தி.மு.க. எம்.பி.க்களின் முயற்சியால் 1354 தமிழ்நாடு மீனவர்கள் விடுவிப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி

viduthalai
4 Min Read

சென்னை, மே.29-  தி.மு.க. கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைக் குரல் எழுப்பியதால்தான் இது வரை 1354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டி ருக்கிறார்கள்.

மேலும் கச்சத்தீவை மீட்பதே, தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 மீன்பிடி துறைமுகம்

தமிழ்நாடு மீன்வளம் மற் றும் மீனவர் நலத்துறை சார்பில் புதிய சூரை மீன்பிடி துறைமுக திறப்பு நிகழ்ச்சி சென்னை திருவொற்றியூரில் நேற்று (28.5.2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ரூ.272.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட மொத்தம் ரூ.426.13 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற மீன்பிடி கட்டமைப்புப் பணிகளை திறந்துவைத்து பேசினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

வேலை வாய்ப்பு

ரூ.272.80 கோடி மதிப்பீட்டில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 400 ‘கில் நெட்’ படகுகள், 250 பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு, 60 ஆயிரம் டன் மீன்களை கையாளக்கூடிய வசதிகளுடன் இருக்கும், சூரை மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்ததில் பெருமைப்படுகிறேன். மீனவர்களின் வளர்ச்சிக்கு சூரை மீன்பிடி துறைமுகம் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

சென்னையின் வளர்ச்சிக்கு, பழவேற்காட்டில் இருந்து கோவளம் வரை இருக்கும் மீனவ கிராமங்களின் பங்களிப்பு முக்கியம். மீனவர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது நம் தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை காப்பதற்கு சமம். அந்த கடமையை, திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

கச்சத்தீவு மீட்பு

மீனவர்களின் நலனை காப்பதோடு, நம்முடைய மீனவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமைகளை நிலை நாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ஆம் தேதி சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தனித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வாக அமையும். கடந்த 4 ஆண்டுகளில், 185 படகுகளும், 1,383 மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், படகுகளை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இதுவரை 76 கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்.

நிவாரண உதவி

மேலும், நேரில் சந்திக்கும் போதெல் லாம் தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். அதேபோல, தி.மு.க. எம்.பி.க்களும், கூட்டணி கட்சி எம்.பி.க்களும் தொடர்ந்து வலி யுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி, உரிமைக்குரல் எழுப்பிய காரணத்தால்தான், இதுவரை 1,354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இருக் கிறார்கள். எஞ்சிய 29 மீனவர்களையும் மீட்டு, தாயகம் அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் சிறைபிடித்த 229 படகுகளை இலங்கை அரசு இதுவரை விடுவிக்கவில்லை.

ஒருபக்கம் அவற்றை மீட்பதற்கான அரசியல் போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக் குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா ரூ.5 லட்சமும், 26 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் என ரூ.6 கோடியே 84 லட்சம் வழங்கி இருக்கிறோம். இந்த தொகையை இப்போது ரூ.8 லட்சமாக உயர்த்தி அறிவித்து இருக்கிறேன்.

மாணவர்களுக்கு பயிற்சி

2024 மற்றும் 2025-ஆம் ஆண்டு களில், சிறைபிடிக்கப்பட்ட இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 73 விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சம் வீதமும், 9 நாட்டுப் படகுகளுக்கு ரூ.2 லட்சம் வீதமும் உயர்த்தப்பட்ட விகிதத்தில், மொத்தம் ரூ.6.2 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் இன்னல்கள் எல்லாம் தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. கல்வியறிவுதான் எல்லோரும் கரை சேர்வதற்கான கலங்கரை விளக்கம். அதனால் தான், மீனவச் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்திய குடிமை பணியில் சேர நினைத்தால், அவர்களுக்கு பயிற்சி தர முடிவெடுத்து, இந்த ஆண்டு மட்டும் 39 மீனவ மாணவர்களுக்கு ரூ.5.20 லட்சம் செலவில் பயிற்சி தந்திருக்கிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்களை மீனவச் சமுதாயத்தின் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன், கால் நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் கஜலட்சுமி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

6 ஆயிரம் மீனவர்கள் பயன்

சூரை மீன் பிடிப்பதற்காக இந்தியாவிலேயே அமைக்கப்பட்ட முதல் மீன்பிடி துறைமுகம் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் ஆகும். இங்கு, தெற்கு மற்றும் வடக்கு அலை தடுப்பு சுவர்கள், மீன்கள் ஏலக்கூடம், மீன் வலைப்பின்னும் கூடம், மீன வர்கள் தங்கும் அறை, மீனவர்கள் ஓய்வறை, படகுகள் பழுதுபார்க்கும் இடம், வானொலி தகவல் தொடர்பு மய்யம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு ஆண்டுக்கு, 70 ஆயிரம் டன் அளவுக்கு மீன்கள் கையாள முடியும். இந்த துறைமுகம் மூலம் 6 ஆயிரத்து 250 மீனவர்கள் பயன் பெறுவர் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *