இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாகும்.
இதுவரை நகை மதிப்பில் 80% வரை கடனாக வழங்கப்பட்டு வந்தது. இனி, 75% மட்டுமே வழங்கப்படும். அதாவது, ரூ.100 மதிப்புள்ள நகைக்கு ரூ.75 மட்டுமே கடனாகப் பெற முடியும். கோவிட்-19 காலகட்டத்தில் தற்காலிகமாக 80% ஆக உயர்த்தப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டுவிட்டது.
நகை அடமானம் வைக்கும்போது, அந்த நகை தன்னுடையதுதான் என்பதற்கு உரிய ஆதாரங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். நகை வாங்கிய ரசீது இல்லாத பட்சத்தில், நகை தன்னுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வங்கியிடம் அளிக்க வேண்டும் அல்லது ஆடிட்டர் போன்றவர்களிடம் உறுதிமொழிப் பத்திரம் பெற்று சமர்ப்பிக்கலாம்.
அடமானம் வைக்கப்படும் நகையின் தரம் மற்றும் தூய்மை குறித்து வங்கி ஒரு சான்றிதழை வழங்க வேண்டும். அதில் வங்கியும், கடன் பெறுபவரும் கையொப்பமிட வேண்டும்.
தனி நபர்கள் அதிகபட்சமாக 1 கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
தங்கக் காசுகளாக அடமானம் வைத்தால், அது 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வங்கிகளால் விற்கப்படும் தங்கக் காசுகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தங்கக் காசுகளுக்கு நகைக் கடன் கிடையாது.
999 தரத்திலான வெள்ளி நகைகளையும் அடமானம் வைக்க முடியும்.
விரிவான கடன் ஒப்பந்தங்கள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன. இதில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் முழு விவரங்கள், ஏல நடைமுறைகள், அறிவிப்பு காலங்கள், திருப்பிச் செலுத்தும் காலக்கெடு மற்றும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
தங்கக் கடனை முழுமையாக அடைத்தால்தான் புதிய கடன் வழங்கப்படும்.
கடனை முழுமையாகச் செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் அடமான நகையை வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஒரு நாளைக்கு ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.
கடன் பெறுபவரின் திருப்பிச் செலுத்தும் திறனை வங்கிகள் இனி ஆராயும்.
வருமான ஆதாரம் இல்லாமல் கடன் வழங்கப்பட மாட்டாது.
தங்க நகைக் கடனை ஒரே நேரத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது – என்றெல்லாம் சகட்டு மேனிக்கு நிபந்தனைகளை வாரி இணைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
முன்பு கிடைத்த தொகையை விட குறைவான கடனே கிடைக்கும் என்பதால், அவசரத் தேவைகளுக்குப் போதுமான நிதி கிடைக்காமல் திண்டாடும் சூழல். நகை வாங்கியதற்கான ரசீது, உரிமைச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கேட்பது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, திருமணங்களில் பரிசாகப் பெறும் நகைகளுக்கு ரசீதுகள் இருப்பதில்லை. மேலும் நடைமுறை சாத்தியமில்லாத இந்த நிபந்தனைகளை உடனே நீக்க வேண்டும்.
வங்கிகளில் கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் அதிக வட்டிக்குக் கடன் வழங்கும் தனியார் அடகு கடைகளை குறிப்பாக மார்வாடி கடைகளை நாடும் நிலைக்குத் தள்ளப்படுவர்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு நகைக் கடனை பெரிதும் நம்பியிருப்பதால், இந்தப் புதிய விதிகள் அவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
கடனை முழுமையாகச் செலுத்தாமல் மறு அடகு வைக்க முடியாது என்பதால், தொடர்ச்சியான நிதிச் சிக்கல்கள் ஏற்படும் புதிய விதிமுறைகளை செயல்படுத்துவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நிர்வாகச் சுமையை அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய விதிமுறைகள், பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர பிரிவினருக்கு உடனடி நிதித் தேவைகளை நிறை வேற்றுவதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும், பொது மக்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒன்றிய பிஜேபி அரசின் கவலைகள் எல்லாம் அதானி, அம்பானி வகையறாக்களின்மீது தானே தவிர ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீதல்ல என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டுதான் ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய நிபந்தனைகள்!