சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ‘விடுதலை’ நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் விடுதலை நாளேடு தமிழ் மண்ணில் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது. ‘விடுதலை’யின் வரலாறு, தமிழ்நாட்டின் சமூக, அரசியல், வரலாற்றுப் போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்தது.
‘விடுதலை’ முதலில் நீதிக் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. வாரம் இருமுறை ஏடாக, “காலணா” விலையில் ‘விடுதலை’ வெளிவரத் தொடங்கியது. பெரியார் அவர்களின் ஆளுமையும், எழுச்சிமிக்கப் பேச்சுகளும், எழுத்துக்களும் ‘விடுதலை’யை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தன.
1937 ஜூன் 1 முதல், ‘விடுதலை’ நாளேடாக மாறியது. அப்போது அதன் விலை “அரையணா”வாக உயர்த்தப்பட்டது. ஈரோட்டில் இருந்து பெரியார் அவர்களின் நேரடிப் பொறுப்பில் வெளிவந்த விடுதலை, அவரது சிந்தனைகளைத் தமிழ்நாட்டு மூலை முடுக்கெல்லாம் பரப்பியது. சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூடநம்பிக்கைகள், ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றைத் தனது கூரிய எழுத்துக்களால் எதிர்த்துப் போராடியது.
தொடக்கத்தில் சென்னையில் 14, மவுண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு குடிஅரசு பணிமனையில் விடுதலை அலுவலகத்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப் பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது. இதில் டி.ஏ.வி.நாதன், பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை, அ.பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், கா. ந.அண்ணாதுரை, குத்தூசி குருசாமி, மணியம்மை, கி.வீரமணி ஆகியோர் ஆசிரியராக பணியாற்றியுள்ளனர்.
வரலாற்றின் சாட்சி:
‘விடுதலை’ நாளிதழ் தனது 90 ஆண்டுகாலப் பயணத்தில், இரண்டாம் உலகப் போர்கள், இந்திய சுதந்திரப் போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை போன்ற வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை நேரில் கண்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு, பல ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களைக் கண்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, பண்டித நேரு முதல் நரேந்திர மோடி வரை டில்லியில் பிரதமர் நாற்காலியில் அமரக் கண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ‘விடுதலை’ தனது பக்கங்களில் பதிவு செய்து, தமிழ் சமூகத்திற்கு ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.
சமூக நீதி மற்றும்
பெண்ணுரிமையின் பாதுகாவலன்:
‘விடுதலை’யின் தலையாய நோக்கம் சமூக நீதியை நிலைநாட்டுவதாகும். பார்ப்பனியத்தின் நச்சுக்கொடுக்கை நறுக்கி வீசிய ‘விடுதலை’ ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராகவும், சமத்துவ சமுதாயத்திற்காகவும் அயராது பாடுபட்டு வருகிறது. ஜாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சுயமரியாதைத் திருமணம் போன்ற பல புரட்சிகரமான கருத்துகளைத் தனது எழுத்துக்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
பெண்ணுரிமைக்கான போராட்டத்திலும் ‘விடுதலை’ முன்னணியில் நின்றது. பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, கைம்பெண் மறுமணம், ஜாதி மதமறுப்புத் திருமணம் போன்றவற்றை வலியுறுத்தியதோடு, பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கடுமையாக எதிர்த்தது. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற பெரியாரின் கனவை ‘விடுதலை’ தனது பக்கங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
91 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘விடுதலை’ நாளிதழ், இன்றைய நவீன காலத்திலும் தனது கொள்கைப் பிடிப்பில் இருந்து சற்றும் மாறாமல் இயங்கி வருகிறது. சமூகத்தில் எழும் புதிய சவால்கள், ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் விதைக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.
‘விடுதலை’ வெறும் ஒரு நாளேடு அல்ல; அது ஒரு வரலாற்றுப் பேழை, ஒரு தத்துவப் பள்ளி, ஒரு சமூகப் புரட்சியின் அடையாளம். அது பெரியாரின் லட்சியங்களைச் சுமந்து, தமிழர் சமூகத்தில் அறிவுப் புரட்சியைத் தூண்டி, சமூக நீதிக்கான சுடராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வரும் காலங்களிலும் ‘விடுதலை’ தனது பணியைத் தொடர்ந்து, புதிய தலைமுறையினருக்கும் பகுத்தறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்பதில் அய்யமில்லை.
‘ஆசிரியரும் விடுதலையும்’
சூழல் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும், கொள்கை வழியிலேயே பயணம் செய்வதற்கும், சமூக ஒழுங்கமைப்பை நேர்மையாக சுட்டிக்காட்டுவதற்கும் தன்னுயிரை அர்ப்பணிப்பதற்கும் துணிந்த எழுத்தாளர்களே நூற்றாண்டு நினைவுகளில் நிலைத்துப் போகிறார்கள். அந்த வகையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சமுதாய சிந்தனையின் ஒளிவிளக்காக நம் கண்முன் இருக்கிறார்.
தந்தை பெரியாரின் இலட்சியப் பாதையில், சமூக நீதிக்காகவும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்காகவும் அயராது பாடுபட்டுவருபவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார்.
தனது 29ஆவது வயதில் விடுதலை நாளிதழின் நிருவாக ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1962ஆம் ஆண்டு, முன்னாள் ஆசிரியர் குத்தூசி குருசாமி பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று விடுதலையின் பொறுப்பை ஏற்ற இவர், தொடர்ந்து 63 ஆண்டுகள் கடந்தும் அதனை நெறிப்படுத்தி வளர்த்துக்கொண்டேயிருக்கிறார்.
ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’ நாளிதழை வெறும் செய்தித்தாளாக மட்டுமல்லாமல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், பெரியாரின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார். எந்தவிதக் கொள்கைச் சமரசமும் செய்துகொள்ளாமல், தொடர்ந்து ‘விடுதலை’ நாளிதழைப் பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.
தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடைபெறும் மாற்றங்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, அவற்றை அறிக்கைகள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தி, விழிப்புணர்வை ஊட்டும் அற்புதமான பணி ஆசிரியரின் ஆழமான அரசியல் அறிவையும், தொலைநோக்குப் பார்வையையும், சமூக அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய அளவில் அரசியல் பரிமாணங்களில் ஏற்படும் மாற்றங்களை, பெரியார் கண்ணாடி அணிந்து ஆராய்ந்து காய்தல், உவத்தலின்றி துணிச்சலுடன் மக்களிடம் கொண்டு செல்வது, பெரியாரிடம் கற்ற பாடத்தின் விளைவாகும். அரசியல் அறிக்கைகள், பதிலடி கட்டுரைகள், சூழலுக்கு ஏற்ப தெளிவான விமர்சனங்கள், வாழ்வியல் சிந்தனைகள் போன்றவை அனைத்தும் ஆசிரியரின் அயராத அறிவுத் தேடலின் வெளிப்பாடுகள். விடுதலை நாளிதழ், 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டுக்குள் நுழைகிறது. அதில் 63 ஆண்டுகள் அவரது ஆசிரியப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டை வழிநடத்திய ‘விடுதலை’யின் கொள்கை நிலைப்பாடுகள்
“விடுதலை” நாளேடு எந்தவொரு மதவாதக் கொள்கையையும் ஆதரிப்பதில்லை. இந்தியாவில் பேராதிக்கம் செலுத்தும், இந்துத்துவ அமைப்புகளின் மத அடிப்படைவாதக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஜாதி ஒழிப்பு: இந்துத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றாக ஜாதிய அமைப்பைக் கருதும் “விடுதலை”, ஜாதி ஒழிப்புக்கு வலுவாக குரல் கொடுக்கிறது. ஜாதியையும், தீண்டாமையையும் எதிர்த்துப் போராட அழைக்கிறது.
குலக்கல்வி திட்ட எதிர்ப்பு: ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது.
பார்ப்பனிய எதிர்ப்பு: திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாக, “விடுதலை” நாளிதழ் பார்ப்பனிய சமூக மேலாதிக்கத்தையும் இன்றளவும் கடுமையாக எதிர்த்து களமாடி வருகிறது
மண்டல் ஆதரவு: 1978ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைமையகமான சென்னையில் உள்ள பெரியார் திடலில் பி.பி.மண்டல் மற்றும் அவர் தலைமையிலான ஆணைய உறுப்பினர்களுக்கு அன்பான வரவேற்பு அளித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஆதரித்தது முதல் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து நிறைவேற்றியது வரை விடுதலையின் பங்கு அளப்பரியது.
ஈழத் தமிழர்கள் ஆதரவு: இலங்கை உள்நாட்டுப் போரின்போது, ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தது.
பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னும்: ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்பதில் ஆரம்பம் முதலே தீவிரமாக உள்ள விடுதலை ஏடு, அதன் அரசியல் வடிவமாக பா.ஜ.க. இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பிறகும், குறிப்பாக 1992இல் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகும், இந்துத்துவ அரசியலுக்கு எதிராக வலுவான கட்டுரைகளை, செய்திகளை ஆதாரபூர்வமாக வெளியிட்டது..
பெரியாரின் கருத்துக்களைப் பரப்புதல்: “விடுதலை” நாளேடு பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையிலும், இறை மறுப்புக் கொள்கைகளையும், இந்து மத ஆபாசங்கள், மநு சாஸ்திர எதிர்ப்பு போன்ற இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
“விடுதலை” நாளிதழ் ஒரு “செய்தி ஏடு” என்பதை விட ஒரு “கருத்து ஏடு” அல்லது “கொள்கை ஏடு” என்று கருதப்படுகிறது, தந்தை பெரியாரின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்களின் மொழி, பண்பாடு, மற்றும் சுயமரியாதையைக் காப்பதற்காக நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களாகும். ஹிந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிராக எழுந்த இந்த போராட்டங்களில், தந்தை பெரியாரின் ‘விடுதலை’ நாளேடு முக்கிய பங்காற்றியது.
முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
‘விடுதலை’ நாளிதழின் பங்கு:
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1937 முதல் 1940 வரை சென்னை மாகாணத்தில் தீவிரமாக நடைபெற்றது. அப்போது ராஜாஜி தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு, பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்க உத்தரவிட்டது. இது தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
‘விடுதலை’ நாளிதழ் பெரியாரின் பொறுப்பில் வந்த பிறகு, அது திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் முக்கியப் கருவியாக மாறியது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட காலகட்டத்தில், ‘விடுதலை’ நாளிதழ் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும், ஹிந்தித் திணிப்பிற்கு எதிராகவும், மக்கள் மனங்களில் தாய்மொழிப்பற்று குறித்தும் எழுச்சிமிகு கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டது.
போராட்டக் குரல்: ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து விரிவாகச் செய்திகளை வெளியிட்டது. போராட்டக்காரர்களின் கருத்துகள், பெரியார் ஆற்றிய உரைகள், போராட்டங்களின் போக்குகள், அரசின் அடக்குமுறைகள் என அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
மக்கள் எழுச்சி: ‘விடுதலை’ நாளிதழின் மூலம், தமிழ் மக்கள் ஹிந்தி திணிப்பின் அபாயத்தை உணர்ந்து, போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்க ஊக்கப் படுத்தப்பட்டனர்.
போராட்டத்தின் விளைவுகள்:
‘விடுதலை’ இதழ் ஹிந்தித் திணிப்பிற்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான பிரச்சாரமும், மக்கள் போராட்டங்களின் தீவிரமும் இணைந்து, 1940 பிப்ரவரியில் சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு ஹிந்தி மொழி கற்பது கட்டாயமில்லை என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் கற்கலாம் என்றும் அரசாணை வெளியிட வழிவகுத்தது. முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றது. எனினும், 1948லும், பிறகும் தொடரும் ஹிந்தித் திணிப்புகளுக்கு எதிராக ‘விடுதலை’ தொடர்ந்து போராடி வருகிறது.