திரைப்பட நடிகர் ராஜேஷ் (வயது 75) அவர்கள் மறைவுற்றார் என்பதையறிந்து வருந்துகிறோம். சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்களது உறவினர் நடிகர் ராஜேஷ். தமிழ்த் திரைப்பட உலகில் தனது தனித்தன்மையான நடிப்பாலும், தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் புகழ்பெற்றவர். 2021-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசால் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு திறம்பட செயலாற்றியவர். தமிழ்ப் பற்றாளர்; தந்தை பெரியார் மீதும், நம் இயக்கத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்.
அவரது மறைவால் வாடும் உறவுகளுக்கும், திரைப்படத் துறையினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.5.2025