சென்னை, மே 25- ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டபிரதம மந்திரியின் பயிற்சித் திட்டத்தில் பயன் பெறுபவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
நாடு முழுவதும் படித்து முடிக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒன்றிய அரசு பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தை (பி.எம். இன்டர்ன்ஷிப் ஸ்கீம்) கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
இந்த பயிற்சித் திட்டத்தின் கால அளவு 12 மாதங்கள் ஆகும். அவ்வாறு 12 மாதங்கள் பயிற்சி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாகவும், ஒரு முறை மானிய உதவியாக ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதாவது, இந்ததிட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவருக்கு 12 மாதங்களில் ரூ.66 ஆயிரம் கிடைக்கும்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி நாடாக உருவாக்கிட வேண்டும் என்ற முயற்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
2ஆம் கட்ட விண்ணப்பப் பதிவு
இந்த திட்டத்தில் முதற் கட்டமாக சேருவதற்கான இணைய வழி (ஆன்லைன்) விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 745 மாவட்டங்களில் 25 வேலை வாய்ப்பு துறைகளில் 280 நிறுவனங்கள் பங்கேற்று ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயிற்சித் திட்டங்களை வழங்கியது. அவற்றில் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 2ஆம் கட்ட விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 735 மாவட்டங்களில் 24 வேலைவாய்ப்பு துறைகளில் 327 நிறுவனங்கள் கலந்து கொண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 158 பயிற்சித் திட்டங்களை வழங்கி உள்ளதாக பிரதம மந்திரி பயிற்சித் திட்ட இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலிடம்
இந்த ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 158 பேரில், தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகம் பேர் பயன் அடைந்து இருக்கின்றனர். அதாவது, 15 ஆயிரத்து 785 பேருடன் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கையில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, அய்டிஅய், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகளும் அடங்குவார்கள்.
தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து 15,187 பேர் பயன் பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் 11,672 பேரும், கருநாடகாவில் 9,928 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7,714 பேரும், அரியானாவில் 5,646 பேரும், தெலங்கானாவில் 5,357 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 5,229 பேரும் பயன் அடைந்துள்ளனர்.