தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா? (4)

viduthalai
4 Min Read

தேவதாசிமுறை ஒழிப்பில் தந்தை பெரியார்

தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்ட திருமதி முத்துலட்சுமி மற்றும் மூவலூர் திருமதி இராமாமிர்தம் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இருவரும் இணைந்தே செயல் பட்டனர். இவ்விருவருக்கும் பக்கபலமாக இருந்தவர் அன்றைய அரசியலில் மிகவும் மக்களால் அறியப்பட்டவராகவும், பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த வருமான தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி) அவர்கள்.

தந்தை பெரியார் காந்தியாரோடு காங்கிரசில் இருந்து தொண்டாற்றியபோது திருமதி இராமாமிர்தமும் காங்கிரசில் இருந்துதான் தனது தேவதாசி முறை ஒழிப்புப் பணியைச் செய்து வந்தார். கி.பி.1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி, சுயமரியாதைக் கட்சி தொடங்கிய போதும் திருமதி இராமாமிர்தமும் அவருடனே கட்சியிலிருந்து வெளியேறித் தனது இலட்சிய நோக்கத்திற்கு ஆதரவளித்து வழிநடத்திய தந்தை பெரியாரோடு இணைந்து தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டார். அதைப் போன்றே சட்டமன்றத்தில் திருமதி முத்துலட்சுமி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசிமுறை ஒழிப்பு மசோதாவிற்கும் தந்தை பெரியார் தனது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், நல்கினார். அச்சட்ட மசோதாவை அரசு தந்தை பெரியாரிடம் அனுப்பி அவரது கருத்தினைக் கேட்டபோது அதற்குத் தனது ஆதரவை முழுமையாகத் தெரிவித்ததோடு அதைப் பற்றித் தனது நாளிதழான ‘குடிஅரசு’ என்பதில் வெளியிட்டுத் தனது ஆதரவையும், தேவதாசிமுறை ஒழிப்பைக் குறித்த முழு விவரத்தையும் அதில் தெளிவுபடுத்திக் காட்டினார். ‘கோயில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டுவதைத் தடுக்கச் சட்டம் செய்ய வேணுமாய்த் திருமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கிறார்கள் (Legal Depat.>G.O.42>11.03.1952) என்று தலையங்கச் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

‘பொது ஜனங்கள் எந்தவிதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவது ஒன்று முட்டாள் தனமாகவோ, அல்லது யோக்கியப் பொறுப்பற்ற தன்மையாகவோ தான் இருக்கவேண்டும்; ஏனெனில், இந்தச் சமூகத்தில் சுடவுள் பேரால், மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று   எந்தச் சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது மற்றபடி எந்தச் சமூகமாவது, இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்கவே வேண்டுமென்று கேட்பார்களேயானால், அவர்களைப் போல் சுயமரி யாதையற்றவர்களும், இழி குலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது. எந்தப் பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக்கலாம் என்று கருதி அதற்காகச் சுவாமியையும், மதத்தையும் உதவிக்கு உபயோகப்படுத்த நினைத்தால் அவர்களைப் போல, ஈனப் பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது. ஆகவே இந்தச் சட்டம், சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டியது, மிக்க அவசியமும், யோக்கியமுமான  காரியமாகும்” (‘குடிஅரசு’ –  23.03.1930) என்று தேவதாசிமுறை ஒழிப்பிற்கான தனது ஆதரவை ஒட்டுமொத்த ஆதரவாளர்களின் ஒற்றைக் குரலாய்த் தனது நாளிதழில் ஒலிக்கச் செய்தார். அத்தோடு முடித்துக் கொள்ளாமல், தொடர்ந்து அதற்கான ஆதரவைத் தந்தை பெரியார் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

தேவதாசி முறைக்கு ஆதரவாக, கருத்தளித்தோருக்கும் தனது எதிர்ப்பைத் தனது இதழில் பதிலடியாகக் கொடுத்து அடக்கியவர் தந்தை பெரியார் அவர்கள் ‘விபசாரம் ஒழுக்கக் கேடு தான் என்றாலும் அதை முற்றிலும் அழித்து விட்டால் அவர்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?’ என்ற ஆதரவாளர்களின் ஆதங்கத்திற்கு, ‘கோயில் தாசிகளுக்கும், ஊர் வேசிகளுக்கும் இவர்களின் தொழிலுக்கும் இப்படி இரக்கம் காண்பிக்கும் மகானை எவ்விதம் புகழ்வது என்பது தான் தெரியவில்லை’ (‘குடிஅரசு’ –  23.03.1930) என்று தெரிவித்திருந்தார்.

பெண் விடுதலையை முழுமூச்சாக ஆதரித்த செயல் வீரரான தந்தை பெரியார் அவர்கள் அவ்விடுதலைக்காகப் போராடும் எவரையும் ஊக்குவிக்கவும், ஆதரவளிக்கவும் தவறியதே இல்லை, அதிலும் தன் இனத்திற்காகத் தானே போராடும் பெண் போராளிகளைப் பெருமிதத்தோடு வழிநடத்தி வெற்றி இலக்கை அடைவதற்கான அனைத்து வழிமுறைகளையும் காட்டினார்; திருமதி முத்துலட்சுமி அவர்கள். தேவதாசி ஒழிப்பு மசோதாவைச் சட்டசபையில் சமர்ப்பித்த போதும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் அதற்கு எதிராக எழுந்த எதிர்வினைகளை எதிர்கொள்ள பக்கபலமாக இருந்தார்.

எது தேவதாசி குலம்?

முத்துலட்சுமி அவர்களையும், அவர்தம் சட்ட மசோதாவையும் குறை கூறி இழிவுபடுத்தும் நோக்குடன் அன்றைய சுதேசமித்திரன்  நாளிதழில் எழுதப்பட்டிருந்த கருத்துக்களுக்கு தந்தை பெரியார் தனது ‘குடியரசு’ இதழில் சரியான விளக்கமளித்து இடித்துரைத்திருந்தார். ‘தேவதாசி குலம்’ என்பதன் தவறான புரிதலைத் தமது அறிவார்ந்த பதிலால் தெளிவுபடுத்தினார். ‘தேவதாசி’ மசோதா எதிர்ப்பில்லாமல் நிறைவேறிவிட்டது. இதை அழிக்கவோ, இதற்குப் பதில் சொல்லவோ வேறு மார்க்கம் இல்லாததால், ‘சுதேசமித்திரன்’ தனது ஆத்திரத்தைக் காட்டிக் கொள்வதற்கு, அந்த அம்மையாரைக் கேவலப்படுத்தக் கருதித் தனது அயோக்கியத்தனத்தைக் காட்டியிருக்கிறது. அதாவது 02.02.1929 தேதி ‘மித்திரன்’ தலையங்கத்தில் ‘தேவதாசி சட்டம்’ என்று பெயர் கொடுத்து மனதில் கேலியாக நினைத்துக் கொண்டு எழுதியதாவது ‘டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் தாம் பிறந்த குலத்திற்குப் பெரிய உபகாரத்தைச் செய்துவிட்டார் என்றும், அது என்ன குலம் என்று தெரிவதற்காக அடுத்த வார்த்தையாகவே ‘தேவதாசி’ என்று சொல்லப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.மசோதா நிறைவேற்றப்பட்டதற்குச் சாதகமோ, பாதகமோ சொல்ல வேண்டியிருந்தால், திருமதி முத்துலட்சுமி அம்மாள் தேவதாசிக்குலம் என்றும் சொல்ல வேண்டிய அவசியமென்ன என்பது எமக்கு விளங்கவில்லை இது, வேண்டுமென்றே அந்த அம்மையாரைப் பொது ஜனங்கள் முன்னால் தப்பாய்க் காட்டவேண்டும் என்பதைத் தவிர, வேறு என்ன எண்ணத்தோடிருக்க முடியும்? தேவதாசிகள் என்று ஒரு கூட்டம் பெண்கள் இருக்கின்றார்களே ஒழிய, தேவதாசிகுலம் என்று ஒருகுலம் இருக்கின்றதா? என்று கேட்கின்றாய். ஒரு வீட்டில் பிறந்த சகோதரிகள் இருவரில் ஒருவர் கோயிலுக்கு விடப்பட்டு மற்றவர் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், கல்யாணம் செய்து கொடுக்கப் பட்டவர் தேவதாசி குலத்தைச் சார்ந்தவரா? அது போலவே ஒரு தேவதாசி தன் மகளைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தாலும், அந்த மகள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களா? இந்த வித்தியாசம் ‘மித்திரனுக்குத்’ தெரியாமல் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்’ (‘குடிஅரசு’ –  10.02.1929 பக்.6.15) என்று விளக்கமளித்திருக்கிறார். தேவதாசி முறை ஒழிப்பில் தந்தை பெரியாரின் பங்கு மறக்க முடியாதது.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *