தக்கவர்களை அடையாளங்கண்டு மாநிலங்களவைக்குத் தேர்வு செய்த நமது முதலமைச்சரின் முடிவு பாராட்டுக்குரியது!

viduthalai
2 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார்

2025, ஜூன் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தனர். அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (29.5.2025)

அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழி முறைகளை அப்படியே பின்பற்றி, மாநிலங்களவைக்குத் தக்கவர்களைத் தேர்வு செய்துள்ள நமது முதலமைச்சரின் முடிவு பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மாநிலங்களவைக்கான உறுப்பினர்களைத் தி.மு.க.வின்மூலம் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அளவீடுப்படி 4 இடங்கள் – காலியாகும் அந்த இடங்களை நிறைவு செய்யும் வகையில், தி.மு.க.வின் தலைவர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மூன்று இடங்களுக்கு

1. மூத்த வழக்குரைஞர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.வில்சன் அவர்களையும்,
2. பிரபல கவிஞரும், தி.மு.க.வின் செய்தித் தொடர்பு பிரிவு இணைச் செயலாளரருமான கவிஞர் சல்மா அவர்களையும்,
3. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம்
ஆகிய மூவரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது மிகுதியும் வரவேற்கத்தக்கது.

யாரை, எப்போது, எந்தெந்த இடத்தில் அமர வைப்பது என்பதில், பேரறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிமுறைகளை அப்படியே பின்பற்றி, இயக்கத்தில் கொள்கை உணர்வோடு, கட்டுப்பாடு காத்து நடந்து கொள்வோரை தக்க வகையில் அடையாளம் காணுவதில் வெகு சிறப்புடன் செயலாற்றுகிறார் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

‘தொண்டர் நாதனாக‘ திகழ்ந்து சரியான தேர்வுகளை நடத்தியதோடு, கூட்டணியினருக்கு அளித்த வாக்குறுதியைச் செயல்வடிவமாக்குவதிலும், அவர் ஒப்பற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு ஓர் இடத்தை அளித்துள்ளதும் வரவேற்கத்தக்கது.

சீரிய பகுத்தறிவாளரான நண்பர் கமல்ஹாசன் தேர்வாவது உறுதியாகி விட்டது!

தேர்வு செய்யப்பட்டுள்ள நால்வருக்கும், திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழ்கூறும் நல்லுலகம் சார்பிலும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தடம்புரளுகிறதோ நமது ஜனநாயகம் என்ற நிலைப்பாடு உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இவர்களது பணி, சிறப்பாக அமைய நமது உளம் நிறைந்த வாழ்த்துகள்!

மீண்டும் தேர்வான சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான தோழர் வில்சன் மறு நீடிப்பு மிகவும் நியாயமும், பொருத்தமும் ஆகும்!

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
29.5.2025   

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *