“தம்பி. தெரியுமா செய்தி? அண்ணா திருவாரூக்கு வரப் போகிறார். நபிகள் நாயகம் விழாவில் கலந்துகொள்ள…” என்றார் டி.என்.ராமன். (இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்களில் தலைசிறந்தவர் இவர்.)
இந்தச் செய்தி என் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. அண்ணா வரப்போகிறார். எனது இதயங்கவர்ந்த இலட்சியத் தலைவர் வரப்போகிறார். என்று என் உள்ளம் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளியது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன். 1938ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தபோதே, நான் என்னையொத்த சிறுவர்களுக்குத் தலைமை தாங்கி ஹிந்தி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் நடத்தியவன். மேலும் ‘முரசொலி’ என்னும் துண்டுத்தாளை அவ்வப்போது வெளியிட்டு என் எண்ணங்களை எழுத்துகளாக்கி, என் பணியைத் தொடங்கியவன்.
1940ஆம் ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டில்கூட அண்ணாவை அருகில் இருந்து காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது, இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு நெருக்கமாகி இருந்ததால், அண்ணாவைக் கண்டு மகிழலாம் எனப் பேராவல்கொண்டு இருந்தேன்.
‘விடுதலை’ ஏட்டில் அண்ணாவின் எழுத்துகள் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு இருந்தன. பின்னர், அவர் காஞ்சியில் இருந்து ‘திராவிட நாடு’ இதழைத் தொடங்கியதும் ‘இளமைப் பலி’ என்ற தலைப்புடன் ‘திராவிட நாடு’இதழுக்கு ஒரு கட்டுரை தீட்டி அனுப்பினேன். அதுவும் விரைவில் அண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது. அண்ணாவின் இதழில் என் எழுத்துகள் இடம்பெற்றதும் என் உற்சாகம் கரை புரண்டது. என் எழுத்துக்களை அண்ணா அங்கீகரித்து விட்டார் அல்லவா? இந்தச் சமயத்தில்தான் அண்ணா திருவாரூர் வரும் செய்தி தித்திப்பாக எனக்குத் தரப்பட்டது. என் இயல்பிற்கேற்றவாறு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளில் நானும் முனைந்தேன். விளம்பரத் தாட்கள் விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டுதல், கொடி தயாரித்தல், மேடை அமைத்தல் போன்ற சிறு சிறு ஆக்க வேலைகளில் ஈடுபட்டேன்.
“கருணாநிதி! உன்னை அண்ணா அழைத்து வரச் சொன்னார்” என்று வந்தார் ஒருவர்.
“அண்ணாவா?”
”ஆமாம், ஆமாம். ‘திருவாரூரில் கருணாநிதி என்பவர் யார்? அவரை நான் பார்க்க வேண்டும்” என்றார். “நமது இயக்கத்தில் நீ ஒரே ஒரு கருணாநிதிதானே!” என்றார்.
கையைத் துடைத்துக்கொண்டு உடனே புறப்பட்டேன். என் உள்ளத்தில் அச்சம் ஒரு பக்கம், ஆனந்தம் ஒரு பக்கம், வியப்பு ஒரு பக்கம், திகைப்பு ஒரு பக்கம், மகிழ்ச்சி பாதி, பயம் பாதி. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு புறப்பட்டேன்.
வக்கீல் வெங்கடாச்சாரியார் வீட்டின் மாடியில் அண்ணாவைத் தங்கவைத்து இருந்தார்கள் அண்ணாவைச் சூழ்ந்து திருவாரூரின் இயக்கப் பிரமுகர்களான திரு டி.என்.ராமன், டி.என்.லட்சப்பா, ரங்கராசு, சிங்கராயர் போன்றோர் அமர்ந்து இருந்தனர்.
அண்ணாவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “அழைத்தீர்களாமே?” என்றேன். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.
“நீதான் கருணாநிதியா?” ஒலித்தது. வெண்கல மணி
“ஆமாம், அண்ணா!”
“என்ன செய்கிறாய்? படிக்கிறாயா தம்பி!”
”ஆமாம்.”
”’இளமைப் பலி’ எழுதியது நீதானே?
“நான்தான் எழுதினேன்!”
சரி. கட்டுரை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் உனக்கு இப்போது அந்த வேலை தேவை இல்லை. படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு எழுதத் தொடங்கலாம். கவனமாகப் படி” என்றார் அண்ணா.
என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எழுத்துப் பணியை நிறுத்தச் சொல்கிறாரே! என்னால் இயலுமா?
வருகிறேன், அண்ணா!” என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன். அந்த முதல் சந்திப்பு இன்று என்னைத் தமிழகத்தின் முதலமைச்சராக உயர்த்தி இருக்கிறது. ஏறத்தாழ 26 ஆண்டுகள் அண்ணாவுடன் இணைந்துவிட்ட நான், அவர் கிழித்த கோட்டைத் தாண்டியதில்லை. “படிப்பில் கவனம் கொள்” என்றாரே, அந்த ஆணையை மட்டும்தான் மீற நேர்ந்திட்டது.
“இன்று கருணாநிதி நான் சொல்வதை அப்படியே நூற்றுக்கு நூறு கேட்டு நடக்கும் நல்ல பழக்கம் அன்றே அவருக்கு இருந்திருக்குமானால், இன்று அவர் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்திருப்பார்!” என்று அண்ணா பலமுறை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்!
நன்றி: ‘ஆனந்த விகடன்’ 18.1.1970