சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் நுழைவது ஏன்?

viduthalai
4 Min Read

கோவை, மே 29- தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் தனியார் நிறுவனங்கள் பங்குகள் வெளியிடுகின்றன. இந்த பங்குகள் வாங்குபவர்கள் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு உரிமையாளர்களாக மாறுவார்கள். அந்த நிறுவனம் லாபம் அடைந்தால், அதிலிருந்து டிவிடெண்ட் எனப்படும் பங்குத் தொகை வழங்கப்படுகிறது.

அதேபோல் ஒன்றிய-மாநில அரசுகள் பங்குச் சந்தையில் பங்குகள் அல்ல, பத்திரங்கள் மட்டுமே வெளியிடுகின்றன. இந்த பத்திரங்களை வாங்குபவர்கள், அரசுக்கு “கடன் கொடுப்பவர்கள்” ஆக உள்ளனர்.

பத்திரத்தின் அடிப்படையில், அரசுகள் ஆண்டுதோறும் வட்டியை கொடுத்து, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அசல் தொகையை திருப்பிச் செலுத்தும். இதன் மூலம் அரசு தனது வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டும். ஆனால் இது நிறுவன பங்குகள் போல உரிமை கொடுக்கவில்லை, லாபப் பங்கு கொடுக்கவில்லை. மாறாக வட்டி மட்டும் தான் தருவார்கள்.

பெங்களூரு மாநகராட்சி

ஏற்கெனவே ஒன்றிய-மாநில அரசுகள் தொடர்ந்து அதிகளவு பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி வருகிறார்கள். அதே போல் உள்ளாட்சி அமைப்புகளும் பத்திரங்களை வெளியிட பங்குச் சந்தை ஆணையம் அனுமதி வழங்குகிறது. இந்தியாவில் முதன் முதலில் 1997ஆம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி பத்திரங்களை வெளியிட்டது.

அதனைத்தொடர்ந்து ஆமதாபாத், காசியாபாத் போன்ற மாநகராட்சிகளும் பத்திரங்கள் வெளியிட்டன. தற்போது புனே, அய்தராபாத், இந்தூர், போபால், விசாகப்பட்டினம், ஆமதாபாத், சூரத், லக்னோ, காசியாபாத், வதோரா, ஆமதாபாத், ராஜ்கோட், பிம்பிரி சிஞ்ச்வாட் ஆகிய மாநகராட்சிகள் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.

மாநகராட்சிகள் மக்களுக்கு தேவையான குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொள்கின்றனர். இவற்றுக்கு தேவையான நிதியை வங்கி கடன்களையே நம்பாமல், பங்குச் சந்தையில் நிதிப்பத்திரங்கள் மூலம் மக்கள் முதலீட்டைத் திரட்டுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி, தேசிய பங்குச் சந்தை மூலம் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.200 கோடியாகும்.

ஏன் இப்போது?

இந்த பத்திரங்களை வாங்குபவர்களுக்கு 7.97 சதவீத வட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும். 10 ஆண்டுகள் கழித்து அசல் தொகை அப்படியே திருப்பி தரப்படும். சென்னை மாநகராட்சியை தொடர்ந்து கோவை,திருச்சி, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளும் பத்திரங்கள் வெளியிடும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

மாநகராட்சிகளை பொறுத்தவரை தங்களது வருவாயை மட்டும் வைத்து கொண்டு பெரிய திட்டப்பணிகளை மேற்கொள்ள முடி யாது. ஒன்றிய-மாநில அரசுகள் நிதி வழங்கினாலும் தனது பங்கினை மாநகராட்சிகள் செலுத்த வேண்டும். அதற்காக மாநகராட்சிகள், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேம்பாட்டு கழகம் அல்லது வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குகிறார்கள். ஆனால் இந்த கடனுக்கு அவர்களுக்கு அடமானம் கொடுக்க வேண்டும். மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே தான் கடனை தவிர்த்து தமிழ்நாடு மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் பத்திரங்கள் வெளியிட்டு மக்களிடம் நிதி திரட்டும் பணியினை தொடங்கி இருக்கிறார்கள்.

எது லாபம்?

சென்னை மாநகராட்சி பத்திரங்கள் மூலம் திரட்டி உள்ள ரூ.200 கோடி நிதிக்கு, 7.97 சதவீத வட்டி கணக்கீட்டின்படி 10 ஆண்டுகள் கழித்து வட்டி-அசலுடன் சேர்த்து ரூ.359 கோடியே 40 லட்சம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அதே சென்னை மாநகராட்சி வங்கிகள் மூலம் ரூ.200 கோடி கடன் வாங்கினால் சராசரியாக அவர்களுக்கு 10 சதவீத வட்டி கணக்கீட்டின் 10 ஆண்டுகள் கழித்து வட்டி அசலுடன் சேர்த்து ரூ.400 கோடி திருப்பி வழங்க வேண்டும்.

முதல் கட்டமாக…

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.200 கோடி நிதி திரட்டி இருந்தால் சராசரியாக 4 சதவீத வட்டி கணக்கீட்டின் 10 ஆண்டுகள் கழித்து வட்டி-அசலுடன் சேர்த்து வெறும் ரூ.280 கோடி மட்டும் தான் திருப்பி வழங்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேம்பாட்டு கழகத்திடம் இருந்து மாநகராட்சி மிக அதிகளவு நிதி பெறமுடியாது. விரைவாகவும் பெற முடியாது எனவே தான் தமிழ்நாடு அரசு, மாநகராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து பத்திரங்கள் வெளியிட்டு மூலம் நிதி பெற அனுமதி தந்துள்ளது.

இரண்டாவது கட்டம்

சென்னை மாநகராட்சி தற்போது முதல்கட்டமாக ரூ.200 கோடி நிதியை பத்திரங்கள் வெளியிட்டு மூலம் திரட்டி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி ரூ.825 கோடி செலவில் பிராட்வே பஸ் நிலையத்தை மேம்படுத்தமுடிவுசெய்துள்ளது. இந்த திட்டப்பணிக்காக ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அரசின் அனுமதிக்கு பிறகே இது சாத்தியாகும். ஒருவேளை சென்னை மாநகராட்சி ரூ.500 கோடிக்கு பத்திரங்களை வெளியிட்டால், நாட்டிலேயே அதிக தொகை வெளியிட்ட மாநகராட்சி என்ற பெருமை சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *