நாட்டில் நடப்பது இரு வகையான கருத்துப் போரே!
திராவிட மாடல் ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் சிறப்பானவைகளே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்னும்
சமூகப் புரட்சியை செய்வது ‘திராவிட மாடல்’ அரசின் தனித்தன்மையாகும்
வேலூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
திராவிட மாடல் ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் சிறப்பானவைகளே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்னும்
சமூகப் புரட்சியை செய்வது ‘திராவிட மாடல்’ அரசின் தனித்தன்மையாகும்
வேலூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
வேலூர், ஜூன் 1 மற்ற மற்ற சாதனைகளைச் செய்வதைக் காட்டிலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான திட்டத்தை செயல்படுத்துவது புரட்சிகரமானது. இது திமுக நடத்தும் ‘திராவிட மாடல்’ அரசின் சிறப்பான சாதனை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (31.5.2025) வேலூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
தந்தை பெரியார் அவர்களால் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘குடிஅரசு’ என்ற சமூகப் புரட்சி ஏட்டிற்கும், 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமான சமுதாய இயக்கத்திற்கும் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடெங்கும் சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் எல்லாம் ஒன்றுதான்! அந்த வகையில்தான் திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகள், சுயமரியாதை இயக்கத்தினுடைய லட்சியங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் வளர்ந்து, இன்றைக்குத் திராவிட மாடல் ஆட்சியாக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் அது சிறப்பான அளவிற்குப் பல்வேறு சாதனைகளையெல்லாம் செய்து வருகிறது.
அதன் காரணமாகத்தான், சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பெற்ற அதே ஆண்டில் தொடங்கப் பெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் – முழுக்க முழுக்க ஜாதிய வருணாசிரம தர்ம தத்துவத்தையும், ஸநாதனத் தத்துவத்தையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக அவர்கள் முழு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, இரு வகையான கருத்தியல் போர் இங்கே நடைபெறுகின்றது.
இரண்டு விதமான கருத்துப்போர்!
தோற்றத்தில் அரசியலாகக் காணப்பட்டாலும், முழுக்க முழுக்க இரண்டு வகையான கருத்தியல் போர்கள்தான் இந்த இயக்கங்கள் மூலமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில்தான், மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காக சுயமரியாதை இயக்கத்தினுடைய அடித்தளம், அடிக்கட்டுமானம் வலுவோடு இருக்கிறது; அந்த அடிக்கட்டுமானம் குலையக்கூடாது. அதை எப்படியாவது சிதைக்கவேண்டும் என்பதற்காகத்தான், கூலிப் படைகளையும், மற்றவர்களையும் அழைத்து, பெரியாரின் பிம்பத்தை உடைக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.
அதற்கு இங்கே இடமில்லை என்று காட்டுவதற்காகத்தான் நாடு முழுவதும் சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டைத் தாண்டி, சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பரவியிருக்கின்றன.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளாக இருந்தாலும், அங்கேயெல்லாம் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் ஓர் அகில உலக இயக்கமாக – மானுட இயக்கமாக – ஆங்காங்கே என்னென்ன வகையில் பிரச்சாரப் பணிகள் செய்யவேண்டுமோ அதனை செய்துகொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில், மிகச் சிறப்பான வகையில், தோழர்கள் இங்கே அருமையான கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் பங்கேற்கவே இங்கே வந்திருக்கின்றோம்.
‘திராவிட மாடல்’ ஆட்சியில் எது சிறந்த திட்டம்?
செய்தியாளர்: கடந்த நான்கு ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் இங்கே புத்தகம் வெளியிட்டீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், எந்தத் திட்டங்கள் மிகச் சிறப்பான திட்டங்கள் என்று உங்கள் பார்வையில் படுகிறது?
தமிழர் தலைவர்: நீங்கள் சொல்வது போன்று, எந்தத் திட்டத்தையும் பிரித்துச் சொல்ல முடியாது – எல்லாமே வளர்ச்சித் திட்டங்களாகும்.
உதாரணம் சொல்லவேண்டுமானால், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம், ஜாதி தீண்டாமை ஒழிப்பிற்கு வகை செய்யும் சட்டமாகும்.
சாதாரணமாக, பாலங்கள் கட்டலாம், பள்ளிக்கூடங்கள் திறக்கலாம், மருத்துவமனைகளைத் திறக்கலாம். ஆனால், அதையெல்லாம்விட சமூகப் புரட்சி மேலானது – முக்கியமானது! அந்த சமூகப் புரட்சிக்காக துளியும் ரத்தம் சிந்தாமல், அமைதிப் புரட்சியாக வந்தது எப்படி என்றால், தந்தை பெரியார் போராடியதால், முதலமைச்சராக இருந்த கலைஞர், அதைச் சட்டத்தின்மூலமாக செய்யலாம் என்று அய்யாவிற்கு உறுதி கொடுத்தார். ஆனால், பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியின் காரணமாக நிறைவேற்ற முடியாத நிலையில் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லை என்று வேதனைப்பட்டார் கலைஞர்.
அந்தப் போராட்டம், ஓர் அரை நூற்றாண்டு கால போராட்டமாகும். இந்த ஆட்சியில்தான், மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், கலைஞருடைய வேதனையையும் போக்கி, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளையும் அகற்றினார்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்களுக்கு பணி நியமனங்களையும் வழங்கி வருகிறார். இது சாதாரணமான செய்தி அல்ல.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு “விஸ்வகர்மா யோஜனா’’ என்ற திட்டத்தை அதாவது மறைமுகமாக பழைய குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று நாக்கில் தேனைத் தடவுவதுபோன்று கொண்டு வருகிறது.
ஆகையால் தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சி, அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
மும்மொழிக் கொள்கை என்பது
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு
அதேபோன்று, மும்மொழிக் கொள்கை என்ற பெயரால், நம் பண்பாட்டை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அதற்குத் தக்க பதிலடியாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், மும்மொழிக் கொள்கைத் திட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று துணிந்து சொன்னார்.
ஒரு பக்கம் நிதி நெருக்கடி; இன்னொரு பக்கம் ஆளுநர் போன்ற நபர்களின் அடாவடித்தன அரசியல். கூலிப்படைகளைத் தூண்டி விட்டு ஆங்காங்கே பிரச்சினைகளை ஏற்படுத்துவது.
இவற்றையெல்லாம் தாண்டி, திராவிட மாடல் அரசு அன்றாடம் சாதனைகளைச் செய்து வருகிறது. மருத்துவத் துறையில், கல்வித் துறையில் – இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலேயும் இல்லாத அளவிற்குச் சாதனைகளைச் செய்துகொண்டு வருகிறது.
எனவே, இந்த சாதனை உயர்வா? அந்த சாதனை உயர்வா? என்று ஒப்பிட முடியாத அளவிற்கு, சாதனைத் திருவிழாவாகவே ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சரின் சாமர்த்தியம்!
ஆகவேதான் சொல்கிறோம், மீண்டும் உங்களுக்கு வலியுறுத்தி சொல்லவேண்டிய கருத்து என்னவென்றால், சமுதாயப் புரட்சி, எந்தவிதமான கலவரங்கள் இல்லாமல் – மதக் கலவரமோ, ஜாதிக் கலவரமோ இல்லாமல், அமைதியாக செய்வது என்பது இருக்கிறதே, அதுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் சாமர்த்தியம். அதை இன்றைக்கு உலகமே பாராட்டிக் கொண்டிருக்கின்றது.
எனவே, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் என்றைக்கும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கக்கூடிய சாதனைகளாகும்.
செய்தியாளர்: எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டை சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சூழ்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பு; அண்ணா பல்கலைக் கழக வளாக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
தமிழர் தலைவர்: பொள்ளாச்சி பாலியல் வழக்குக் குற்றவாளிகளுக்கு நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் அண்ணா பல்கலைக் கழக வளாக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அது திராவிட மாடல் ஆட்சியில்தான்.
எனவே, அவதூறுகளை இந்த ஆட்சியின்மீது அள்ளி வீசலாம் என்று நினைக்கிறார். ஆனால், மக்களுக்கு எது உண்மை? எது பொய்? என்று மிகத் தெளிவாகத் தெரியும்.
செய்தியாளர்: ஞானசேகரன் வழக்கில், நீதிமன்றம்தானே நடவடிக்கை எடுத்தது?
தமிழர் தலைவர்: எல்லா வழக்குகளிலும் நீதிமன்றம்தான் கடைசியில் தீர்ப்பு கொடுக்கும். அப்படியில்லாமல், எடப்பாடி பழனிசாமியா தீர்ப்பு எழுதுவார்?
வழக்கில், அரசு வழக்குரைஞர், விசாரணை அதிகாரிகள் எல்லாம் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான், அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.
இவ்வளவு நாள்கள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்குத் இது தெரியவில்லையே என்று நாங்கள் வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்.
செய்தியாளர்: ஒன்றிய அரசின் ‘‘ஆப்ரேசன் சிந்தூர்’’ நடவடிக்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இதில் யாருக்கும் கருத்து வேறுபாடே கிடையாது. நாட்டினுடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லும்போது, எல்லோரும் ஒன்றாகத்தான் இருப்போம்.
இதற்கு முன் கார்கில் போர் நடந்தபோதும் சரி, அதில் கட்சியில்லை, மதமில்லை, பேதமில்லை என்ற உணர்வுதான்.
ஹிந்துத்துவா ஆதிக்கம் பற்றி…
செய்தியாளர்: பெரியார் காலத்திலிருந்தே ஹிந்துத்துவாவை பின்னுக்குத் தள்ளிதான், திராவிடர் கழகம் வளர்ந்திருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டு போராடித்தான் அந்த நிலையை உருவாக்கினீர்கள். ஆனால், மீண்டும் ஹிந்துத்துவாவின் ஆதிக்கம் இன்றைக்கு அதிகமாக இருக்கிறதே. கல்வியிலேயே குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற சூழ்நிலையில், திராவிட கட்சிகள் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டவில்லையே! துரைமுருகன் போன்றவர்கள் ‘சாமி’ கும்பிடுகிறார்கள். கோவில் கருவறையில் நின்று ‘சாமி’ கும்பிடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்துத்துவா எதிர்ப்பு உணர்வை இழந்து வருகிறது என்பது உண்மைதானே?
தமிழர் தலைவர்: 2021 ஆம் ஆண்டு கரோனா தொற்று நோயால் நிறைய பேர் இறந்தார்கள். அதற்குப் பிறகும் வேறு விதமான உருவில் கரோனா வந்தது. இப்போதும் திடீரென்று கரோனா தொற்று பரவுகிறது.
ஆகவே, கரோனா தொற்று பரவுவதால், மருத்துவக் கல்லூரிகள் வளரவில்லை என்று அர்த்தமா? மருத்துவம் வளரவில்லை என்று அர்த்தமா?
கரோனா போன்ற நோய்கள் வரும்; அந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு மருத்துவ விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அதேபோன்று சமுதாயத்திற்கு வருகின்ற நோய்க்கு மருந்தாக சமுதாய விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்.
நோய்கள் அதிகமாகிவிட்டன. ஆகவே, மருத்துவக் கல்லூரிகளை மூடிவிடலாம் என்று சொல்ல முடியாது.
புதுப்புது நோய்கள் வரும்; அதேபோன்று புதுப்புது ஆசாமிகள் வருவார்கள்; புதுப்புது கூலிப்படைகள் வரும். 8 சதவிகிதம் வாக்குகள் எங்களிடம் இருக்கிறது என்று ஏமாற்றுவார்கள். உண்மையில் ஒரு சதவிகிதம்கூட அவர்களிடம் இருக்காது.
ஆகவே, இதுபோன்று பல பேர், பல ரூபத்தில், பல கிருமிகள் வரும். அந்தந்த கிருமிகளுக்கு மருந்துகளை அந்தந்த காலகட்டத்தில் கண்டுபிடித்து அதனை தடுப்பார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
அதேபோல, சமூகத்திற்கு ஏற்படும் நோய்க் கிருமிகளை ஒழிப்பதற்காக திராவிடத்தில் ரொம்ப ஸ்ட்ராங்கான ஊசி இருக்கிறது – அதுதான் ஈரோட்டு ஊசி. அதைப் போட்டால் சரியாகிவிடும்.
பெரியார் பெயருக்குப் பின்னால்
ஜாதிப் பட்டம் பற்றி….
ஜாதிப் பட்டம் பற்றி….
செய்தியாளர்: ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வில் பெரியார் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போட்டிருக்கிறார்களா?
தமிழர் தலைவர்: இதுகுறித்து, ‘விடுதலை’யில் அறிக்கை எழுதியிருக்கின்றோம்.
1929 ஆம் ஆண்டில், செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், தந்தை பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்புப் பற்றித் தீர்மானம் போட்டார். ஆனால், 1927ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் ஜாதிப் பட்டத்தைத் துறந்துவிட்டார்.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி., தேர்வில், சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு சுயமரியாதை இயக்கம் வளர்ந்திருக்கிறது.
ஆகவே, முதல் வெற்றி சுயமரியாதை இயக்கத்திற்கு.
இரண்டாவது, அந்தக் கேள்வியிலும் பெரியார் என்றுதான் போடுகிறார்கள். ஆனாலும், இதுபோன்று கேள்வியை கேட்டு இருக்கின்றோமே, அதனால் மோடி கோபித்துக் கொள்வாரோ என்பதினால், ‘‘நாயக்கர்’’ என்பதைச் சேர்த்துவிட்டார்கள்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.