ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி!

viduthalai
4 Min Read

கொள்கை எதிரிகளோடு கூட்டணி வைக்கும் கட்சிகளாலும் –
சினிமா ரசிகத் தன்மையை அரசியலாக்கும் கட்சிகளாலும்
தமிழ்நாட்டு உரிமைக்குக் குரல் கொடுத்து,
வலுவான கூட்டணி அமைத்து நல்லாட்சி நடத்திவரும்
‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியாது!

தமிழ்நாட்டு உரிமைக்காகக் குரல் கொடுத்து நல்லாட்சி புரியும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. ஆட்சியை – கொள்கை எதிரிகளோடு கூட்டு சேரும் கட்சிகளால், ‘சினிமா ரசிகர் மன்ற கட்சி’களால் அசைத்துப் பார்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் கொள்கைக் கூட்டணி அமைத்து (எதிர்க்கட்சியாக இருந்த காலம்முதல் சுமார்  8, 9 ஆண்டுகளாகவே கூட்டணியாக இருந்து பொறுப்புடன் தமிழ்நாட்டு உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும், அறப்போராட்டங்கள் நடத்தியும்), ஆளுங்கட்சியாக தி.மு.க. கடந்த நான்கு ஆண்டுகளாக பல முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி, ‘திராவிட மாடல்’ ஆட்சி – சாதனை சரித்திர ஆட்சி என்பதை அனைத்துலகத்திற்கும் நாளும் புரிய வைத்துக் கொண்டுள்ளது!

ஹிந்துத்துவாவை செயல்படுத்தும் –
ஒன்றிய பா.ஜ.க. அரசு

செப்படி வித்தைகளாலும், ‘வியூகங்களை’ வகுத்தும் ஒன்றியத்தை ஆளும் வாய்ப்பினைப் பெற்று, எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் முக்கியமான மற்றொரு பகுதி என்ற தத்துவத்தையே ஏற்காது, பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக – ‘‘மைனாரிட்டி பா.ஜ.க. அரசானாலும்’’, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒரு வாய்ப்பினை வைத்து ஒட்டுப் போட்டு (ஆந்திரா, பீகார் ஆட்சிகளின் தயவால்) ஓராண்டை நகர்த்திவிட்டது!

கிடைத்த வாய்ப்பை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஹிந்துத்துவாவைச் செயல்படுத்த கல்வி, பண்பாடு போன்ற முக்கியத் துறைகளில் தங்களது எதேச்சதிகாரப் போக்கைக் கூச்சநாச்சம் சிறிதுமின்றி நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் இரண்டாவது செல்வாக்குள்ள கட்சி(?) பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவை ஆக்கவேண்டும் என்ற உள்நோக்கத்து டன் செயல்படுவோருடன் இங்கு ‘திராவிட லேபிள்’ ஒட்டிக்கொண்டு, அதன் அடிப்படைத் தத்துவத்திற்கு வெடி வைத்து, கொள்கை எதிரிகளிடம் தங்களது அமைப்பை ‘அடமானம்’ வைத்து, தங்களது அவச் செயலுக்குக் கொஞ்சம்கூட வெட்கப்படாமல், வீராப்புப் பேசி, ஊடக விளம்பர வெளிச்ச தயவுகளால் அன்றாடம் அரசியல் உலா வருகின்றனர்.

ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாம்!

இதற்கிடையில், திரைப்படங்களில் நடித்துக் கிடைத்த ரசிகர் மன்றம் அல்லது பணம் இவற்றை வைத்து, முதலமைச்சர் நாற்காலிக்கே குறி வைத்து சில ஒப்பனைகள், கற்பனை உலகில் தர்பார் நடத்திட, ஊடக வெளிச்சத்தில் ஒய்யார விளம்பரத்தைப் பெற்று, ஆட்சிக் கனவில், ஆதாரமின்றி, அடியற்ற மரம்போல ஆடிடும் வேடிக்கை அரசியல் செய்து ‘கானல் நீர் வேட்கையில்’ திளைக்கின்றனர்!

இத்தகையவர்கள் மறைமுகமாகவோ, ‘கண்ஜாடை’ காட்டுதலின்படியோ, தி.மு.க. ஆட்சிமீதும், அதன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்மீதும் – முறையான விமர்சனம் செய்யாது – வெறும் அவதூறுகளை அன்றாடம் அள்ளி வீசிடுவது, அவரது கொள்கை வயலுக்குப் போடப்படும் உரம் – வளர்ச்சிக்கு உதவிடும் வரவுகள் என்பதைப் புரியாதவர்களே! எந்தக் குற்றத்தையும் ஆதாரப்பூர்வமாகக் கூற முடியாதவர்கள், ‘பந்தை அடிப்பதை விட்டு, பந்தாடியின் காலை அடிக்கின்ற’ கயமைத்தனத்தில் ஈடுபட்டு, தங்களது மரியாதையை இழந்தவர்கள் – ‘சொல்லிழுக்குப்பட்ட சோகாப்பர்கள்’ ஆகி வருகிறார்கள்!

பிரதமரை – ஒரு முதலமைச்சர் சந்தித்து
உரிமைக் குரல் எழுப்புவது குற்றமா?

இந்திய ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு, தலைநகர்  டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டிய (24.5.2025) கூட்டத்தில், நமது முதலமைச்சர் கலந்துகொண்டதற்குத் தேவையற்ற உள்நோக்கங்கள் கற்பிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஏதாவது சான்றாவணம் உள்ளதா?

முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்பதைத் தி.மு.க. தனது அய்ம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக்கி, கொள்கை நடைமுறையாகவும் ஆக்கிக் கொண்டு, கூட்டாட்சிக்கான பற்பல வாய்ப்புகளிலும் அதனைக் கடைப்பிடித்து வருவதை எவரே மறுக்க முடியும்?

ஒன்றிய அரசு, திட்டமிட்டு நிதித்துறையில் ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதால், தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் நிலையில், தொடர்ந்து வழங்கவேண்டிய நிதியைத் தர மறுப்பது, தாமதம் செய்வது, பேர அரசியலுக்குப் பணியாததால், நிதி வழங்க மறுப்பது போன்றவற்றை பிரதமரிடம் ஒரு மாநில முதலமைச்சர், கூட்டாட்சித் தத்துவப்படி, உரிமைக் குரல் எழுப்பச் சென்றால், பேசினால், உடனே அதற்குக் கீழிறக்க உள்நோக்குக் கற்பிப்பது எவ்வகையில் நியாயம்?

மலையை அசைத்துவிட
மண்ணாங்கட்டிகளால் முடியுமா?

இப்படிப் பேசுகிறவர்கள், தமிழ்நாட்டின் நலன், உரிமைமீது உண்மையான அக்கறை இருந்தால், ஒன்று சேர்ந்து நிதி தேவைக்குக் குரல் எழுப்ப வேண்டாமா? அது சலுகை அல்ல; நமது உரிமை! நாம் கேட்கும் நிதி மாநிலங்களின் வசூல் பங்களிப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்ற பொதுநலப் பார்வை கடுகளவுகூட இல்லையே!

கிராமியப் பழமொழி ஒன்று உண்டு – ‘மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் கைம்பெண் ஆனால் போதும்’ என்று.

அந்த கேவலப் புத்தியில் அடமான அரசியல் தலைவர் முதல், முதலமைச்சர் கனவு நாற்காலி நப்பாசைக் காளான்கள் உள்பட நடந்து, சுயநல அரசியல் சூழலில் மாட்டி, கரையேற முடியாமல் தவிக்கும் காட்சியை, தமிழ்நாடு விரைவில் காணும்!

மலையை அசைத்துவிட மண்ணாங்கட்டிகளால் முடியாது!

மின்சாரத்துடன் ‘மின்மினிகள்’ போட்டி போட்டு வெற்றியா பெற முடியும்?

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வியூகம்
தோற்றே போகும்!

ரேஸ் குதிரையோடு, ஜட்கா குதிரைகளும், மண் குதிரைகளும், பொய்க்கால் குதிரைகளும் போட்டி போடுவது, காட்சி ஊடகங்களுக்கு வேண்டுமானால் தீனியாகலாம்; ஆனால், அது கவைக்குதவாது என்பதைக் காலம் விரைவில் உணர்த்துவது உறுதி!

ஆர்.எஸ்.எஸ். வியூகம், மறுபடியும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் தோற்கப்போவது நிச்சயம்!

திராவிடம் வெல்லும்; வரலாறு அதனைச் சொல்லும்!

 கி.வீரமணி

 தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
28.5.2025    

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *