‘‘எப்பாத் துறைக்கும் இவனோர் பழம் புலவன்
ஆப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற முப்பால்பா
நூலறிவு நூறு புலவர்கள் சேரினியன்
காலறிவு காணார் கனிந்து”
– பாவேந்தர் பாரதிதாசன்.
பன்மொழிப்புலவர் அப்பாத் துரை ஹிந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு’ எழுதி தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்ட தாரியானார். சைதாப் பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல் லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.
திருநெல்வேலி, ‘மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி ‘யில் 1937 முதல் 1939 முடிய ஹிந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’-குருகுலப் பள்ளியில் அப்பாத்துரையார் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது மாணவராயிருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். நடுவண் அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார். அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் வேலை இழந்தார்.
‘திராவிடன்’, ‘ஜஸ்டின்’, ‘இந்தியா’, ‘பாரததேவி’, ‘சினிமா உலகம்’, ‘லிபரேட்டர்’, ‘விடுதலை’, ‘லோகோ பகாரி’, ‘தாருஸ் இஸ்லாம்’, ‘குமரன்’, ‘தென்றல்’ முதலிய இதழ்களில் இவரது பணி தொடர்ந்தது.
தமிழ்நாட்டில் ஹிந்திமொழி கட்டாயபாடமாகத் திணிக்கப்பட்ட பொழுது 1938-1939 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த போரில் பங்கு கொண்டார். தந்தை பெரியார் தலைமையில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும் பங்கு கொண்டனர். திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூற்களில் அளித்துள்ளார்.
‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, “இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்” என்று விதந்துரைத்துள்ளார்!
“பெரியார் விருது” பெற்ற
திரைக் கலைஞர் ஆச்சி மனோரமா பிறந்த நாள் இன்று (26.5.1943)
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். இந்தியத் திரைப் படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர்
என்.டி.ஆர் என அய்வருடன் நடித்த பெருமைக் குரியவர்.
தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது. அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “பெரியார்” என்ற திரைப்படத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு அம்மா வாக நடித்து திரைப்படத்திற்கு சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் “பெரியார் விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம சிறீ விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்த நாளில் அவரை போற்றி புகழ்வோம்.