சென்னை, மே 30 மாணவர்கள் கற்றல் அடைவை மேம்படுத்தும் வகையில் திறன் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அலுவலர் களுக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அடைவுத் திறன் தேர்வில் (ஸ்லாஸ்) மாநிலத்தின் மொத்த நிலை குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.
கற்றல் திறன்
இந்த தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பள்ளிகள் அளவில் தலைமையாசிரியர்களும், வட்டார அளவில் அதன் கல்வி அலுவலர்களும் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் வரும் கல்வியாண்டில் இதை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை (action plan) தயார் செய்து ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பித்து விளக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முன்னேற்றத்தை உறுதிசெய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மாநில அடைவுத் திறன் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகளை பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப்கள் மூலம் நடத்தி மாணவர்களின் கற்றல் திறன் அறியப்படும்.
இதுதவிர 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் ‘கற்றல் அடைவை மேம்படுத்த திறன்’ எனும் திட்டம் அடுத்த 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கையேடுகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மேலும், திறன் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த மாவட்ட அளவில் 15 பேர் கொண்ட குழு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் அமைக்கப்பட உள்ளது என்று அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ரூ.200, ரூ.500 கள்ள நோட்டுகள் அதிகரிப்பு
ரிசர்வ் வங்கி தகவல்
நாட்டில் ரூ.200, ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆர்.பி.அய். தெரிவித்துள்ளது. 2024-2025ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை ஆர்.பி.அய். வெளியிட்டுள்ளது. அதில், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும் ஆர்.பி.அய். குறிப்பிட்டுள்ளது.