இவர் அல்லவோ தந்தை பெரியாரின் (பெருந்) தொண்டர்…

viduthalai
2 Min Read

தந்தை பெரியார் காலம் தொட்டு, தன் வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்து பெரியார் கொள்கையை பின்பற்றி, மக்களிடையே அவர் கொள்கையை பரப்பி இன்றளவும், அவர் கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டு, இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும்  பெரியார் பெருந்தொண்டர்  மாவட்ட காப்பாளர்  சோலையார்பேட்டை நரசிம்மன் 20.05.2025 அன்று தனது  89ஆவது ஆண்டு பிறந்தநாளில் அடி எடுத்து வைத்தார். அதையொட்டி அவர் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கி மகிழ்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின் போது தொடர்ந்து நிதி வழங்கி வருகிறார். மாவட்ட இயக்கப் பணிகளுக்கும் அவ்வப்போது நிதி உதவி செய்து வருகிறார்.

இந்த முதிர்ந்த வயதிலும்  உடலில் பல உபாதைகள் இருந்த நிலையிலும் திருப்பத்தூரில் ஆசிரியர் ஆணைக்கிணங்க  தேசியக் கல்வி கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து 20.05.2025 அன்று தன் பிறந்தநாளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தனது கணீர் குரலில் கண்டன முழக்கங்களை எழுப்பி, நான் உயிருடன் இருக்கும் வரை போராட்ட களத்தில் நிற்பேன் என்று உறுதியுடன் நின்றார்.

இவருடைய கொள்கைப் பற்று உண்மையிலேயே அங்கு இருந்த மாணவர் கழகத் தோழர்கள் மற்றும் மகளிரணி தோழர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இவர்  இதுபோன்று சோலையார்பேட்டையில் ரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதும், பணி ஓய்விற்கும் பிறகும் இது நாள் வரை நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.

குறிப்பாக நீதிபதிகள் கொடும்பாவிகள் எரிப்பு சம்பவம் காரணமாக  ஆசிரியர் கி. வீரமணி, மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனுடன் 15 நாட்கள்  வேலூரில் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை ப் போன்ற கொள்கை உறுதி உள்ள, உடல் தளர்ந்தாலும், உள்ளத்தில் இளமையின் எழுச்சியோடு கொள்கை துடிப்புடன் இருக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை தந்தைபெரியார் கொள்கையை  யாராலும் வீழ்த்த முடியாது.

இவருக்கு  திருப்பத்தூர் மாவட்ட தலைவர்
கே.சி.எழிலரசன் தலைமையில் தோழர்கள் திருப்பத்தூர் மாவட்ட அலுவலகத்தில்  சிறப்பு செய்து மகிழ்ந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *