சென்னை, மே 25- தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால படிப்பிற்கான முயற்சிகளை எடுக்கிறார்களா? அடுத்த கட்ட திட்டங்களை மேற்கொள்கிறார்களா? என்று தமிழ்நாடு அரசு சார்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை பெரும்பாக்கத்தில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்லூரிப் படிப்பிற்கு உதவும் வகையில், வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கும் பணிகளை தாம்பரம் மாநகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை வலியுறுத்தி விண்ணப்பிக்க வைத்தும், விண்ணப்பித்த மாணவர்கள் எந்தக் கல்லூரியில் சேர விரும்புகிறார்களோ அந்தக் கல்லூரியில் காவல்துறை சார்பில் ஒரு சீட் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதேபோல் தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த மாணவ, மாணவியர் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகம் சார்பாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நம்பிக்கை
சமீபத்தில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சத்தமின்றி பெரிய புரட்சி ஒன்று நடந்து உள்ளது. கல்வி என்று வந்துவிட்டாலே தமிழ்நாட்டை அடித்துக்கொள்ள முடியாது என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர். 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3.57 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் தேர்ச்சி விகிதம் – 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சத்தமின்றி புரட்சி
தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96 சதவீதத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு
2021-2022 கல்வியாண்டில் ஆண்டில் 84 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2024-2025இல் 96 சதவீதமாக உயர்வு. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-2022இல், 78 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2023-2024இல் 92 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு நேரடியாக சென்று மாணவர்களை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தேர்ச்சி விகிதம் புதிய உச்சம் தொட்டுள்ளது.