சிறுபிள்ளைத்தனம் – விஷமத்தனம் கண்டிக்கத்தக்கது!

viduthalai
3 Min Read

1927 ஆம் ஆண்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர் பெரியார்!
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடலாமா?

1927 ஆம் ஆண்டே ஜாதி ஒட்டைத் தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார்; இந்த நிலையில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், தந்தை பெரிார் பெயருடன் ‘நாயக்கர்’ ஜாதி ஒட்டைச் சேர்த்து கேள்வித் தாளில் வெளியிட்டு இருப்பது சிறுபிள்ளைத்தனமும், விஷமத்தனமும் ஆகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) அன்று நடைபெற்ற ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத் (UPSC) தேர்வு ஒன்றில் “சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தவிர்க்கப்படவே முடியாத தலைவர்
தந்தை பெரியார் என்பதற்கான சான்றும்கூட!

ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியாரை எப்போதும் எதிர்நிலையில் வைத்துப் பார்ப்போராலும் தவிர்க்க முடியாத தலைவராக அவர் இருக்கிறார் என்பதற்கு இக் கேள்வி ஒரு நல்ல சான்றாகும்! தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் சமூகத் தளத்தில் சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிய மாற்றங்களுக்குக் காரணமாகி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க ளின் சமூகநீதிக்கும், இந்நாட்டில் கிடைத்துள்ள பெண்ணுரிமைக்கும் பெரும் பங்காற்றியுள்ளது. அத்தகைய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், அவ் வியக்கத்தை நிறுவியவர் யார் என்ற கேள்வி இடம்பெற்றிருப்பது நமக்குக் கிடைத்த வெற்றியாகும். அதனால் நமக்குப் பெரும் மகிழ்ச்சியே யாகும்.

1927 ஆம் ஆண்டு டிசம்பரிலேயே ஜாதி ஒட்டைத் தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார்!

ஆனால், அதற்கான பதில் வாய்ப்புகளில் ஒன்றாகத் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடும்போது “பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்” (Periyar E.V.Ramasamy Naicker) என்று குறிப்பிட்டுள்ளனர். சிறுவயது முதலே ஜாதிய உணர்வற்றவராக விளங்கிய தந்தை பெரியார், தன்னுடைய ஜாதி எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தும் வகையிலும், வலிமையான ஒரு பிரச்சார வாய்ப்பாகவும் கருதி 1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தன்னுடைய பெயரிலிருந்த நாயக்கர் பட்டத்தை விட்டொழித்தார்.

அதுமட்டுமல்லாமல், 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில், “ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது” என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதை விளக்கி உரையாற்றியதுடன், அன்று முதலே பல்லாயிரக்கணக்கானவர் தங்கள் பெயரிலிருந்து ஜாதிப் பட்டத்தை நீக்கும் புரட்சி நிகழக் காரணமானார். அதனால்தான், ஜாதிப் பெயரொழிந்த மாநிலமாகத் தமிழ்நாடு இன்றுவரை திகழ்கிறது.

பெண்கள் மாநாடு கூட்டி வழங்கிய
பட்டம் ‘‘பெரியார்!’’

ஜாதி அடையாளம் என்பதே இழிவானது என்னும் மனவோட்டம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதற்குத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆற்றிய பிரச்சாரமே அடிப்படையாகும். இத்தகைய சூழலில் ‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?’ என்று பாராட்டத்தக்க வகையில் கேள்வி கேட்டுவிட்டு, அதற்கான பதிலில், அவர் தூக்கி எறிந்த ஜாதிப் பட்டத்தை அவர் பெயருடன் ஒட்டிப் பார்ப்பது முற்றிலும் பொருத்தமற்றதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

பலராலும், 1928 ஆம் ஆண்டு முதலே பெரியார் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டுவந்தாலும், முழுமையாக, ஈ.வெ.ராமசாமி அவர்களைக் குறிப்பிடும் போது ‘பெரியார்’ என்றே அழைக்க வேண்டும் என்று பெண்கள் மாநாட்டில் தீர்மானித்து (13.11.1938), அறிவித்து வழிகாட்டியவர்கள் தமிழ்நாட்டுப் பெண்கள் ஆவர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம். தந்தை பெரியாரின் இயக்கத்திற்கு மட்டுமல்ல, அவர் பெயருக்கே தனித்த வரலாறு உண்டு என்பதை அனைவரும் அறிய வேண்டியது, குறிப்பாக கல்வியாளர்கள், அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள் உணர வேண்டியது அவசியம் ஆகும்.

தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவின் போது, இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையிலும், அதற்கான விளக்கக் குறிப்பிலும் ஜாதி ஒட்டு இல்லா மல்தானே அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.  அதை அறிந்துகொள்ளாமல் இப்படி விஷமத்தனம் செய்யலாமா?

‘‘பெரியார்’’ என்றால் சிறுபிள்ளைக்கும் தெரியுமே!

பாமர மக்கள்முதல் கட்சிகளைக் கடந்த அனைத்து மக்களும், ஏன் சிறுவர்களுக்குக்கூட பெரியார் என்றால், யார் என்பது தெளிவாகவே தெரியும்.

ஜாதியையும், வருணத்தையும் கட்டிக் காக்கும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜாதி ஒழிப்புத் தலைவரின் பெயருக்குப் பின்னால், ஜாதி ஒட்டை இணைத்திருப்பது சிறுபிள்ளைத்தனமும், விஷமமுமே –  கண்டிக்கத்தக்கது!

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
29.5.2025   

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *