கருநாடக சட்டப்பேரவையில் வாஸ்துவின் பெயரால்
4 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் மூடப்பட்ட கதவு திறப்பு
பெங்களூரு, ஜூன் 26 – கருநாடக சட்டப் பேரவையில், வாஸ்து சரியில்லை என்று நான்கு ஆண்டு களாக பூட்டியே வைக்கப் பட்டிருந்த கதவை, புதிய முதலமைச்சர் சித்தராமையா திறந்துள்ளார்.
“மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும்; வாஸ்து என்ற பெயரில் கதவுகளை மூடுவதெல்லாம் மூட நம்பிக்கை” என்றும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கருநாடகத்தில் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் ‘அன்ன பாக்யா’ திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இந் நிலையில், இந்த திட்டம் குறித்து, பெங்களூரு சட்டப்பேரவையான ‘விதான சவுதா’வில், முதலமைச்சர் சித்தராமையா, கடந்த 24.6.2023 அன்று அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக வந்த சித்தராமையா, தனது அலுவலகத்தின் தெற்குப்பகுதி கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது, வாஸ்து சரியில்லை என்பதன் காரணமாக தெற்குப்புற கதவை மூடிவைத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித் துள்ளனர். இதைக் கேட்ட முதல மைச்சர் சித்தராமையா, அரசு அலுவலகத் திலேயே, அதுவும் சட்டப்பேரவையிலேயே இப்படியொரு மூடநம்பிக்கையா? என்று அதிர்ந்து போனார்.
அத்துடன், ‘மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்’ என்று கூறி, மூடநம்பிக் கையால் மூடப்பட்ட அந்தக் கதவை உடனடியாக திறக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்கு வாசலில் இருந்து உள்ளே வந்த பணியாளர்கள் தெற்கு வாசலை திறந்தனர். தெற்கு கதவு திறக்கப்பட்டதும் சித்த ராமையா அதே கதவு வழியாக தனது அலுவலகத்திற்குள் நுழைந் தார்.
“ஆரோக்கியமான மனம்; தூய்மையான உள்ளம்; மக்கள்மீது அக்கறை; நல்ல காற்று – வெளிச்சம் ஆகியவையே நல்ல வாஸ்து; மாறாக வாஸ்து என்ற பெயரில் சுவர்களை இடிப்பது, கதவுகளை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு மாற்றம் செய்வது உள்ளிட்டவை வாஸ்து அல்ல. அது மூடநம்பிக்கை” என அதிகாரி களிடம் கூறினார்.
இந்த அறையை இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்த மதச்சார் பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி, பாஜக தலைவர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி யுள்ளனர். எனினும், கடந்த 4 ஆண்டுகளாக வாஸ்து சரியில்லை என்று கூறி, தெற்குப்புற கதவு பூட்டப்பட்டே இருந்தது.
இந்நிலையில்தான், மூடப்பட்ட அந்தக் கதவைத் திறந்து, தற்போதைய முதலமைச்சர் சித்த ராமையா பயன்படுத்த தொடங்கி யுள்ளார். முதலமைச்சர் சித்த ராமையாவின் இந்த நடவடிக்கை பலரின் பாராட்டுதல்களைப் பெற் றுள்ளது.
கருநாடக முதலமைச்சராக இருப்பவர் சாம்ராஜ் நகர் மாவட்டத் துக்கு சென்றால் பாதியிலேயே பதவியை இழப்பார் என்றும் ஒரு மூட நம்பிக்கை காலம்காலமாக இருந்து வந்தது. இதையும் கடந்த 2013 முதல் 2018 வரையிலான பதவிக்காலத்தில் சித்தராமையா உடைத்தெறிந்தார்.
பலமுறை சாம்ராஜ்நகர் மாவட் டத்திற்குச் சென்றுவந்த சித்த ராமையா, 5 ஆண்டு முழுமையாக பதவிக் காலத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.