சென்னை, ஜூன் 3– வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர் களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் நேற்று (2.6.2025) திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு முக்கியக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இணையவெளி குற்றங்களிலிருந்து மாணவர்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணியர் போன்றவற்றிற்கான செயல்பாடுகளைப் பள்ளி நாட்களில் செயல்படுத்தலாம்.
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் தினமும் வருகை நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே வருகை தர வேண்டும்.
அவர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடவேளைகளில் உடற் கல்வி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை விளையாட்டில் ஈடுபட வைக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம், அய்ந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.