சென்னை, மே 25- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 55 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 20 ஆயிரத்து 600 இடங்கள் உள்ளன. இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான மூன்றாண்டு கால பட்டய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
மே 23ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்த முள்ள 20 ஆயிரத்து 600 இடங்களில் 11 ஆயிரத்து 140 பேர் மட்டுமே விண்ணப் பித்து இருந்தனர்.
கடந்த ஆண்டு பாலி டெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனால் பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை பெற்று அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவ தாகவும், 10ஆம் வகுப்பிற்கு பிறகு இடைநின்ற மாண வர்களின் விவரங் களை சேகரித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் சேர கால அவகாசம் 23.5.2025 அன்று நிறைவடைந்தது. இந்நிலையில் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.