கரும்பு நிலுவைத் தொகை ரூ.98 கோடி வழங்க உத்தரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி

viduthalai
2 Min Read

சென்னை, மே 29 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிட்ட நிலையில், விவசாயிகள் நேற்று (28.5.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

கரும்பு நிலுவைத் தொகை

இதில் 2024-2025ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவைப் பணி மேற்கொண்டுள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-2025 அரவைப் பருவத்தில் கடந்த மே 15-ஆம் தேதி வரை 18.81 லட்சம் டன் அரவை செய்து, 8.40 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன.

அரவை மேற்கொண்ட 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2, சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர் ஆகிய 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்து, அரவை செய்த 10.30 லட்சம் டன் கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ.329.34 கோடியை தங்கள் ஆலையின் சொந்த நிதியிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி உள்ளன.

மேலும் மோகனூர், தர்மபுரி, வேலூர், செங்கல்வராயன், திருத்தணி, எம்.ஆர்.கே., செய்யார், மதுராந்தகம் ஆகிய 8 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 8.51 லட்சம் டன் கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ. 272.87 கோடியில் ரூ.175.10 கோடியை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தங்கள் சொந்த நிதியிலிருந்து வழங்கின. இதுபோக ஆலையின் நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் நிலுவையாக ரூ.97.77 கோடியை விவசாயிகளுக்கு வழங்காமல் வைத்திருந்தன.

எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு 5,920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகைக் கடனாக ரூ.97.77 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இந்த நிதியுதவி கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு சர்க்கரை ஆலை களால் கரும்பு பணம் நிலுவை யின்றி முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டு விட்டது.

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி

இதையடுத்து, நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நிகழ்வில், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், வேளாண்துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி, சர்க்கரைத் துறை ஆணையர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *