பாடம் 13
ஆதாரத்தை தேடுவதே அறிவு
கேன்பரா நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தவுடன் நம்மைப்போல் சுற்றிப் பார்க்க வந்துள்ள பார்வையாளர்களுக்கு அந்த கட்டடத்தின் சிறப்புகளையும் அங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களையும் விளக்குவதற்காக ஒரு வழிகாட்டி வருகிறார். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு உட்புறச் சுற்றுலா தொடங்குகிறது. அந்த வழிகாட்டி நம்மிடம் உரையாடத் தொடங்கும் முன்பு தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு ஆஸ்திரேலியா என்பது பழங்குடி மக்களின் பாரம்பரிய மண் என்பதை உறுதிப்படுத்தும் உறுதிமொழியை சொல்லி விட்டு பிறகுதான் அங்குள்ள வரலாற்றுச் செய்திகளை விளக்குகிறார்கள்.
நாங்கள் முதலில் பார்த்தது கண்ணாடிச் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த, ஒரு விலங்குத் தோலில் எழுதப்பட்ட இங்கிலாந்தின் முதல் Magna Carta (மேக்னா கார்ட்டா)என்றழைக்கப்படும் ‘ உடன்படிக்கைப் பேராவணம் ‘. மிகப்பழைய அந்த ஆவணத்தின் கீழே மேக்னகார்ட்டா 1297 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண் எதைக் குறிக்கிறது என்று ஆசிரியர் அவர்கள் எங்களிடம் கேட்டார். அந்த சட்டத்திற்குள் இருந்த அறிவிப்பில் அதற்கான விளக்கம் இல்லை. எனவே நாங்கள் அது அரசின் ஆணை எண்ணாக இருக்கலாம் என்று எங்கள் ஊகத்தைக் கூறினோம். அப்படி இருக்க வாய்ப்பில்லையே என்று கூறியபடி அடுத்திருந்த அறிவிப்புப் பலகையில் அச்சிடப்பட்டிருந்த விளக்கத்தை ஆசிரியர் கூர்ந்து படிக்கத் தொடங்கினார். அவர் தேடிய விடை கிடைத்து விட்டது என்பதை உறுதி செய்து கொண்டு ‘ இங்கு வந்து பாருங்கள் ‘ என்று எங்களை அழைத்தார். அருகில் சென்று பார்த்தபோது அந்த ஆவணம் 1297 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் வெளியிட்டது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ( விவரம் தனிப் பெட்டியில்)நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஆவணங்களைப் பொறுத்தவரை ஆதாரங்களையும் மூலங்களையும் சரிபார்க்காமல் ஊகங்களைக் கொண்டு முடிவு செய்யக்கூடாது என்ற ஆய்வுப் பாடத்தை ஒரு பேராசிரியர் செயல்முறை வகுப்பில் (Practical class) உணர்த்தியது போல் இருந்தது அந்தக் காட்சி .
மேக்னா கார்ட்டா
இங்கிலாந்து நாட்டின் மன்னராட்சி முறையில் கத்தோலிக்க தேவாலயமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதே போல் அரசன் தன் மனம்போன போக்கில் அதிகாரத்தை பயன்படுத்தவும், விசாரணை இல்லாமலே யாரையும் கொல்லவும் சிறையில் அடைக்கவும், சொத்துகளைப் பறிக்கவும் அரசனுக்கு உரிமை இருந்தது. அதற்கு எதிராக இங்கிலாந்தின் மேட்டுக் குடியினர் அரசோடு போராட்டத்தில் இறங்கினர். கடுமையான உள்நாட்டுப் போராக அது உருவெடுத்த நிலையில் வேறு வழியின்றி மன்னர் ஜான் 1215 ஆம் ஆண்டு அந்நாட்டின் போராட்டக் காரர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை அரசின் பேராணையாக அறிவிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் இலத்தீன் மொழியில் மேக்ன கார்ட்டா என்று அழைக்கப்பட்டது. இன்று பல குடியரசு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் அரசமைப்புச் சட்டங்களின் அடிப்படையான தத்துவம் “ எந்த மனிதரையும் சட்டப்படியான விசாரணை இன்றி கொலை செய்யவோ, சிறையிலடைத்து சுதந்தரத்தை மறுக்கவோ, சொத்துகளைப் பறிக்கவோ அரசுக்கு உரிமையில்லை.” என்பதுதான். இந்த நிபந்தனையை முன்வைத்த சட்டப்படியான முதல் ஆவணம்தான் 1215 ஆம் ஆண்டு வெளியான முதல் மேக்ன கார்ட்டா எனும் ஒப்பந்தம். அந்தப் பேராணை 2016, 2017 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டன. இப்படி மீண்டும் 1297 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நான்கு அசல் ஆவணங்களில் ஒன்றினை1952 ஆண்டு ஆஸ்திரேலிய அரசு விலை கொடுத்து வாங்கியது. அதனை நாடாளு்மன்றத்தின் வெளிச்சுற்றுத் தாழ்வாரத்தில் காட்சிப்படுத்தி உள்ளது. அந்த அசல் ஆவணங்களில் இரண்டு இங்கிலாந்திலும் ஒன்று அமெரிக்காவிலும் உள்ளது.
மேக்னா கார்ட்டா பதாகையின் அருகில் ஆசிரியர்
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பழங்குடி மக்களின் ஓவியங்கள் வேலைப்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற செனட் அவையைப் பார்வையிட்டோம். அங்கு தேசியக் கொடியுடன் கறுப்பு சிவப்பு நிறத்தில் நடுவில் மஞ்சள் நிற வட்டத்துடன் இருந்த ஒரு கொடியும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக்கொடி நம் கழகக் கொடியைப் போல் இருந்தது. அது ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கொடியாகும். அந்தக் கொடியைப் பற்றியும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழி – பண்பாடு ஆகியவை திராவிடக் கூறுகளைக் கொண்டிருப்பதைப் பற்றியும் பேசியபடி நாடாளுமன்றத்தின் மொட்டைமாடியில் இருக்கும் கொத்தளப் பகுதிக்கு வந்தோம். அங்கு நிகழ்ந்த வரலாறு பற்றிய செய்திகளை அறிந்து கொண்டு கீழ்த்தளத்திற்கு வந்தோம். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூல்களையும் மற்ற பொருள்களையும் சுற்றிப் பார்த்தோம். அந்த நூல்களை ஆசிரியர் எடுத்துப் படித்துப் பார்த்து சில நூல்களை தேர்ந்தெடுத்தார். இங்கு ஒரு தேசிய நூலகம் இருக்கிறது அங்கு மதியம் செல்லலாம் அய்யா என்று சுமதி கூறினார்.
ஆஸ்திரேலிய பழங்குடிகளின் கொடி
அன்று மதியம் சுமதி வீட்டில் உணவு உண்டபிறகு, அந்த தேசிய நூலகத்திற்குச் சென்றோம். சுற்றிப் பார்ப்பதற்கே வியப்பு கூட்டும் அகன்று உயர்ந்த கட்டடம். வகைப் படுத்தப்பட்ட நூல்கள். அமர்ந்து படிக்க வசதியான நாற்காலி மேசைகள். எந்த உதவி கேட்டாலும் உடனே கணினியில் தேடி எடுத்துக் கொடுக்கும் அலுவலர்கள். குறைந்த நேரமே இருந்தாலும் அந்த நூலகத்தில் கிடைத்த அமைதியும் அலுவலர்களின் அணுகுமுறையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரையில் உருவாக்கியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை நினைவூட்டியது. உலகில் கல்வி சிறந்த எந்த நாட்டிலும் இருக்கும் அமைப்புகளை தமிழ்நாட்டு இளைஞர் நலனுக்காக உருவாக்கித் தருவதுதான் திராவிட மாடல் என்றும் தோன்றியது.
மேக்னா கார்ட்டா பதாகையில் உள்ள படத்தினை பார்வையிடுகிறார் ஆசிரியர்
நூலகத்தை விட்டு வெளியே வரும்போது சிட்னி மெல்பேர்ன் நகரங்களில் இயங்கும் அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் நிர்வாகப் பொறுப்பாளரான அருணாச்சலம் தன் மகன் அக்ஷய் அருணாசலத்துடன் வந்து ஆசிரியரை சந்தித்தார். ஆசிரியருக்கும் எனக்கும் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினார். அவர்களுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் உரையாடி விடைபெற்றோம் .
மேக்னா கார்ட்டாவில் குறிப்பிட்டுள்ள ஆண்டிற்கான விளக்கத்தை கூர்ந்து படிக்கும் ஆசிரியர்.
அறைக்குத் திரும்பி தயாராகி கேன்பராவில் வசித்துவரும் திருமதி சித்ரா அரவிந்த் அவர்களின் இல்லத்தில் நடைபெற இருந்த குடும்ப சந்திப்பிற்குப் புறப்பட்டோம்.
அங்கு நாங்கள் எதிர்பாராத சில பெரியவர்களை சந்தித்தோம்.
கேன்பராவில் உள்ள ஆஸ்திரேலியா தேசிய நூலகத்தில் .. சுமதி, அண்ணாமலை மகிழ்நன், அருள்மொழி, ஆசிரியர், அடையார் ஆனந்தபவன் நிர்வாகி அருணாசலம், அக்ஷய் அருணாசலம்
நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்கிறார் ஆசிரியர். உடன் சுமதி விஜயகுமார்
(தொடரும்)