்றி தங்களது தேடலால் தந்தை பெரியாரை அறிந்து கொண்ட இளைஞர்களும் குடும்ப சந்திப்பில் பங்கேற்றார்கள்.

எழில் குமரன் என்ற இளைஞர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். சென்னையில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருந்து மறைந்த பஞ்சாட்சரம் (ஓமியோபதி மருத்துவர் ) அவர்களின் பெயரன் . அவர் தன்னை அறிமுகப்படு்த்திக் கொள்ளும்போது இந்த தகவலை ஆசிரியரிடம் கூறினேன். ஆசிரியர் பேருவகை அடைந்தார்.

கிருஷ்ணபாபு என்ற தோழர் திருச்செங்கோடு தாலுகாவில் இருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.தன் தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இருந்தவர் என்பதையும் அவசரநிலை காலத்தில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களை எதிர்த்துப் பேசியதற்காகச் சிறை சென்றார் என்பதையும் குறிப்பிட்டார். அவரது இணையர் ரேணு பொறியியல் பட்டதாரி. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர். அவர் தனக்கு இளம் வயதில் திராவிடர்கழகம் பற்றியோ தந்தை பெரியாரைப் பற்றியோ தெரி்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், திருமணமாகி சில ஆண்டுகளின் பின் ஆஸ்திரேலிய வந்தபிறகு நம்பிக்கைகள் குறித்த கேள்விகளை சிந்திக்கத்தொடங்கியதாகவும் அப்போது என்னுடைய ( வழக்கறிஞர் அருள்மொழி) கருத்துகளை யூ டியூப் வீடியோக்கள் மூலமாகப் பார்த்து தெளிவு பெற்றதாகவும் குறிப்பிட்டார். ரேணு-கிருஷ்ணபாபு இணையர் தங்கள் இரண்டு மகன்களுடன் குடும்ப சந்திப்பில் பங்கேற்றனர்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *