சென்னை, மே 31– தமிழ்நாடு ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, வரவிருக்கும் 3 மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையாக வழங்க ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருப்பதால், தமிழ்நாடு அரசு வரும் மாதங்களில் ஒரே தவணையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ரேசன் கடைகளில், 2.21 அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதில், 1.11 கோடி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான, 2.05 லட்சம் டன் அரிசியையும், 8,576 டன் கோதுமையையும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. 1.10 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்கிறது.
கடந்த பருவ காலத்தில் நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்டவை அரசால் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அரிசி, கோதுமை வரத்து அதிகம் இருப்பதால், கிடங்குகளில் சேமித்து வைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க மாநில அரசுகளை, ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்கு ஏற்ப, மூன்று மாத பொருட்களையும் ஒரே தவணையில் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஒன்றிய அரசிடம் மூன்று மாதங்களுக் கான பொருட்களை வாங்க தமிழ்நாடு சம்மதம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ரேசன் கடைகளில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், மூன்று மாதங்களுக்கான இலவச அரிசியை ஒரே தவணையில் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே தவணையா?
மூன்று மாதங்களுக்கான அரிசியை ஒரே தவணையாக வரும் ஜூன் மாதத்தில் வழங்கலாமா அல்லது ஜூலையில் வழங்கலாமா என்பது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.