உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

viduthalai
5 Min Read

பாடம் 14

குறிக்கோளை எட்டும்வரை ஓய்வில்லை

கேன்பரா நகரத்தின் அமைதியான ஒரு குடியிருப்புப் பகுதியில்  பகுதியில் அமைந்திருந்தது சித்ரா அரவிந்த் அவர்களுடைய இல்லம். சித்ரா அவர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றுபவர். இது நாம் அதிகம் அறிந்திராத மொழிபெயர்ப்புப் பணி. ஆஸ்தி ரேலிய நீதிமன்றங்களிலும் குற்ற விசாரணைகளிலும் தமிழ்மொழி பேசுவோர் தொடர்புடைய வழக்குகளில் சாட்சிகள் தமிழில் பேசுவதை அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்வதும், அவர்கள் கேட்கும் கேள்விகளை சாட்சிகளுக்கு மொழிபெயர்த்து சொல்வதும்தான் இந்த மொழிபெயர்ப்பாளர்களின் பணி. அவர்களுக்கு Official Interpreter என்று பெயர். தமிழ்நாட்டில் இருந்து வெவ்வேறு பணிகளுக்காக ஆஸ்திரேலியா செல்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகோ அல்லது பகுதி நேரப் பணியாகவோ இத்தகைய மொழிபெயர்ப்பாளர் பணியைச் செய்கிறார்கள். ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்களும் இத்தகைய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரே துறையில் பணியாற்றுவதால் அறிமுகமாகி தந்தை பெரியார் பற்றிய சிந்தனைகளையும், திராவிடர் கழகம் பற்றியும் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதால் ஒத்த சிந்தனைகளால் அறியப்பட்டவர் சித்ரா. ஆசிரியரின் வருகையை அறிந்து கேன்பராவில் உள்ள தங்கள் உறவுகளையும் சேர்த்து இந்த குடும்ப சந்திப்பை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

திராவிடர் கழகம்

மெல்பேர்ன் விமான நிலையத்தில் வரவேற்பு.. இடமிருந்து வலமாக தோழர்கள் அரங்க. மூர்த்தி, இளையமதி, நந்தகுமார், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேசு, ஆசிரியர், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், அருள்மொழி, பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின்
பொருளாளர் திருமலை நம்பி, சுப்பிரமணியம், அண்ணாமலை மகிழ்நன்.

சித்ராவின் குடும்ப முன்னோர் நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டவர்கள் அவரது இணையர் அரவிந்த் ராமநாதனின் முன்னோர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் என்பதையும் அங்கு சென்ற பிறகு அறிந்தோம். சித்ராவின் தந்தை வழித் தாத்தா சண்முகம் அவர்கள் சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவர். அக்கல்லூரியின் முதல் முதல்வராகப் பணியாற்றியவர். சித்ராவின் சகோதரர் சண்முக சுந்தர் அவர்களும் கேன்பராவில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர்களது உறவினர்களான லோகசந்திரன் சம்மந்தம் , மற்றும் மருத்துவர் பிரேமலதா அவர்களும் கேன்பராவில் பணியாற்றுகிறார்கள். சித்ராவின் இணையர் அரவிந்த் ராமநாதன் அவர்களின் தந்தை சேலத்தைச் சேர்ந்தவர். அவரது பெரிய தாயார் தருமபுரி மாவட்டம் நாகரசம்பட்டியைச் சேர்ந்தவர். நாகரசம்பட்டி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வரலாற்றில் தனியிடம் பெற்ற ஊராகும்.

திராவிடர் கழகம்

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கக் குடும்பத்தினரின் ஒன்று கூடலாக இருந்த அந்த சந்திப்பில் நாங்கள் எதிர்பாராத காங்கிரசு இயக்கத்தின் தலைவரும் ஈடற்ற தியாகியுமான வ.உ.சிதம்பரம் அவர்களின் வழித் தோன்றலான ஒருவரை சந்தித்தோம். அவர்தான் பேராசிரியர் முனைவர் காளிராஜன் அவர்கள். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற தேசியப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்தியாவின் பொருளியல் கல்வி நிறுவனங்களில்ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். அவர் தமிழரின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் அவர்களின் உறவினர்  என்று அறிந்தபோது எனக்கு  மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

பேராசிரியர் காளிராஜன் அவர்கள் வ.உ.சி. அவர்களின் ஒன்று விட்ட தம்பியின் பெயரன் ஆவார். அவர் ஏற்கனவே ஆசிரியரை சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடி இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரை கேன்பராவில் சித்ரா அவர்கள் இல்லத்தில் சந்திப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஆசிரியர் அவர்கள் உடனே அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து  பேராசிரியர் காளிராஜன்  அவர்களுடன் தொடர்புடைய பெரியவர்களைப் பற்றி குறிப்பிட்டு விசாரித்தார். ஆசிரியர் அந்த செய்திகளை நினைவு கூர்ந்தது குறித்து பேராசிரியர் காளிராஜன் அவர்கள் வியப்புடன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

சித்ரா அவர்கள் இல்லத்தில் உணவும் உரையாடலும் நீண்டநேரம் தொடர்ந்தது. ஆசிரியர் அவர்கள் ஒவ்வொருவருடனும் அவர்களின் குடும்பம் தற்போது அவர்களின் சூழல் என விசாரித்து மகிழ்வுடன் உரையாடினார். அவர்களிடம் நன்றி கூறி விடைபெற்று அறைக்குத் திரும்பினோம்.

நாங்கள் அங்கு செல்லும்போதே சாலையில் ஆட்களுமில்லை. எந்த சத்தமும் இல்லை. திரும்பி வரும்போது சாலையில் நீண்ட நேரம் எங்கள் கார் மட்டுமே சென்று கொண்டிருந்தது. அவ்வளவு அமைதி. இரவு நேரக் கடைகளோ கொண்டாட்டங்களோ எதுவும் இல்லை. அறைக்கு வந்தவுடன் ஆசிரியர் கேட்டார், “நாளை மெல்பேர்ன் புறப்பட எத்தனை மணிக்குத் தயாராக வேண்டும்?”

பிரிஸ்பேனில் இருந்து கேன்பரா வந்து இரண்டு நாட்களில் மீண்டும் விமானப்பயணம் என்பது ஆசிரியருக்கு களைப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் உணவு மாறுதல்கள் வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எனினும் தோழர்களை சந்திப்பதும் பழைய சுயமரியாதை இயக்கக் குடும்பத்தினரை சந்திப்பதும் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேற வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது. அதுவே அவருக்கு செயல்படும் தெம்பைக் கொடுக்கிறது என்றும் புரிந்தது.

திராவிடர் கழகம்

மறுநாள் காலை சுமதி அவர்களும் விஜயகுமார் அவர்களும் எங்களை விமானநிலையம் அழைத்துச் சென்றனர். எங்களை இறக்கி விட்டு விஜயகுமார் விடை பெற்றார். விமான நிலையத்தில் உள்ளே சென்று காத்திருந்த நேரத்தில் ஆசிரியர் அங்கிருந்த புத்தகக் கடையைப் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் சிலவற்றை எடுத்து, “அய்யா இந்தப் புத்தகம் வேண்டுமா?” என்று கேட்ட  சுமதியிடம், “இந்தப் புத்தகத்தை நான் படித்து விட்டேன்” என்று கூறி மற்ற சில நூல்களைக் குறித்தும் சுமதிக்கு விளக்கினார் ஆசிரியர்.

இரண்டு நாட்கள்தான் என்றாலும் கேன்பராவில்  பார்த்த நாடாளுமன்றம் , நூலகம், சந்தித்த தோழர்களின் அன்பு இவற்றை எண்ணியபடி மெல்பேர்ன் செல்லும் விமானத்தில் ஏறினோம்.

திராவிடர் கழகம்

மெல்பேர்ன் சென்று சேரும்வரை பள்ளி விடுமுறையில் உறவினர் வீடுகளுக்குச் சென்று வரும்போது பிரியும் இடத்தைப் பற்றிய வருத்தமும், செல்லப்போகிற இடம் பற்றிய எதிர்பார்ப்பும் கற்பனையும் நிறைந்த  மனநிலை நிறைந்திருந்தது.

மெல்பேர்ன் விமான நிலையத்தில் இறங்கியவுடன் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது போன்ற மனநிலையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அங்கு  பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் அவர்களுடன் ஆசிரியரை வரவேற்பதற்கு வந்திருந்த தோழர்கள் அரங்க மூர்த்தி, தாயுமானவன், திருமலைநம்பி சுப்ரமணியம், நந்தகுமார், இளையமதி, ஆகியோருடன் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்களும் எங்களை வரவேற்றனர்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *