சென்னை, ஜூன் 1- “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், ஸநாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை ஸநாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார்.
நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் “வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த ஜி.யூ.போப் “மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் கடந்து அனைத்துலக மனிதனைப் பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – கெடுக உலகியற்றியான்.” என கற்பனை கருத்தியலை சாடி, உழைப்பின் மேன்மை குறித்து திரும்ப, திருப்ப எடுத்துக் கூறி, மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், ஸநாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில்
511 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
சென்னை, ஜூன் 1- இந்தியாவில் நேற்று (31.5.2025) ஒரே நாளில் 511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளா, கருநாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சமீப காலமாக கரோனா பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. எனவே மாவட்ட சுகாதார அலுவலர்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இன்புளுயன்சா உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்களை பரிமாற வேண்டும்.
தொற்று காணப்படும் பட்சத்தில் அதற்கான கள மருத்துவ குழு அதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உள்ளிட்டவைகள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து தேவையான படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் முகக் கவசம்
பொதுமக்கள் தங்களது கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும். சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் முக்கியம். கூட்டமான மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும். இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இடைவெளியை…
கைகளால் கண், காது, வாய் ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் அவசியம். பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி இருப்பவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருத்தல் அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.