சில பாடங்கள் (12) ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்

வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
 பாடம் 12
வாராது வந்த மாமணி
தலைவர் வரும்நேரம்  தாயருள்  உடனாக,
           தமிழகம் புறப்பட்டுத்  தரணியெலாம் முழக்கமிட,
அலைகடல் பொங்கி ஆர்ப்பரித்து எழுந்தது
           ‘ஆல்பிரெட்’  புயலென்றார் அழகுநகர் பிரிஸ்பேனில்
நிலைகுலைந்தோம் தோழரெலாம் நிம்மதியே போயிற்று
            நிதந்தோறும் ஊடகங்கள் நிரம்பின புயலாலே
வலைபோடும் படகெல்லாம் வரிசையிலே ஓய்வெடுக்க
            வந்தார் சிட்னிக்கு வாராத மாமணியே

அடுத்து பிரிஸ்பேனில் ஆசிரியர் நிகழ்வன்றோ
         அவசரமாய் ரத்துசெய்ய அவரிடமே பேசலானோம்
“எடுத்தஅடி பின்வாங்கேன் எதுதடையாய்  வந்தாலும்
         என்றாரே உறுதிபட வீரத்தின் மணியவரே
கடுத்தது எதிரணியே, களிப்புற்றோம் எல்லையின்றி
         காலையிலே தென்றலாகக் கடந்தது புயலதுவும்
விடுத்த  அம்பெனவே விமான நிலையத்தில்
        வெற்றிப் படிகளிலே   வீரநடை போட்டுவந்தார்

வாடிய பயிர்களுக்கு வான்மழையாய் வந்தார்கள்
         வாடாத முறுவலுடன் வணக்கம் ஏற்றபடி,
கூடிய கொள்கைவீரர் குடும்பங்கள் வரவேற்கக்
        கொத்தாக மலரென்ன, நூல்களென்ன, சால்வையென்ன
தேடிய ஆனிமுத்து  திரைகடலில் எடுத்தாற்போல்
         திரண்டோர்க்கு மகிழ்ச்சி, தலைவருக்கோ நெகிழ்ச்சி
ஆடி(ய) காரினிலே  அருகே தலைவருடன்
         அருள்மொழிகள் கேட்டபடி ஆனந்தப் பவனிசென்றோம்
அன்னையர்குலம் போற்றும் பெண்கள் நாளென்று
     ஆசிரியர், அருள்மொழியார் பேசிட  ஏற்பாடு
அன்னை மணியம்மை நினைவுநாள் அதுவன்றோ
     அடுக்கடுக்காய்த் திராவிடத்தால் அடைந்த
நன்மையெலாம்  முன்னை தொடங்கி முந்தாநாள் வரையினிலே
      முழுதாகச் சொல்லி வியப்படைய வைத்தார்கள்
என்னை உனையெல்லாம் ஏணியிலே ஏற்றிவிட்டு
       எல்லோர்க்கும் கல்விதந்த இயக்கம் பரப்பிடவே
வங்கக்  கரையினின்று வந்தார் தென்றலாக
        வரவேற்ற கூட்டத்தில்  பகுத்தறிவுப் புயலாக
தங்கக் கடற்கரையில் தமிழர் நிலவாக
        தந்தை பெரியாரின்  கனவு நனவாக
சிங்கமென உரையாற்றிச்  சிந்தைக்கு விருந்தளித்தார்
      சிலிர்த்திட்ட பயணத்தின் சிறப்பெல்லாம் சொல்லிடவே
எங்கணம் முயன்றாலும் என்தமிழும் போதாது,
       எம்நெஞ்சம் மறவாது, எம்மகிழ்ச்சி தீராது.
                   – எழுச்சிக் கவிஞர் இரவிச்சந்திரன்
                               பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
 (தொடரும்)
