சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 2  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டல் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி ஆயுள்தண்டனை  வழங்கியுள்ளார்.

ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட அனைத்து 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக் கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனையுடன், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுப விக்க வேண்டும் என்றும், 25,000 முதல் 90,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவி ஒருவரை 2024 டிச.23-ஆம் தேதி இரவு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அதை தனது அலைபேசியில் காட்சிப் பதிவு எடுத்த தாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற் கொண்டு, கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞான சேகரன் (37) என்பவரை டிச.24-ஆம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் அதுதொடர்பாகவும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.  இதற்கி டையே ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த வழக்கை சிபிஅய் விசார ணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக் குரைஞரான வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் புலன் விசாரணை மேற்கொள்ள அய்பிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, பிருந்தா, அய்மான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த புலனாய்வுக்குழு அதி காரிகள், கடந்த பிப்.24-ஆம் தேதி சைதாப்பேட்டை 9-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தி்ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் ஞான சேகரன் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறி அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மார்ச் 7-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏப்.23-ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் எம்.பி.மேரி ஜெயந்தியும், கைதான ஞானசேகரன் தரப்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்குரைஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

நாள்தோறும் விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட 29 பேர் சாட்சியம் அளித்தனர். குற்றத்தை நிரூபிக்க 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மே 28-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் பலத்த பாதுகாப்புடன் அன்றைய நாள் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நீதிபதி, ‘உங்கள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) 126(2) (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்திசென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) – (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) (விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(B) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ)-ன் கீழ் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமி்ன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் உங்களை குற்றவாளி என தீர்மானித்து தீர்ப்பளிக்கிறேன்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *