ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே?  

viduthalai
3 Min Read

இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருள்களை மட்டுமே வாங்க வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  பேசியுள்ளார்.

‘‘இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உள்நாட்டுத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் அந்நிய பொருள்களைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க வேண்டும். வெளிநாட்டில் (சீனாவில்) இருந்து விநாயகர் சிலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வண்ண பொடிகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்திய தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பொருள்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் உறுதியேற்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உலகத் தரத்தில் தயாரிக்க வேண்டும். பொருள்களின் தரத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்’’. என்று நீட்டி முழக்கி பேசியுள்ளார் பிரதமர் மோடி – ஆனால் ஊருக்கு மட்டும் தான் இந்த உபதேசமா?

பேசுவது மேட் இன் இந்தியா, பயன்படுத்துவது எல்லாம் வெளிநாட்டுப் பொருள்தான்.  நாட்டு மக்களிடம் உள்நாட்டுப் பொருள்களைப் பயன் படுத்தச் சொல்கிறார்.

ஆனால் அவர் பேசிக் கொண்டு இருந்த குஜராத்தின் பெருமுதலாளிகள்  67 விழுக்காடுப் பொருள்களை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்து நாடுமுழுவதும் விற்பனை செய்கின்றனர்

இதனால் இந்திய வணிகச்சந்தைக்கு ரூ.8.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி பயன்படுத்துவது ஜெர்மன் நாட்டு காரைத்தான் – பிரான்ஸ் நாட்டின் மான்ட்பிளாங்க் பேனாவைத்தான்.

சுவிஸ் கைக்கடிகாரம், இத்தாலி நாட்டு கண் கண்ணாடி, அமெரிக்காவின் ஆப்பிள் போன், தைவான் நாட்டுக் காளான், ஆடைகள் வடிவமைக்க, தைத்துகொடுக்க இங்கிலாந்து தையல் கலைஞர்கள், உணவு குறித்து ஆலோசனை கூற அமெரிக்காவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர்கள்!  செருப்பு முதல் நகவெட்டி வரை வெளிநாட்டுத்தயாரிப்பையே பயன்படுத்துகிறார் என்று அவருக்கு நெருக்கமான பாஜக தலைவர்களே அவ்வப்போது பெருமை படக் கூறியுள்ளனர். தான் அணியும் ஆடை ரூ.10 லட்சம் மதிப்புடையது என்று கூறவில்லையா!

மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு உண்டு.

இவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது இந்திய அளவிலேயே அதிக முறை சீனா சென்று வந்தவர் மோடிதான்! இதை அவரே கூறியிருக்கிறார். ஒவ்வொரு முறை செல்லும் போதும் மொத்த மார்வாடிகளின் நலனுக்காக பல்வேறு பொருள்கள் இறக்குமதிக்கான அனுமதி களை எளிமையாக்கிகொண்டே வந்துள்ளார். பிரதமர் ஆனபிறகு முழுமையான சந்தையை மார்வாடிகளின் நலனுக்காக சீனா தயாரிப்புகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டார்.

இன்று நம்மைச் சுற்றியுள்ள 10 பொருள்களில் 8 பொருட்கள் சீனா தயாரிப்பு. இதற்கு காரணம் மோடிதான்.

உண்மையைப் பேசுவது இல்லை என்று மோடி தான்  நம்பும் ராமன்மீது சத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் போலும்!

நாட்டு மக்கள் அன்றாடம் அணிவதும், பயன்படுத்துவதும், நடப்பதும் எல்லாம் அயல் நாட்டு நாகரிகப் பாணியே!

கிராப் வைத்துக் கொள்ளாமல் சிண்டு வைத்துக் கொள்ளப் போகிறோமா! எழுதுகோல் முதல் இராணுவத் தளவாடங்கள் வரை எல்லாம் வெளிநாட்டுச் சரக்குகள்தான்!

உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் தரமாக இருந்தால் வெளிநாட்டுப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வராதே! அதைப்பற்றி எல்லாம் பிரதமர் மோடி சிந்திக்கட்டும்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *