புதுடில்லி, மே 25– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.
புதுடில்லியில் நேற்று (24.5.2025) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
உட்கட்டமைப்பு மேம்பாடு
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களான –கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், சென்னையின் பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பினை (MRTS) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வசம் ஒப்படைத்தல், தேசிய நெடுஞ்சாலையின் (NH32) செங்கல்பட்டு – திண்டிவனம் பகுதியை ஆறு/எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துதல், கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாகவும்;
சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதி விடுவிப்பு குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஜாதி பட்டியலில் “N” மற்றும் “A” என முடிவடையும் பெயர்களை “R’’என மாற்றக் கோரியும், ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்களை சேர்ப்பது குறித்தும், ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்களை சேர்ப்பது குறித்தும்,
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவித்து இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் கோரிக்கை மனு அளித்தார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
1.தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு
மேம்பாட்டுத் திட்டங்கள்
மேம்பாட்டுத் திட்டங்கள்
- கோயம்புத்தூர் மற்றும் மதுரைமெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம், கலை பண்பாட்டிற்கு தலைநகராக விளங்கும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கேற்ப, செயல்திறன்மிக்க பொது போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகிறது. இதன் அடிப்படையில், மெட்ரோ ரயில் திட்டத்தினை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPRs) தயாரித்துள்ளது.
துரிதப் போக்குவரத்து
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி, 50:50 சம பங்களிப்பு அடிப்படையில் ஒன்றிய அரசின் நிதியுதவி வேண்டி, இத்திட்டங்களை ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்திட பரிந்துரைத்துள்ளது. கட்டி முடிப்பதற்கான மதிப்பீடப்பட்டிருக்கும் செலவினமாவது கோயம்புத்தூருக்கு 34.8 கி.மீ.க்கு ரூ.10,740.49 கோடி மற்றும் மதுரைக்கு 32 கி.மீ.க்கு ரூ.11,368.35 கோடி ஆகும்.
மெட்ரோ ரயில் கொள்கை–2017 இன் படி, ஒன்றிய அரசும் மற்றும் தமிழ்நாடு அரசும், 50:50 சம பங்களிப்பு அடிப்படையில், இரு திட்டங்களையும் இணைந்து செயல்படுத்துவதற்கான, ஒப்புதலையும் நிதியுதவியையும், விரைவில் வழங்கிட, ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டார்.
- சென்னையின் பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பினை (MRTS) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வசம் ஒப்படைத்தல்.
சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி நிலையம் வரையிலான, பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பு (MRTS), தென்னக ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மக்கள், பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பின் (MRTS) சேவைகளை மெட்ரோ ரயில் தர அளவில் பெற்று பயனடையும் வகையில், இவ்வமைப்பினை மேம்படுத்தவும் மற்றும் இயக்கிடவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வசம் ஒப்படைத்திட கோரும் செயற்குறிப்பினை தமிழ்நாடு அரசு ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
எனவே, பொது நலன் கருதி, பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பினை (MRTS), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வசம் விரைவில் மாற்றுவதற்கான உரிய ஏற்பாட்டினை மேற்கொள்ள பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.
- தேசிய நெடுஞ்சாலையின் (NH32) செங்கல்பட்டு – திண்டிவனம்பகுதியை ஆறு/எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
எட்டு வழிச்சாலை
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையானது மாநிலத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையின் (NH–32) நகர்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகள், விழாக் காலங்கள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் போது பெரும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றன. ஏற்கனவே நான்கு வழிச்சாலையின் அதிகபட்ச கொள்ளளவான 60,000 வாகன அலகை தாண்டிவிட்டதால், இந்த தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை உடனடியாக ஆறு/எட்டு வழிச்சாலையாக அகலப்படுத்திட வேண்டியுள்ளது.
அதிக விபத்து நிகழும் பகுதிகளை கொண்டுள்ள இந்த செங்கல்பட்டு– திண்டிவனம் பகுதி தேசிய நெடுஞ்சாலை NH–32 ல் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த சாலைப் பகுதியை எட்டு வழிப்பாதையாக மாற்றுவதுசாலை விபத்துக்கள் / உயிரிழப்புகளைக் குறைக்க வழிவகுக்கும். இச்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
எனவே, செங்கல்பட்டு – திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் (NH32) பகுதியை ஆறு/எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துவதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.
- கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்
விமான நிலைய விரிவாக்கம்
கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக 637.49 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது. இதுவரை, 601.48 ஏக்கர் நிலங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) விமான நிலைய விரிவாக்கப் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்கான பெருந்திட்டத்தைஇந்திய விமான நிலைய ஆணையம் (AAI)விரைந்து முடித்து மாநில அரசிற்கு வழங்க வேண்டும். மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விமான போக்குவரத்து சந்தை தேவைகளை கருத்தில் கொண்டு, கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளிருந்து விமான நிறுவனங்களின் சேவைகளைஇவ்விமான நிலையத்திலிருந்து தற்போதைய வசதிகளுடன் அதிகளவில் செயல்பட அனுமதிக்க வேண்டும். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. எனவே பிரத்தியேகமான பன்னாட்டு சரக்குகளை கையாளும் விமான சேவைகளை இவ்விமான நிலையத்தில் தொடங்குவது மிகவும் அவசியமாகும்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.23 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது. இதில், 521.56 ஏக்கர் நிலங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தினை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என மாநில அரசு ஒன்றிய அரசிடம் கோரியுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனை
- கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கோரிக்கை
மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில், கோயம்புத்தூரில், ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் பட்சத்தில், இப்பகுதியில் வாழும் மக்களுக்கு பேருதவியாக அமையும்.
எனவே, கோயம்புத்தூரில் ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கிடுமாறு பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டதோடு, கோயம்புத்தூரில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தேவையான நிலம் தமிழ்நாடு அரசு வழங்க தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்தார்.
2 . சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான
நிதி விடுவிப்பு
நிதி விடுவிப்பு
2024–2025 நிதியாண்டிற்கான சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான ஒன்றிய அரசு திட்ட ஏற்பளிப்புக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி தமிழ்நாடு அரசுக்கு இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் பள்ளிக் கல்வித் துறையின் மிக முக்கியமான செயல்பாடுகளான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஈட்டளிப்புகள் வழங்குதல் மற்றும் ஆசிரியர் ஊதியம் வழங்குதல் ஆகியவற்றினை நடைமுறைப்படுத்துவதின் மீது எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2024–2025ஆம் ஆண்டிற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட ஒதுக்கீடு ரூ. 4305.66 கோடியாகும். இதில் ஒன்றிய அரசின் 60 சதவீத பங்காக ரூ. 2151.59 கோடி வழங்கப்பட வேண்டிய நிலையில், இது நாள் வரை அத்தொகை விடுவிக்கப்படவில்லை. 2025–2026ஆம் ஆண்டிற்காக, திட்ட ஏற்பளிப்புக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ. 2733.57 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் 60 சதவீத பங்கு தொகையான ரூ.1640.14 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான முதல் தவணை நிதி விடுவிப்புக்கான கோரிக்கை ஒன்றிய அரசுக்கு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி விடுவிப்பு
இந்த நிதி விடுவிக்காமைக்கான காரணமாக PM SHRI திட்டத்தின் கீழ் மாநிலங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதே ஆகும்.
குறிப்பாக மும்மொழிக் கொள்கையை (Clause 4.12) கட்டாயமாக்குவது குறித்து தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பாரம்பரியமாக இருமொழிக் கொள்கையினை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றி வருகின்றது. இது மாநிலத்தின் மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், மாணவர்கள் உலகளாவிய மொழிகளில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
எனவே, 43,94,906 மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, PM SHRI திட்டப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை வலியுறுத்தாமல், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டக் கூறுகளுக்கு ஒன்றிய அரசின் நிதியை உடனடியாக விடுவிக்க பிரதமர்அவர்கள் நேரடியாகத் தலையிட்டு நிதியினை உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஜாதிப் பட்டியலில் “N” மற்றும் “A” என முடிவடையும் பெயர்களை “R’’என மாற்றக் கோருதல்
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அய்ந்தில் ஒரு பங்காக (1/5) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் உள்ளனர், தமிழ்நாட்டின் ஜாதிப் பெயர் பட்டியலில் 76 ஆதிதிராவிடர் ஜாதிப் பெயர்களும், 37 வகையான பழங்குடியினர் ஜாதிப் பெயர்களும், அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஜாதிப் பெயரில் இறுதி எழுத்து “N” மற்றும் “A” என முடிவதால், ஜாதிப் பெயரை ஒருமையுடன் குறிப்பிடுவதாக இருப்பதாகவும் எனவே சமூகத்தில் உரித்த பெருமை கிடைக்கப் பெறவில்லை என கூறி “N” மற்றும் “A” என்பதற்குப் பதிலாக “R” என பெயர் மாற்றம் செய்து தங்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்தவண்ணம் உள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்காணும் ஜாதிகளில் உரிய பெயர் மாற்றம் செய்ய சட்டமியற்றுமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ஜாதிப் பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் “N” மற்றும் “A” என்பதற்குப் பதிலாக “R” என பெயர் மாற்றம் செய்து மக்களுக்கு உரிய மரியாதையை கிடைக்க வழி செய்யும் வண்ணம் உரிய சட்டம் இயற்ற, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களை சேர்த்தல்
அரசியலமைப்பு (Scheduled Castes) ஆணை, 1950 அரசியலமைப்பு (Scheduled Castes) மாற்ற ஆணை, 1956 மற்றும் அரசியலமைப்பு (Scheduled Castes) ஆணை திருத்தச் சட்டம், 1990–இன்படி, இந்து அல்லது சீக்கிய அல்லது பவுத்த மதத்திலிருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும் ஆதிதிராவிடர் ஜாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
சமூக நீதி
ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் சலுகைகளை கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்துவதன் மூலம் சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக 19.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின்கீழ் ஆதிதிராவிடர் ஜாதியினருக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை விரிவுபடுத்துவதற்கும், கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் ஜாதியினருக்கும், அனைத்து நிலைகளிலும் சமூக நீதியின் நன்மைகளைப் பெறுவதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்குத் தேவையான சட்டத்தை இயற்றுமாறு பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.
மீனவர் உரிமை
- இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காணுதல்.
அண்மைக் காலமாக, இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர்ச்சியான கைதுகள் மாநிலத்தில் உள்ள ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக, இந்திய அரசின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, பல கடிதங்கள் எழுதியுள்ளதாகவும், இராஜதந்திர வழிமுறைகளில் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இலங்கையால், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது, இது மீனவர் சமூகத்தினரிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்சினைக்கு பிரதமரின் தனிப்பட்ட தலையீடு மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.