அந்நாள் – இந்நாள் திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்த நாள் இன்று (1.6.1888)

viduthalai
3 Min Read

தாழ்ந்து கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பி இனமான எழுச்சியை ஊட்டிய தந்தை பெரியாரின் போர்ப்படைத் தளபதிகளில் முதன்மையானவர் தான் திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம். தந்தை பெரியாரின் பேரன்பிற்கும். பெரும் மதிப்பிற்கும் உரியவராய் திகழ்ந்திட்ட பன்னீர் செல்வம் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே அமைந்துள்ள செல்வபுரம் என்னும் ஊரில் 1888 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாள் பிறந்திட்டார்.

ஊரின் பெயருக்கு ஏற்ப செல்வக் குடும்பத்தில் தோன்றியவர் தான் செல்வபுரம் சீமான் எனும் சிறப்புக்குரிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆவார். அவர் பிறந்திட்ட இல்லத்தின் பெயரும் செல்வ விலாஸ் என்பதாகும்.

லண்டனில் சட்டப்படிப்பு

அவர் தனது கல்லூரிப் படிப்பை திருச்சியில் படித்து, பார்-அட்-லா பட்டப்படிப்பு பயில லண்டன் சென்று கற்றுத் தேர்ந்து 1912 இல் தமிழ்நாடு திரும்பினார். அக்கால கட்டத்தில் தான் சென்னை ராஜதானியில் திராவிட சங்கம் தொடங்கி அதன் மூலம் திராவிடர் இல்லத்தை நீதிக்கட்சியின் மூலவர் என்ற பெருமைமிகு டாக்டர் நடேசனார் நடத்தி வந்தார். சென்னையில் பார்ப்பனரல்லா தார் தங்கி கல்வி பயில இது தவிர வேறு இடமேயில்லை. பார்ப்பனரல்லாத மாணவர்கள் கல்லூரியில் படிக்க இவ் விடுதி ஒன்றே பார்ப்பனரல்லாதார் சரணாலயமாக இருந்தது என்றால் மிகையில்லை.

நீதிக்கட்சியில்
இணைந்து சேவை

சமூகத்தில் வர்ணாசிரம கொள் கைக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியில் நிலவும் பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதவர்களின் உரிமைக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியில் 1916இல் தன்னை இணைத்துக் கொண்ட பன்னீர் செல்வம் அவ்வியக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவரானார். 1918 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் மாநாட்டை தஞ்சையில் எழுச்சியோடு நடத்தினார். இம்மாநாட்டில் பிட்டி தியாகராயரும். டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

ஜில்லா போர்டு தலைவர்

1924 – 1930 வரை தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக இருந்தார். அந்த காலத்தில் அவர் ஆற்றிய சேவையை இங்கிலாந்திலிருந்து பார்வையிட வந்த சர் சைமன் குழு வெகுவாகப் பாராட்டியது.

அரசர் கல்லூரி

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவை யாற்றில் அரசு உதவியுடன் இயங்கிய கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டும் கற்பித்து வரப்பட்டது இவர் தலைவராக இருந்தபோது அதை மாற்றி தமிழ் கற்றுத்தர ஆணையிட்டார். சமஸ்கிருத கல்லூரி என்றிருந்ததை “ராஜாஸ் கல்லூரி” என்று பெயர் மாற்றினார். பின்னர் “அரசர் கல்லூரி” என்று தமிழில் பெயரிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய சில ஊர்களில் இயங்கி வந்த ராஜ சத்திரங்களின் கல்விக் கூடங்களில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேறு பாட்டை களைந்தார். ஒரே மாதிரியான உணவு வழங்க, ஒரே இடத்தில் தங்க உத்தரவிட்டார்.

வட்ட மேசை மாநாட்டில் உரை

1930 மற்றும் 1931ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் நீதி கட்சி சார்பில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மற்றும் தனி தொகுதி கேட்டு உரையாற்றியவர்.

நீதிக்கட்சி தலைவர் பெரியார்

ஹிந்தியை எதிர்த்து போராடிய தந்தை பெரியார் சிறையில் அடைக்கப் பட்ட போது சிறையிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுத்தனர், தலைவர் உரையை தற்காலிக தலைவரான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் படித்தார். அப்போது அவருக்கு சூட்டப்பட்ட மாலையை எடுத்து என் தோளுக்கு இடப்பட்ட மாலையை தந்தை பெரியாரின் தாளுக்கு சூட்டுகிறேன் என்று மனமுருக பேசினார். இச்செய்தியை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தான் எழுதிய திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் என்ற நூலில் மெய்சிலிர்க்க மிக உருக்கமாக வடித்துள்ளார்.

இங்கிலாந்து நியமித்த ஆலோசகர்

மாவட்ட அளவில் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றிய பன்னீர் செல்வம் அவர்கள் தந்தை பெரியாரின் சமூக நீதி – ஹிந்தி எதிர்ப்பு – பார்ப்பன எதிர்ப்பு மற்றும் இன மானம் காக்கும் இணையற்ற பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்திய மந்திரி எனப்படும் இந்திய அரசு செயலாளருக்கு உதவியாக உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவுக்கு – ஆலோசகராக இங்கிலாந்து அரசால் நியமிக்கப்பட்டார்.

இச்செய்தியை அறிந்த தந்தை பெரியார் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். காரணம். திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டிருந்த நிலையில் இப்பொறுப்பேற்கும் பன்னீர் செல்வம் மிகவும் பயன்படுவார் என்று தந்தை பெரியார் எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.

ஓமன் விமான விபத்து

அம்மகிழ்ச்சி நீடிக்கவில்லை. செல்வம் இங்கிலாந்து சென்ற ‘அனிபல்’ ராணுவ விமானம் ஓமன் கடலுக்கு மேலே பறந்து சென்று ஜார்ஜாவில் இறங்குவதற்கு முன் தொடர்பு அற்றுப் போனது விமானம் விபத்துக்குள்ளானது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 01.03.1940 அன்று விடியற்காலை சர்.ஏ.டி பன்னீர் செல்வம் மறைந்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *